under review

குலசேகர ஆழ்வார்

From Tamil Wiki
குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்- நூல்

குலசேகர ஆழ்வார் (பொ.யு.எட்டாம் நூற்றாண்டு) தமிழ் வைணவ மரபின் ஞானாசிரியர்களான பன்னிரு கவிஞர்களில் ஒருவர்.நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில் ஒரு பகுதியை பாடியவர். சேரநாட்டைச் சேர்ந்தவர். அரசகுடியினர்.

பிறப்பு, கல்வி

குலசேகர ஆழ்வார் தமிழ் பக்தி இயக்கத்தின் ஆளுமை. வைணவ மெய்ஞானிகளும் கவிஞர்களுமான பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். குலசேகர ஆழ்வார் பொ.யு.எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கேரளத்தில் எர்ணாகுளம் அருகே கொடுங்கல்லூர் (கொடுங்கோளூர்) ஆலயத்திற்கு அண்மையில் உள்ள திருவஞ்சைக்களம் அல்லது திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் அப்பகுதியை ஆட்சி செய்து வந்த திடவிரதன் என்னும் மன்னனின் மகனாகப் பிறந்தார். அவர் பெருமாளின் மார்புமணியாந கௌஸ்துபத்தின் வடிவம் என தொன்மங்கள் சொல்கின்றன.

தன் பெயரை பாடல்களில் குலசேகரன் என குலசேகர ஆழ்வார் குறிப்பிடுகிறார். "கொங்கர்கோன் குலசேகரன்’ ’’கொல்லி நகர்க்கிறை கூடற்கோமான் குலசேகரன்’ ‘கொல்லிக் காவலன் கூடல்நாயகன் கோழிக்கோன் குலசேகரன்’ ‘கொல்நவிலும் கூர்வேல் குலசேகரன்’ ’கொற்றவேல் தானை குலசேகரன்’ போன்ற சொற்கள் அவர் தன்னை குறிக்க பயன்படுத்தியவை.

ஆனால் சேரர்களின் குடிப்பெயரான கோதை, வில்லவன், வானவன், குட்டுவன் போன்ற பெயர்களால் குலசேகர ஆழ்வார் தன்னை சொல்லிக்கொள்ளவில்லை. ஆகவே அவர் சேர மன்னரல்ல, சேரர்குடியில் வந்தவராகவே இருக்கவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இராமானுஜர் பாடிய 'இன்னமுதம் ஊட்டுகேன்' என்னும் தனியன் அவரை சேரலர்கோன் என குறிப்பிடுகிறது. மணக்கால் நம்பி பாடிய 'ஆரங்கெட' என்னும் தனியன் ‘சேரன் குலசேகரன்’ ‘முடிவேந்தர் சிகாமணி’ என குலசேகர ஆழ்வாரைக் குறிப்பிடுகிறது. ஆகவே அவர் மன்னராக இருந்தவரே என்றும் வாதிடப்படுகிறது.

ஆழ்வார் வரலாறுகளின் படி கலிபிறந்த இருபத்தெட்டாம் ஆண்டு பராபவ வருஷத்து மாசி மாதம் சுக்லபட்சத்து துவாதசியும் வெள்ளிக்கிழமையும் கூடிய நன்னாளில், புனர்வசு (புனர்பூசம்) நட்சத்திரத்தில் பிறந்தார்.

தொன்மங்கள்

அ. குலசேகர ஆழ்வார் வைணவர்கள்மேல் பற்றுக்கொண்டு ஆட்சிப்பொறுப்பை சரியாகக் கவனிக்கவில்லை என எண்ணிய அவருடைய அமைச்சர்கள் அந்த வைணவர்கள்மேல் திருட்டுப்பழி சுமத்தினர். அதைக்கேட்ட ஆழ்வார் விஷநாகங்கள் நிறைந்த கூடையில் கைவிட்டு ஆழ்வார்கள் பிழை செய்திருந்தால் தன்னை நாகம் தீண்டுக என சூளுரைத்தார். நாகங்கள் அவரை தீண்டவில்லை. வைணவர்கள் மேல் சுமத்தப்பட்ட பழி நீங்கியது.

ஆ. குலசேகர ஆழ்வார் ராமாயணப் புராணக்கதையை கேட்டுக்கொண்டிருந்தபோது ராமன் தனியாக காடுசென்றான் என்று கதைசொல்பவர் சொல்லக்கேட்டு, தன்னிலை மறந்து சீற்றம்கொண்டு ராமனுக்குத் துணையாகத் தன் படைகள் போருக்குக் கிளம்பும்படி ஆணையிட்டார். அதை உணர்ந்த கதைசொல்லி உடனே ராமன் தனியாகவே ராவணனை வென்றான் என்று சொல்லி அவரை உலகப்பிரக்ஞையை அடையும்படிச் செய்தார்.

இ. குலசேகர ஆழ்வார் தன் பக்தி நிலையை விளக்கும்பொருட்டு அவருடைய பெருமாள் திருமொழி நூலில் பாடிய

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோவிலின் வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துநின் பவளவாய் காண்பேனே

என்ற பாடலில் தன்னை திருவரங்கம் பெருமாள்கோயிலின் படியாக முன்வைத்தமையால் கருவறை முன்பு இருக்கும் படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் உள்ளது.

காலம்

இலக்கியச் சான்றுகள்

பொதுவாக ஆழ்வார்களின் காலம் என்பது பொ.யு. 700 முதல் பொ.யு. 900 வரை என்பது எஸ். வையாபுரிப் பிள்ளை, மு. அருணாசலம் ஆகியோரின் கருத்து. சேரநாட்டை ஆட்சி செய்த பெருமாள்களில் இறுதியாக ஆட்சி செய்த சேரமான் பெருமாள் நாயனாரின் காலம் பொ.யு. 820 முதல் 844 வரை என ஆய்வாளர் இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை ஊகிக்கிறார். சைவ நாயன்மார்களில் சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் சமகாலத்தவர். குலசேகரப்பெருமாள் சேரமான் பெருமாளுக்கு முன்னர் ஆட்சி செய்தவர், இக்கருத்தை வலியுறுத்தும் மு. இராகவையங்கார்

நீரின் மலிந்த கடல் அகழி நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம் அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த குடை நிழல் மேல் கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
தாரின் மலிந்த புயத்து அரசன் தரணி நீத்துத் தவம் சார்ந்தான்

என்னும் பெரிய புராணப்பாடலை உதாரணம் காட்டுகிறார். இப்பாடலில் சேரமான் பெருமாளுக்கு முன் நாடாண்ட பொறையன் என்னும் ஓர் அரசன் அரசு நீத்து துறவியானான் என்று இந்த பாடல் குறிக்கிறது. அது குலசேகர ஆழ்வாரைத்தான் கூறுகிறது என இராகவையங்கார் குறிப்பிடுகிறார். இதில் குலசேகரர் பொறையர் என குறிப்பிடப்படுவதும் கவனத்திற்குரியது. சேர மன்னர்களில் கொங்குநாடு, கொல்லிநாடு ஆகியவற்றை ஆட்சி செய்தவர்கள் பொறையர் எனப்பட்டனர். குலசேகரர் தன்னை கொங்கர்கோன் என்றே குறிப்பிடுகிறார். இச்சான்றுகளைக் கொண்டு குலசேகர ஆழ்வாரின் காலம் பொ.யு. 8 -ஆம் நூற்றாண்டு என முடிவுசெய்யப்படுகிறது

மூவர்

குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகிய மூவரும் சமகாலத்தவர் என மு.இராகவையங்கார் கருதுகிறார். திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் கோயிலின் மதிலையும் சிகரங்களையும் கட்டுவித்த போது தொண்டரடிப்பொடியாழ்வார் அங்கே தொண்டு செய்துவந்தார் என குருபரம்பரை நூல்கள் சொல்கின்றன. ஆழ்வார்களின் காலம் பற்றி ஆய்வுசெய்த என். குலசேகரன் குலசேகரப்பெருமாளின் காலம் பொ.யு. 750 முதல் 817 என வகுத்துரைக்கிறார்

பெருமாள்கள்

கேரள வரலாற்றாசிரியரான இளங்குளம் கிருஷ்ணபிள்ளை வடகேரளத்தில் சோழர் ஆட்சி உருவாவதற்கு முன்னர் பெருமாள்களின் ஆட்சி இருந்தது என்றும் ஏறத்தாழ இருநூறாண்டுக்காலம் அவ்வாட்சி நீண்டது என்றும் குறிப்பிடுகிறார். கேரளோல்பத்தி என்னும் தொல்வரலாற்று நூலில் கேரளநிலம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆட்சிசெய்யப்பட்டது என்றும், அதில் மையக்கேரளத்தை ஆட்சிசெய்தவர்கள் பெருமாள்கள் என்றும் குறிப்பிடப்படுவதை இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை ஆதாரமாகக் கொள்கிறார். ஓ.கே.நம்பியார் அவருடைய The Last of the PerumaLs என்னும் நூலில் இதை குறிப்பிட்டு குலசேகர ஆழ்வார் அக்காலத்தையவர் என ஊகிக்கிறார். குலசேகர ஆழ்வாரின் பெயருடன் பெருமாள் என்னும் பட்டம் இடம்பெறுகிறது. ராமானுஜர் பாடிய தனியன் ஒன்றில் ‘தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்’ என்று அவரை குறிப்பிடுகிறார். திவ்விய பிரபந்த தனியன்களுக்கு உரை எழுதிய பிள்ளைலோகாச்சாரியார் ‘ராஜாவான ஸ்ரீ குலசேகரப்பெருமாளிடத்திலே’ என்று குறிப்பிடுகிறார்.

தனிவாழ்க்கை

குலசேகர ஆழ்வார் சேரபாண்டிய நாடுகளை வென்று கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழிக்கோன் குலசேகரன் ஆகிய பட்டங்களைப் பெற்றதாக தொன்மங்கள் சொல்கின்றன. பாண்டிய மன்னனின் மகளை மணந்து இளா என்னும் மகளையும் திடவிரதன் என்னும் மகனையும் பெற்றார். வைணவ பக்தியில் ஈடுபட்டமையால் அரசு துறந்து தன் மகன் திடவிரதனுக்கு முடிசூட்டிவிட்டு திருவரங்கம் சென்றார். இளா என்னும் மகளை திருவரங்கம் பெருமாளுக்கு அடியாராக ஆக்கினார். இளாவின் இன்னொரு பெயர் சேரகுலவல்லி. அவர் சேர அரசகுடியில் மணமுடித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆன்மிக வாழ்க்கை

குலசேகர ஆழ்வாருக்கு சேனை முதலியார் என்பவர் வைணவதரிசனத்தைச் சொல்லி அவரை வைணவராக ஆக்கினார். முடிதுறந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கே சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர் திருப்பதி, அயோத்தி, சிதம்பரம் (தில்லைத் திருச்சித்திரகூடம்) திருக்கண்ணபுரம், அழகர்கோயில், திருவித்துவக்கோடு போன்ற ஆலயங்களுக்குச் சென்று திருமாலைப் போற்றிப் பாடினார்.

மங்களாசாசனம் செய்த ஆலயங்கள்

தனியாக-

 • திருவித்துவக்கோடு

திருமங்கை ஆழ்வாருடன் இணைந்து-

 • திருச்சித்திரகூடம் (அருள்மிகு கோவிந்த ராஜ பெருமாள் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்)
 • திருவாழித் திருநகரி, (அருள்மிகு லட்சுமி நரசிம்மர், தேவராஜன் திருக்கோயில், திருவாழித் திருநகரி, நாகப்பட்டினம்)

பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் இணைந்து-

 • திருக்கண்ணபுரம் (அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், திருவாரூர்)

பெரியாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோருடன் இணைந்து-

 • அயோத்தி (அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், சரயு, அயோத்தி,பைசாபாத், உ.பி)பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் இணைந்து
 • திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)
 • திருப்பாற்கடல்

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் இணைந்து-

 • ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம் திருச்சி)
ஆலயத் திருப்பணி

திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் குலசேகர கட்டினார் எனப்படுகிறது. இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இம்மூன்றாவது சுற்றுக்கு குலசேகரர் திருச்சுற்று என்னும் பெயர் வழங்குகிறது. குலசேகராழ்வார் 'பவித்ரோற்சவ மண்டபம்' கட்டப்பட்டது என்றும் அந்த மண்டபம் அடங்கிய பிராகாரத்தைத் திருப்பணி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

இலக்கியவாழ்க்கை

குலசேகர ஆழ்வார் சம்ஸ்கிருதத்தில் முகுந்தமாலை, தமிழில் பெருமாள் திருமொழி ஆகிய நூல்களை இயற்றியதாக குருபரம்பரை நூல்கள் குறிப்பிடுகின்றன.

முகுந்தமாலை

முகுந்தமாலை குலசேகரரால் எழுதப்பட்டது என்பதை சில ஆய்வாளர் மறுக்கிறார்கள். ஏனென்றால் அந்நூலுக்கு வைணவ ஆசிரியர்கள் உரை (வியாக்கியானம்) எழுதவில்லை. திவ்வியபிரபந்த உரைகளில் அந்நூல் மேற்கோள் காட்டப்படவில்லை. திருக்கோயில்களில் இந்நூல் ஓதும்படியான நெறிகள் வகுக்கப்படவில்லை. ராமானுஜர் காலத்தில் உருவான திவ்யசூரி சரிதம் என்னும் நூலில் குலசேகரர் வரலாறு கூறப்படும்போது பெருமாள் திருமொழி பற்றி மட்டுமே குறிப்பிடப்படுகிறது. நாதமுனிகள் போன்ற ஆசிரியர்கள் முகுந்தமாலையை குலசேகரர் பாடியதாக கருதவில்லை என ஆய்வாளர் எண்ண காரணம் இதுவே. வைணவ ஆய்வாளர் பி.ப.அண்ணங்கராசாரியாரும் அவ்வாறே வழிமொழிகிறார். குலசேகரன் என்னும் இன்னொரு சேரகுலத்து அரசரால் இது பாடப்பட்டது எனப்படுகிறது. அந்த அரசருக்கு துவிஜன்மவரர், பத்மசரர் என்ற இரு நண்பர்கள் இருந்தனர் என அந்நூல் சொல்கிறது. குலசேகர ஆழ்வாருக்கு அவ்வாறு நண்பர்கள் இருக்கவில்லை.

பெருமாள் திருமொழி

குலசேகரப் பெருமாள் எழுதியமையால் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நூலில் தொகுக்கப்பட்ட அவருடைய பாடல்கள் மொத்தமாக பெருமாள் திருமொழி என அழைக்கப்படுகின்றன.ஆழ்வார்களின் பாடல்களை தொகுத்த நாதமுனிகள் அவற்றின் பாசுர முதற்குறிப்பு, யாப்பமைதி, பாடியவர் பெயர், பாடுபொருள் சிறப்பு ஆகியவற்றை ஒட்டி அவற்றுக்குப் பெயரிட்டார். அவ்வாறு இப்பாடல்கள் பெருமாள் திருமொழி என அழைக்கப்பட்டன.

பெருமாள் திருமொழியில் பத்து அல்லது பதினொரு பாசுரங்கள் கொண்ட பத்து பதிகங்கள் உள்ளன. வைணவ மரபின்படி பதிகம் ஒவ்வொன்றும் திருமொழி என்று அழைக்கப்படும். பத்து திருமொழிகளிலும் அடங்கியவை 105 பாடல்கள். ‘செஞ்சொல் மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே’ என்று இந்த பாடல் எண்ணிக்கை குறிப்பிடப்படுகிறது[1].

குலசேகர ராமாயணம்

குலசேகர ஆழ்வார் பாடிய 105 பாடல்கள் கொண்ட பத்து பதிகங்களில் மூன்று பதிகங்களில் ராமாயணக்குறிப்புகள் உள்ளன. ‘அங்கணெடுமதில்...’ என தொடங்கும் இறுதிப் பதிகம் ஆழ்வார் தன்னிலையில் நின்று பாடியது. அதில் ராமாயணக் கதை முழுமையாகவே வருகிறது. 'மன்னுபுகழ்' என தொடங்கும் பதிகத்தில் ராமனின் தாயாகிய கௌசல்யாவாக தன்னை உருவகம் செய்துகொண்டு ராமனுக்கு தாலாட்டு பாடுகிறார். அதிலும் ராமனின் வாழ்க்கைநிகழ்வுகள் வருகின்றன. 'வன்தாளின் இணை' என்று தொடங்கும் பதிகம் ராமனைப் பிரிந்த தசரதனின் மனநிலையில் இருந்து பாடியது. அதிலும் ராமாயண நிகழ்வுகள் உள்ளன. இம்மூன்று பதிகங்களையும் மொத்தமாக குலசேகர ராமாயணம் என்று சொல்வதுண்டு.

அழகியல்

குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் நாலாயிரத் திவ்விய பிரபந்தப் பாடல்களுக்குப் பொதுவாகவே உள்ள நாடகீயமான உணர்ச்சிகரம், இசைத்தன்மை ஆகியவை கொண்டவை. ஒரே ஒரு பதிகம் மட்டுமே தன்னிலையில் நின்று எழுதப்பட்டது. நாயகி பாவத்திலும் (குலசேகரநாயகி) அன்னை (கௌசல்யை) தந்தை (தசரதன்) பாவத்திலும் நின்று எழுதப்பட்டவை பிற பதிகங்கள்.

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

என்னும் வகையிலான இனிமையும் உணர்வுநிலையும் கொண்டவை

உரைகள்

பெரியவாச்சான் பிள்ளை. பெருமாள் திருமொழி வியாக்கியானம்.

மறைவு

குலசேகர ஆழ்வார் பொ.யு. 817-ல் மறைந்திருக்கலாம் என ஆய்வாளர் என். குலசேகரன் கருதுகிறார்.

திருவரசு ஆலயம்

குலசேகர ஆழ்வார் பாண்டியநாட்டில் பிரம்மதேசம் என்னும் மன்னார்கோயிலில் ( இன்றைய நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது) மறைந்தார் என்றும் அவருடைய திருவரசு ஆலயம்[2] அங்குள்ளது என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. பிரபந்தாம்ருதம் போன்ற நூல்கள் அவ்வாறு சொல்கின்றன.

ஆனால் அதை ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள் அவ்வூரிலுள்ள இராஜேந்திர சோழ விண்ணகரம் என்னும் ஆலயம் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்கு கீழிருந்த ராஜசிம்மன் என்னும் சேரநாட்டு அரசனால் பொ.யு. 1021-ல் கட்டப்பட்டது. ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் (1190 -1217) இந்த ஆலயம் விரிவாக்கப்பட்டது. அப்போது இந்த ஆலயத்தின் இரண்டாம் பிராகாரத்தில் குலசேகரருக்கு தனி ஆலயம் ஒன்று உருவாக்கப்பட்டது. சேரநாட்டு மலைமண்டலம் முல்லப்பள்ளி என்னும் ஊரைச்சேர்ந்த வாசுதேவன் கேசவன் என்னும் படைத்தளபதி செண்டாலங்கார முனிவரின் மாணவர். குலசேகரரின் மேல் பக்தி கொண்ட அவருக்கு செண்டாலங்கார தாசன் என்னும் பட்டம் உண்டு. அவரே இந்த ஆலயத்தில் குலசேகரருக்கு ஆலயம் அமைத்து நிபந்தங்களும் அளித்ததாக கோயிலில் கல்வெட்டுகள் உள்ளன என ஆய்வாளர் ஆர்.திருமலை குறிப்பிடுகிறார்.

வழிபாடு

அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் இராஜேந்திரசோழ விண்ணகரம் ஆலயத்தில் குலசேகர ஆழ்வாருக்கு தனி கோயில் கொடிமரம் ஆகியவை உள்ளன. ஆண்டுதோறும் மாசிமாதம், குலசேகர ஆழ்வார் பிறந்த புனர்பூச நட்சத்திரத்தில் அவருக்கு திருவிழா நடைபெறுகிறது

வரலாற்றுநூல்கள்

உசாத்துணை

நூல்கள்
 • பி.ப.அண்ணங்கராச்சாரியார். பெருமாள் திருமொழி தீபிகையுரை, கிரந்தமாலா, காஞ்சீபுரம்
 • நாலாயிர திவ்விய பிரபந்தம். எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்னுரை. மர்ரே ராஜம் பதிப்பு
 • பெரியவாச்சான் பிள்ளை. பெருமாள் திருமொழி வியாக்கியானம். கி.ஸ்ரீனிவாச ஐயங்கார் பதிப்பு
 • பின்பழகியபெருமாள் ஜீயர். ஆறாயிரப்படி குருபரம்பரை.
 • வடிவழகிய நம்பிதாசர் ஆழ்வார்கள் வைபவம்
 • ஆழ்வார்கள் காலநிலை மு.இராகவையங்கார்
 • ஆழ்வார்கள் சரித்திரம். வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்
 • கொல்லிக் காவலன், மதி சீனிவாசன்
 • ஆழ்வார்கள் சரித்திரம் ஸ்ரீநிவாச ஐயங்கார். சுதேசமித்திரன் ஆபீஸ்
 • பன்னிரு ஆழ்வார்கள் ம.ராதாகிருஷ்ண பிள்ளை. அல்லையன்ஸ் கம்பெனி சென்னை
 • வைணவத்தின் ஆழ்வார்கள் காலநிலை. எஸ்.குலசேகரன் திருமகள் நிலையம் வெளியீடு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

 1. பெருமாள் திருமொழி மூலம்-இணைய நூலகம்
 2. தமிழ் வைணவ மரபில் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தை திருவரசு என்று சொல்லப்படுகிறது


✅Finalised Page