under review

பூரணி

From Tamil Wiki
நன்றி: தென்றல் இதழ்

பூரணி (இயற்பெயர்: சம்பூர்ணம்) (அக்டோபர் 17, 1913-நவம்பர் 17,2013) தமிழ் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். நூறாண்டு கண்ட ஒரே தமிழ்ப் பெண் கவிஞர். எளிய நடையில் சமகால நிகழ்வுகளையும் தான் உணர்ந்தவற்றையும் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும் எழுதினார்.

பிறப்பு, கல்வி

சம்பூரணம் பழனியில் அக்டோபர் 17, 1913 அன்று சீதாலக்ஷ்மி -ராமசாமி ஐயர் இணையருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். தமிழ்ப் பண்டிதரான ராமசாமி ஐயர் தொல்காப்பியத்துக்கு எளிய உரை எழுதியவர். 20 ஆண்டுகள் பெண்களுக்கான தமிழ்ப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். பொருளாதாரக் காரணங்களால் அப்பள்ளியை அன்னி பெசண்டிடம் ஒப்படைத்தார். தமிழார்வம் மிக்க குடும்பத்தில் வளர்ந்ததால் பூரணி சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிக்கல்வி எட்டாம் வகுப்புடன் நின்றது.

தனி வாழ்க்கை

பூரணி கவிஞர் க்ருஷாங்கினியுடன்

பூரணிக்கு தனது 13-ம் வயதில் 23 வயதான வைத்தீஸ்வரனுடன் திருமணம் நடந்தது. வைத்தீஸ்வரன் தன் சகோதரர்களுடன் தாராபுரத்தில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். பூரணி இதன் இல்லப் பணிகளுக்கிடையே வாசிப்பைத் தொடர்ந்தார். ஒன்பது குழந்தைகள். மகள் பிருந்தா (க்ருஷாங்கினி) தமிழ்க்கவிஞர். மகன் கே.வி. ராமசாமி ஞானரதம் இதழின் ஆசிரியராக இருந்தார்.

பூரணிக்கு சிறுவயதிலிருந்தே தாயுமானவர் பாடல்களிலும் வேதநாயகரின் சர்வ சமயக் கீர்த்தனைகளிலும் ஈடுபாடு இருந்தது. ஹிந்தி மொழியின்மேல் ஆர்வம் கொண்டு படித்து ஹிந்தி பிரச்சார சபாவின் 'விஷாரத்' பட்டம் பெற்றார். மகளிர்க்கு ஹிந்தி பயிற்றுவித்தார். அவரிடம் ஹிந்தி கற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிற்காலத்தில் பிரேம்சந்தின் படைப்புகள் உட்பட ஹிந்தியிலிருந்து தமிழுக்குப் பல மொழியாக்கங்களைச் செய்த சரஸ்வதி ராம்நாத்.

இலக்கிய வாழ்க்கை

பூரணி தன் மனதை ஈர்த்த, பாதித்த நிகழ்வுகளைக் கவிதையாக எழுதினார். 1929-ல் அவரது முதல் கவிதையான 'தமயந்தி சுயம்வரக் கும்மி' வெளிவந்தது. தொடர்ந்து' நலங்குப் பாடல்கள்', 'கோலாட்டப் பாட்டு' , 'கும்மிப் பாட்டு' எனப் பல பாடல்களை எழுதினார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் எழுதிய 'தேசிய ஓடம்', 'நாகரிக ஓடம்' மற்றும் நலங்குப் பாடல்கள் திருமணங்களில் விரும்பிப் பாடப்பட்டன. மாதர் சங்கத்திற்காக 'இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' என்ற வில்லுப்பாட்டை எழுதி அரங்கேற்றினார். பள்ளிக் குழந்தைகளுக்காகவும், பள்ளி நிகழ்ச்சிகளுக்கும் பல பாடல்கள் எழுதினார்.

1937-ல் பூரணியின் முதல் சிறுகதை 'சித்தன்' இதழில் வெளிவந்தது. கோவையிலிருந்து வெளிவந்த 'பாரத ஜோதி' இதழில் சிறுகதைகள் எழுதினார். கணையாழி, படித்துறை, 'புதிய பார்வை' போன்ற இலக்கிய இதழ்களில் பூரணியின் படைப்புகள் வெளிவந்தன. சுதந்திரப் போராட்டமும், அக்கால சமூக நிலையும் அவரது கதைகளில் பேசப்பட்டன. வட மாநிலத்திலிருந்து வந்த காங்கிரஸ் தலைவருக்கு அளித்த விருந்துக்கு தலித் நண்பர்களை அழைத்ததால் தன் சமூகத்தைவிட்டு விலக்கப்பட்டவனின் கதை 'சுவர்ணம்'.

சென்னைக்குக் குடி பெயர்ந்த பின் பொன்னடியான் நடத்திய கவிதை அரங்குகளிலும், பாரதி கலைக்கழக அரங்குகளிலும் கவிதைகள் வாசித்தார். 'சென்னை சங்கமம்' நிகழ்வில் கவிதை வாசித்த ஒரே பெண் பூரணி.

பூரணியின் எழுத்துக்கள் நான்கு புத்தகங்களாக வந்துள்ளன அவர் மகள் க்ருஷாங்கினி மற்றும் அம்பையின் முயற்சியால் அவரது 90-ஆவது வயதில்,2003-ல் 'பூரணி கவிதைகள்' , காலச்சுவடு வெளியீடாக வந்தது. 2005-ல் 'பூரணி நினைவலைகள்' (தன்வரலாறு), சதுரம் பதிப்பகத்தின் மூலம் வெளிவந்தது. மணிவாசகர் பதிப்பகம் மூலம் அவர் சிறுகதைத் தொகுப்பு 'பூரணி சிறுகதைகள்' என்னும் தலைப்பில் 2009-ல் வெளிவந்தது. அவர் தன் பாட்டிகளிடம் கேட்ட சிறுவர் கதைகளையும், தானே வடிவமைத்து, தன் குழந்தைகளுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் சொல்லிய கதைகளையும் இணைத்து 2008-ல் க்ருஷாங்கினியிடம் தந்த 200 பக்க நோட்டுப் புத்தகத்தில் இருந்த கதைகள் வசந்தா பதிப்பகம் மூலம் 'செவிவழிக் கதைகள்' என்ற பெயரில் வெளியாயின.

மொழியாக்கம்

கபீர்தாசரின் சில கவிதைகளையும், முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் கவிதைகளையும், சமகால ஹிந்திக் கவிஞர்களின் கவிதைகளையும் ஹிந்தியிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தார்.

விருதுகள்

  • திருப்பூர் சக்தி இலக்கிய விருது (2004)
  • பொற்றாமரை கலை இலக்கிய ஆய்வரங்கம் ஆண்டுவிழாவில் தங்கப் பதக்கம் (2007)

மறைவு

பூரணி நவம்பர் 17, 2013 அன்று சென்னையில் காலமானார்.

இலக்கிய இடம்

பூரணி தன் எண்ணங்களையும், தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் இயல்பாகத் தன் கவிதைகளிலும், புனைவுகளிலும் பதிவு செய்தார். அவரது படைப்புகள் அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலித்ததோடு காலத்தை மீறிய புரட்சிகரமான கருத்துக்களையும் கொண்டிருந்தன.

எழுத்தாளர் அம்பை பூரணியைப் பற்றி ”வாழ்வின் இடைஞ்சல் நிறைந்த பாதைகளில் போகும்போது கவிதையைத் தனக்கான ஆற்றாகவும், தன் வெளிப்பாடாகவும் அமைத்துக்கொண்டவர் பூரணி. வீட்டுக்குள் இருந்தபடியே வெளி உலகத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட மாயத்தைப் பூசிக்கொண்டவை இக் கவிதைகள். மண் அடுப்பு மட்டும் செய்யவில்லை பூரணி; மண்ணில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூர்ந்து கவனித்து, கவிதையும் வனைகிறார். அன்றாட வாழ்க்கையின் கொண்டாட்டமும் இசையும் நிறைந்த நிகழ்வுகளில் புகுந்து அவற்றின் சொற்களை மாற்றிப் போடுகிறார். நாடு என்ற ஒன்றை அந்தப் பாடல்களில் ஏற்றுகிறார். இயற்கை, இடம், இருப்பு இவையும் கவிதைப் பொருளாகிறது நாட்செல்ல நாட்செல்ல வாழ்க்கைக்கும் தனக்கும் உள்ள உறவுக்கு ஒரு பாலமாகக் கவிதையைக் கட்டுகிறார் பூரணி. இன்றும் அவர் கவிதைகள் எனக்கு அர்த்தம் கொண்டவையாகவும், தற்கால வாழ்க்கைக்கு உரியவையாகவுமே தோன்றுகின்றன" என்று குறிப்பிடுகிறார்.

பூரணியின் கவிதைகளை மலையாளக் கவிஞர் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் கவிதைகளுடன் ஒப்பிடும் இரா. முருகன் "பூரணியின் எந்தக் கதையும் சோடை போகவில்லை" எனக் குறிப்பிடுகிறார்.

படைப்புகள்

  • பூரணி கவிதைகள்(2003)
  • பூரணி நினைவலைகள்(2005)
  • பூரணி சிறுகதைகள் (2009)
  • செவிவழிக் கதைகள் (2008))

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page