under review

பூதப்பாண்டி சிவன் கோவில்

From Tamil Wiki
பூதப்பாண்டி சிவன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தின் தலைநகரான பூதப்பாண்டியில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். மூலவர் பூதலிங்க சாமி.

இடம்

பூதப்பாண்டி என்னும் ஊர் தோவாளை வட்டத்தின் தலைநகர். நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வுரின் பழமை 2000 ஆண்டுகள் முன்பு வரை செல்கிறது. இவ்வுரைப்பற்றிய புராணக்கதைகள் கேரளோத்பத்தி, கேரளமகாத்மியம் போன்ற நூல்களில் உள்ளன. பூதப்பண்டி பழையாற்றின் கரையில் உள்ளது. இங்குள்ள சிறு குன்றின் அடிவாரத்தில் சிவன் கோவில் உள்ளது. கோவிலை அடுத்து தெப்பக்குளம் உள்ளது.

மூலவர்

பூதப்பாண்டி சிவன் கோவில்

கோவில் மூலவர் பூதலிங்க சாமி, மூலவருக்கு துணையாக சிவகாமி தேவி உள்ளார். இருவருக்கும் தனி சன்னதிகள் உள்ளன. கோவில் கவ்வெட்டு ஒன்று மூலவரை சாலியர்கண்ட திருமேனி என்று கூறுகிறது. மூலவர் சிவலிங்க வடிவில் உள்ளார். மூலவரின் லிங்கம் கருவறை தாய்ப்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

தொன்மம்

பூதராயப் பாண்டியப் பெருமாள் என்பவன் ஊர்சபை தேர்தல் நடத்த போது பிராமணர்களை ஒதுக்கி வைத்தான். கோபம் கொண்ட பிராமணர்கள் யாகம் செய்து ஒரு பூதத்தை உருவாக்கி பூதராய பாண்டியனைக் கொன்றனர். அவனை புதைத்த இடத்தில் சிவன் கோவில் ஒன்றை கட்டினர். இந்த்த் தொன்மக் கதை கேரளோத்பத்தி என்னும் நூலில் உள்ளது.

சாலியர் சாதியை சார்ந்த ஒருவரின் பசு புதரினுள் பால் சிந்துவதை கண்டு புதரை நீக்கி பார்த்தபோது கோவில் மூலவரை அடையாளம் கண்டு கொண்டதாக வாய்மொழிக் கதையும் வழக்கில் உள்ளது.

கோவில் அமைப்பு

பூதப்பாண்டி சிவன் கோவில்

இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில். கருவறை பாறையை குடைந்து செய்யப்பட்டது. கருவறையில் விமானம் கிடையாது. கருவறையின் முன்பகுதியில் கட்டுமான மண்டபம் உள்ளது. கருவறை உட்பகுதியில் உள்ள தூண்களின் அமைப்பின்படி இது முற்காலப் பாண்டியர் காலத்தையது என்றும் கருவறை உருவான காலம் பொ.யு. 8 அல்லது 9-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பதும் முனைவர் அ.கா. பெருமாள் அவர்களின் ஊகம்.கருவறையை அடுத்து அர்த்த மண்டபம், முக மண்டபம், கல்யாண மண்டபம், இரண்டு பிரகாரங்கள், சுற்றிலும் மதில் என்னும் அமைப்புடையது. சிவகாமி அம்மனுக்குத் தனி சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன் கல்யாண மண்டபமும் சித்திர வேலைப்பாடுடைய மணிமேடையும் உள்ளன.

கோவிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் பல சிற்பங்கள் உள்ளன. ரதி, மன்மதன், துவாரபாலகர். ஸ்ரீசக்கரம், கல்லால் ஆன சங்கிலி, தூணில் இருக்கும் கல்பந்து போன்ற சிற்பங்கள் உள்ளன.

பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சணாமூர்த்தி, முருகன், சண்டேஸ்வரர், நந்தி ஆகியன உள்ளன.

வரலாறு

பூதப்பாண்டி சிவன் கோவில்

வேணாட்டு மன்னர்கள் காலத்தில் பூதப்பாண்டி துணைத் தலைநகருக்குரிய மதிப்புடன் இருந்தது. பொ.யு. 1659-ம் ஆண்டு ரவிவர்மன் சிறைவாய் மூத்ததம்புரான் என்பவர் இவ்வுரில் அரண்மனை ஒன்றைக் கட்டினார். இவ்வூரில் வேணாட்டரசன் உதயமார்த்தாண்டன் பேரில் ஒரு வீதி இருந்துள்ளது. பூதலராமன் தெருவை அஞ்சினான் புகலிடமாக அறிவித்ததைப் பழைய ஆவணம் ஒன்று கூறும்.கோவிலில் 13 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் அக்கால கோவில் நிர்வாகம், பூசை, விழாக்கள் பற்றிய செய்திகள் உள்ளன. கோவிலுக்கு தனி நிர்வாக சபை இருந்துள்ளது. நிர்வாக சபையின் அனுமதியுடன் ’ஆதி சண்டேஸ்வரப் பிரமாணம்’ என்ற பெயரில் நிபந்தம் கொடுத்த செய்தி கி.பி. 1559-ம் ஆண்டு கல்வெட்டில் உள்ளது. பொ.யு. 1692-ம் ஆண்டு கல்வெட்டில் இக்கோவிலில் வயிராவி சாதியினர் காவலராய் இருந்த செய்தி உள்ளது. 1582-ம் ஆண்டு கல்வெட்டில் அஷ்டமி பூஜை மற்றும் வசந்த விழா நடந்ததாகச் செய்தி உள்ளது. 1615-ம் ஆண்டு கல்வெட்டில் அமாவாசையில் வீதிவழி வாகனம் எடுக்கப்பட்ட செய்தியும் 1619- ஆம் ஆண்டு கல்வெட்டில் சித்திரை முதல்நாளில் வீதிவழி வாகனம் வந்த செய்தியும் உள்ளன. பொ.யு.15-ம் நூற்றாண்டு கல்வெட்டில் மார்கழி திருவாதிரை விழா கொண்டாடப்பட்ட செய்தி உள்ளது.

பூதப்பாண்டி சிவன் கோவில்

கோவில் நந்தி மண்டபத் தூண் பொ.யு. 1502 -ம் ஆண்டிலும் கொடிமரம் பொ.யு. 1789-ம் ஆண்டிலும் அமைக்கப்பட்டதற்கு கல்வெட்டுச் சான்று உள்ளது. கோவிலின் தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது. இக்கோவிலில் 16 -ம் நூற்றாண்டிலும் தமிழ் சைவப் பிராமணர்கள் கருவறையில் பூசகர்களாக இருந்துள்ளனர். 1608-ம் ஆண்டில் தினமும் பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டுள்ளன. திருப்பள்ளி எழுச்சி பாடியது குறித்த கல்வெட்டுச் சான்று உள்ளது. காசி சென்ற தமிழ் பிராமணர் கங்கையாடிய பட்டர் மருகூர் ஸ்ரீ பத்மநாபப் பெருமாள் என்பவர் சூரனை வென்ற பெருமாள் பூஜை நடத்த நிபந்தம் கொடுத்துள்ளார்.

பூஜைகளும் விழாக்களும்

பூதப்பாண்டி சிவன் கோவில்

கோவிலில் தை மற்றும் சித்திரை ஆகிய இரண்டு மாதங்களிலும் திருவிழக்கள் நடக்கின்றன. தை மாதத்தில் தேரோட்டத் திருவிழாவும் ஐப்பசியில் திருக்கல்யாணமும் நடைபெறும்.கோவில் பரிவார தெய்வம் பூதத்தானுக்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, தோல் உரிக்காத தேங்காய் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. நைவேத்தியத்தை ஏற்று கொண்டதன் அடையாளமாக ஒரு பூரான் வரும் நிகழ்வும் நடக்கிறது. தினபூஜையில் சிவனுக்கு தோசை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

உசாத்துணை

பூதப்பாண்டி சிவன் கோவில்

வெளியிணைப்புகள்


✅Finalised Page