under review

பிலிப்பு தெமெல்லோ

From Tamil Wiki

பிலிப்பு தெமெல்லோ (ஏப்ரல் 27, 1723 - ஆகஸ்ட் 10, 1790) ஈழத்து தமிழ் எழுத்தாளர், கிறிஸ்தவ-தமிழறிஞர், மதபோதகர். கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களையும், மொழிபெயர்ப்புகளையும் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிலிப்பு தெமெல்லோ இலங்கை கொழும்பு நகரில் இராசவாசல் முதலியாராய் இருந்த சைமன் தெமெல்லோவிற்கு மகனாக ஏப்ரல் 27, 1723 அன்று பிறந்தார். கொழும்பு நார்மல் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆன்மிக வாழ்க்கை

பிலிப்பு தெமெல்லோ 1753-ல் வடமாகாணத்து கிறிஸ்தவ மதகுருவாக நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிலிப்பு தெமெல்லோ 'சத்தியத்தின் செயம்', 'புதிய ஏற்பாடு', 'ஒல்லாந்த இறப்பிறமாதுச் சபையின் சரித்திரம்', 'இறப்பிறமாதுச் சபைச் செபங்கள்' ஆகிய நூல்களை எழுதினார். கொழும்பில் இராசவாசல் முதலியாராய் விளங்கிய மருதப்பபிள்ளை அவர்கள்மேல் ’மருதப்பக் குறவஞ்சி’ என்னும் நூலை இயற்றினார். சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதிக்கு இருபது பாடல்களையும், பன்னிரண்டாம் தொகுதிக்கு நூறு பாடல்களையும் புதிதாகச் சேர்த்தார். ’அவர் பாடல்கள் 1856-ல் மானிப்பாய் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட பத்துப் பகுதிகளடங்கிய சூடாமணி நிகண்டில் உள்ளன. மீதமுள்ளவை யாழ்ப்பாணத்தில் வழங்கும் கையெழுத்துப் படிகளில் உள்ளன’ என சைமன் காசிச்செட்டி கூறினார். கூழங்கைத் தம்பிரான் அவர்களால் இயற்றப்பட்ட ’யோசேப்புப் புராணம்’ இவருக்கு உரிமை செய்யப்பட்டது.

மொழிபெயர்ப்பு

தமிழ், எபிரேயம், கிரேக்கம், லத்தீனியம், போர்த்துக்கேயம் ஆகிய மொழிகளைக் கற்றார். பிலிப்பு தெமெல்லோ மதகுருவாக ஆவதற்கு முன்பே சத்திய வேதாகமத்தை தமிழில் மொழிபெயர்த்தார். கிரேக்க மொழியிலிருந்து இவரால் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு(விவிலிய வேதம்) 1749-ம் ஆண்டில் ஒல்லாந்தருடைய அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டின் சில பகுதிகளையும் மொழிபெயர்த்தார்.

மறைவு

பிலிப்பு தெமெல்லோ தன் அறுபத்தி ஏழாவது வயதில் ஆகஸ்ட் 10, 1790 அன்று காலமானார்.

நூல் பட்டியல்

  • சத்தியத்தின் செயம்
  • புதிய ஏற்பாடு
  • ஒல்லாந்த இறப்பிறமாதுச் சபையின் சரித்திரம்
  • இறப்பிறமாதுச் சபைச் செபங்கள்
  • மருதப்பக் குறவஞ்சி

உசாத்துணை


✅Finalised Page