under review

பூஞ்சோலை (சிறார் இதழ்)

From Tamil Wiki
சிறுவர்களின் சிநேகிதர் அழ. வள்ளியப்பா - 100 நூல் : ஆர்.வி. பதி

பூஞ்சோலை (1951) சிறார் இதழ். அழ. வள்ளியப்பா இதன் ஆசிரியர். சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், கட்டுரைகள், பொது அறிவுச் செய்திகள் இவ்விதழில் இடம் பெற்றன. மூன்றாண்டு காலம் வெளிவந்த இவ்விதழ் 1954-ல் நின்று போனது.

பதிப்பு, வெளியீடு

புக்ஸ் இந்தியா லிமிடெட் பதிப்பக நிறுவனத்தினர் சிறார்களுக்காக, 1951-ல் தொடங்கிய இதழ் ‘பூஞ்சோலை’. சித.ராமநாதன் இதன் அதிபர். அழ. வள்ளியப்பா ஆசிரியர். 64 பக்கங்களுடன் வெளியான இவ்விதழின் விலை நான்கணா.

உள்ளடக்கம்

சிறார்களுக்கான பாடல்கள், கதைகள், கட்டுரைகள், பொது அறிவுச் செய்திகளைத் தாங்கி பூஞ்சோலை இதழ் வெளிவந்தது. முதல் இதழில் வெளியான, 'ஆசிரியர் சொல்லுகிறார்' என்ற கட்டுரையில், அழ. வள்ளியப்பா, ’பூஞ்சோலை மிகவும் அழகுடையது. மணம் நிறைந்தது. அந்த அழகும் மணமும் சேர்ந்து நமக்கு ஆனந்தத்தை அளிக்கின்றன. அதேபோல் இந்த பூஞ்சோலையும் உங்களுக்கு அதிகமான மகிழ்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பூஞ்சோலை இதழுக்கு எப்படிப்பட்ட படைப்புகளை அனுப்ப வேண்டும் என்பதை, “பூஞ்சோலைக்கு நீங்கள் சிறுகதைகள் எழுதி அனுப்பலாம். கதைகள் கருத்துள்ளவைகளாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தை உயர்த்த வேண்டும். அறிவை வளர்க்க வேண்டும். பூஞ்சோலையில் நான்கு பக்கங்கள் வந்தாலே போதும். வேடிக்கைக் கதைகள், விகடத் துணுக்குகள், நாடகங்கள் முதலியவற்றையும் நீங்கள் எழுதி அனுப்பலாம். நல்லவைகளுக்கு இடமுண்டு. நீங்கள் எழுதி அனுப்பும் எந்த விஷயமும் எளிய நடையில் இருக்க வேண்டும். அது உங்களுடைய சொந்தமானதாகவே இருக்க வேண்டும். கூடுமானவரை கொச்சைத் தமிழைக் குறைத்து விடலாம்” என்று அறிவித்தார்.

சிறார்களே எழுதிய கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் இவ்விதழில் வெளியாகின. சிறார்களுக்காகப் பல் துறை அறிஞர்கள் எழுதிய, ‘இதுதான் பேங்க்', ‘இதுதான் சட்டசபை’, ‘இதுதான் இன்ஷ்யூரன்ஸ்’ போன்ற கட்டுரைகள் வெளியாகின. பூவண்ணனின் புகழ் பெற்ற தொடரான ‘பாபு சர்க்கஸ்’ பூஞ்சோலையில் தான் வெளிவந்தது.

பங்களிப்பாளர்கள்

அழ. வள்ளியப்பா, டாக்டர் பூவண்ணன், திருச்சி பாரதன், வீர வசந்தன், ஜோதிர்லதா கிரிஜா, வடமலை அழகன் உள்ளிட்ட பல சிறார் எழுத்தாளர்கள் இவ்விதழுக்குப் பங்களித்தனர்.

இதழ் நிறுத்தம்

பூஞ்சோலை இதழ், பொருளாதாரச் சூழல்களால் நவம்பர் 1954 இதழோடு நிறுத்தப்பட்டது. இது குறித்து அழ. வள்ளியப்பா, “பூஞ்சோலையில் கண்ட அழகும் தரமும் குறையாமல் பாதுகாக்க வேண்டும் என்று தான் நினைத்தோம். ஆனால் இன்றைய சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்காது என்பதை உணர்ந்தோம். அதனால் தொடர்ந்து நல்ல முறையில் நடத்துவது இயலாது என்ற முடிவுக்கு நம் நிர்வாகிகள் வந்து விட்டனர். ஆகையால் இதுவே பூஞ்சோலையின் கடைசி இதழாக வெளிவருகிறது” என்று அறிவித்திருந்தார்.

இலக்கிய இடம்

பாலர் மலர், பாப்பா, டமாரம், டிங்டாங்க் போன்ற இதழ்களின் வரிசையில் சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிய இதழாக ‘பூஞ்சோலை’ இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page