under review

பி. கோதண்டராமன்

From Tamil Wiki
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் பி. கோதண்டராமன்
ஸ்ரீ அரவிந்தர் - ஸ்ரீ அன்னை நூல்கள்: பி. கோதண்டராமன்

பி. கோதண்டராமன் (ஜூன் 20, 1896) எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், இலக்கிய விமர்சகர். வழக்குரைஞராகப் பணியாற்றினார். ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிரெஞ்சு நூல்களைத் தமிழில் பெயர்த்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

பிறப்பு, கல்வி

பி. கோதண்டராமன், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பினாயூரில், ஜூன் 20, 1896 அன்று பிறந்தார். செங்கை உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்பை சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்தார். சட்டக் கல்லூரியில் பயின்று பி.எல். பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்ச் மொழிகள் கற்றார்.

தனி வாழ்க்கை

பி. கோதண்டராமன், ராஜாஜி நிறுவிய ஸ்வாதீன வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றினார். சில காலம் வழக்குரைஞராகப் பணியாற்றினார். சில வருடங்கள் இதழாளராகப் பணிபுரிந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி ஆன்மிகப் பணியாற்றினார். மணம் செய்துகொள்ளவில்லை.

அரசியல்

பி. கோதண்டராமன், கல்லூரி மாணவராக இருக்கும்போது சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். 1918-ல், திரு,வி.க., பி.பி. வாடியா போன்றோர் தலைமையில் சென்னையில் நடந்த சென்னைத் தொழிலாளர் சங்க இயக்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 1920-ல், ராஜாஜி தலைமையில் நிகழ்ந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காந்தியின் கொள்கைகளைப் பரப்பினார்.

தொடர்ந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டதால், 1921-ல், கோதண்டராமன் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். வ.வே.சு. ஐயர், டாக்டர் பி. வரதராஜுலு நாயுடு ஆகியோருடன் சிறையில் இருந்தார். விடுதலைக்குப் பின் மீண்டும் விடுதலை இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். டி.எஸ்.எஸ். ராஜன், ஈ.வெ. ராமசாமி, க. சந்தானம், என்.எஸ். வரதாச்சாரி போன்றோருடன் இணைந்து தமிழ் நாடெங்கும் பயணம் செய்து காங்கிரஸ் கொள்கைகளைப் பிரசாரம் செய்தார்.

காந்தி தென்னகம் வந்தபோது டாக்டர் ராஜனுடன் இணைந்து பி. கோதண்டராமனும் காந்தியுடன் தமிழகம் முழுக்கச் சுற்றுப் பயணம் செய்தார்.

சக்தி இதழில் கட்டுரை - பி. கோதண்டராமன்

இதழியல்

1923-ல், ‘சுதேசி’ என்ற வார இதழைத் தொடங்கிச் சில காலம் நடத்தினார். 1948-1956 வரை, சுதேசமித்திரன் இதழில், உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பல்வேறு நூல்களுக்கு மதிப்புரை, விமர்சனங்கள் எழுதினார். 1956-ல் மித்திரனிலிருந்து பணி ஓய்வு பெற்று மீண்டும் அரவிந்தர் ஆசிரமம் சென்று வசித்தார்.

இலக்கிய வாழ்க்கை

பி. கோதண்டராமன், ஆன்மிக ஆர்வத்தால், 1928-ல், அரசியலிலிருந்தும், பொது வாழ்க்கையிலிருந்தும் விலகினார். புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்னை, அரவிந்தரின் மேற்பார்வையில் தன் ஆன்மிக சாதனையை வளர்த்துக் கொண்டார். அரவிந்தர் பற்றி ‘முப்பெருந்தலைவர்’ என்ற நூலை எழுதினார். தொடர்ந்து அரவிந்தர், அன்னை, எம்.பி. பண்டிட் போன்றோரது நூல்களை மொழிபெயர்த்தார்.

ஆன்மிகம், யோகம், இலக்கியம், கலை, இசை, ஓவியம் சார்ந்த பல நூல்களை எழுதினார். ‘சக்தி’, ‘பாரதமணி’ போன்ற இதழ்களில் பல கட்டுரைகள் எழுதினார். பிரெஞ்சு மொழியிலிருந்து பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். சாகித்ய அகாடமி, புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியா போன்றவை இவரது மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டன. இவரது ‘இலக்கியமும் விமர்சனமும்’ நூல், கல்லூரி மாணவர்களுக்குப் பாட நூலாக வைக்கப்பட்டது.

பொறுப்புகள்

  • சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார்.

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு - ’விஞ்ஞானமும் சமூகமும்’ நூல் - 1947
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு - ‘மண் வளம்’ நூல் - 1951
  • சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பணப்பரிசு, பாராட்டு - 1956
  • சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கிய கேடயம் - 1967

மறைவு

பி. கோதண்டராமன் 70 வயதுக்கு மேல் வாழ்ந்தார். சரியான மறைவுத் தேதி பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய இடம்

பி. கோதண்டராமன் எழுதியிருக்கும் 'இந்திய ஓவியக்கலை வரலாறு' நூலும், ‘தமிழர் இசைக் கருவிகள்’ நூலும், முன்னோடி ஆய்வு நூல்களாக அறிஞர்களால் மதிக்கப்படுகிறது. பிரெஞ்சு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த முன்னோடி மொழிபெயர்ப்பாளராக பி. கோதண்டராமன் மதிக்கப்படுகிறார்.

பி. கோதண்டராமன் எழுதிய நூல்கள்
பி. கோதண்டராமன் மொழிபெயர்ப்பு நூல்கள்

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • விவசாயப் பிரச்னைகள்
  • தமிழர் இசைக் கருவிகள்
  • புரட்சி செய்த பேனாவீரர்கள்
  • விஞ்ஞானமும் சமூகமும்
  • மண்வளம்
  • இந்திய ஓவியக் கலை வரலாறு
  • இந்தியக் கலைகள்
  • இந்தியக் கலைகள் : ஓவியம் - சிற்பம் - இசை - நாட்டியம்
  • சிறுகதை - ஒரு கலை
  • பாரதி யுகம்
  • பங்கிம் சந்திரர் வரலாறு
  • பங்கிம் சந்திரர்-இலக்கிய மேதை
  • இலக்கியமும் விமர்சனமும்
  • பராசக்தி (ஸ்ரீ அன்னையின் வாழ்க்கை வரலாறு)
  • ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு
  • அரவிந்தரின் ஞானத்துளிகள்
  • ஸ்ரீ அரவிந்தரும் அவரது யோகமும்
  • எழுத்தாளர் தருமம்
  • இந்திய மறுமலர்ச்சி
  • யோகம் செய்ய வேண்டுமா?
மொழிபெயர்ப்பு நூல்கள்
  • சோமபானம் - மூலம்: அல்போன்ஸ் தோதே (Alphonse Daudet) எழுதிய பிரெஞ்சு சிறுகதைகள்
  • அழகுப் பேய் - மூலம்: பிராஸ்பர் மேரிமே (Prosper Merime) எழுதிய பிரெஞ்சு நாவல்
  • மரகதம் - மூலம்: விக்டர் ஹ்யூகோ நாவல்
  • காஞ்சனமாலா - மூலம்: வங்க நாடோடிக் கதைகள்
  • மல்லிகை - மூலம்: வங்க நாடோடிக் கதைகள்
  • ஜபயோகம் (மூலம்: எம். பி. பண்டிட்)
  • யோகசாதனை (மூலம்: ஸ்ரீ அன்னை-பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு)
  • சிந்தனையும் மின்னொளியும் - மூலம்: ஸ்ரீ அரவிந்தர் (வங்காளத்திலிருந்து தமிழுக்கு)
  • கீதைப் பேருரை - மூலம்: ஸ்ரீ அரவிந்தர் - இரண்டு பகுதிகள் (வங்காளத்திலிருந்து தமிழுக்கு)
  • அதிமானுடன் யார்? - மூலம்: ஸ்ரீ அரவிந்தர்
  • முப்பெருந்தலைவர் - மூலம்: அரவிந்தர்
  • கலையும் நாடு அடையும் பயனும் - மூலம்: ஸ்ரீ அரவிந்தர்
  • இந்திய மறுமலர்ச்சி
  • சங்கரர் பொன்மொழிகள்

உசாத்துணை


✅Finalised Page