under review

சூடாமணி நிகண்டு

From Tamil Wiki
சூடாமணி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சூடாமணி (பெயர் பட்டியல்)
நிகண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நிகண்டு (பெயர் பட்டியல்)
சூடாமணி நிகண்டு - தாண்டவராய முதலியார்
சூடாமணி நிகண்டு - சாந்தி சாதனா பதிப்பு

நிகண்டு என்ற சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தி வெளியான நூல் ‘சூடாமணி நிகண்டு.’ இதனை இயற்றியவர் மண்டல புருடர். இவரது காலம் பதினாறாம் நூற்றாண்டு. இவரது காலம்வரை நிகண்டுகளுக்கு ‘உரிச்சொல்’ என்ற பெயரே பயன்படுத்தப்பட்டு வந்தது. இவரே முதன் முதலில் ‘நிகண்டு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்.

பதிப்பு, வெளியீடு

இந்நூலை முதன் முதலில் 1839-ல் பதிப்பித்தவர் தாண்டவராய முதலியார். முதல் பத்து தொகுதிகளை மட்டுமே அவர் பதிப்பித்து வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், மர்ரே எஸ். ராஜம், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினர், இலங்கை வண்ணார் பண்ணை க. கார்த்திகேயப் பிள்ளை உள்ளிட்ட பலர் இந்த நூலை முழுமையாகவும், தனித் தனித் தொகுதிகளாகவும் பதிப்பித்துள்ளனர்.

சரசுவதி மகால் நூலகம், கோவை இளஞ்சேரனாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சூடாமணி நிகண்டின் முதல் இரண்டு தொகுதிகளையும் விரிவான விளக்க உரையுடன் ஆய்வுப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

இந்நூல் பன்னிரண்டு பிரிவுகளையுடையது. பிங்கல நிகண்டிற்குப் பின்னர் தோன்றிப் பரவலாகத் தமிழ்நாடு எங்கும் பயன்படுத்தப்பட்ட நூல் இது. திவாகர நிகண்டு மற்றும் பிங்கல நிகண்டின் கலவையாக அல்லது நீட்சியாக சூடாமணி நிகண்டு அமைந்துள்ளது. இந்நூல் பலரால் அச்சிடப்பட்டு பல பதிப்புக்களைக் கண்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

சூடாமணி நிகண்டை இயற்றியவர் மண்டல புருடர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகள் நூலில் உள்ளன. ‘முக்குடை நிழற்ற மின்னு பூம்பிண்டி நிழல் வீற்றிருந்தான்’ என்ற பாடலாலும், ‘பூமலி அசோகின் நிழல் பொலிந்த எம் அடியார்’என்ற பாடலாலும் இவர் அருகனைத் துதிப்பதால் இவர் சமண சமயத்தவர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மண்டல புருடர் தன்னைப் பற்றி "வீங்குநீர்ப் பழனம் சூழ்ந்த வீரமண்டலவன்" என்று குறிப்பிட்டுள்ளார். வீரை என்பது வீரபுரம் என்பதைக் குறிக்கிறது. இவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது அப்பகுதியில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவ்வூர் கொங்கு மண்டலத்தில் இருந்துள்ளது.

உள்ளடக்கம்

சூடாமணி நிகண்டு, விருத்தப்பாவால் அமைந்துள்ளது. விருத்தப்பாவில் தோன்றிய முதல் நிகண்டு நூல் இதுதான். இது, 12 தொகுதிகளை உடையது. ஒவ்வொரு தொகுதியின் ஆரம்பத்திலும் அருக வணக்கம் இடம் பெற்றுள்ளது. 11-ம் தொகுதி ‘அகராதி’ போல அமைந்துள்ளது. இந்நூல் 1187 விருத்தப் பாக்களால் ஆனது. 11,000 சொற்கள் உள்ளன. பலபொருள் ஒரு சொற்கள் 1575. சில பதிப்புகளில், பாட பேதங்களால், இந்த எண்ணிக்கையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்நூலில் எதுகை வரிசையில் சொற்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நூல் கீழ்க்காணும் பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது.

  • தேவப் பெயர்த் தொகுதி
  • மக்கட் பெயர்த் தொகுதி
  • விலங்கள் பெயர்த் தொகுதி
  • மரப் பெயர்த் தொகுதி
  • இடப் பெயர்த் தொகுதி
  • பல்பொருட் பெயர்த் தொகுதி
  • செயற்கை வடிவப்பெயர்த் தொகுதி
  • பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
  • செயல் பற்றிய பெயர்த் தொகுதி
  • ஓலி பற்றிய பெயர்த் தொகுதி
  • ஒரு சொற் பல்பொருட் பெயர்த் தொகுதி (ககர எதுகை முதல் னகர எதுகை வரை)
  • பல்பெயர்க் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி

நூலின் இறுதியில் நூற்பா தலைப்பு - அகராதி அட்டவணை அமைந்துள்ளது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2023, 07:43:55 IST