under review

பிச்சியார்‌(கலம்பக உறுப்பு)

From Tamil Wiki

பிச்சியார் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியத்தின் உறுப்புகளில் ஒன்று. சிவ பக்தையும், சிவ வேடம் பூண்டவருமான பிச்சியார் பாட்டுடைத் தலைவனைப் பாடும் வகையில் அமைந்தது.

விளக்கம்

பிச்சியார் கலம்பகத்தின் உறுப்புகளில் ஒன்று. பிச்சியார் என்பவர் சிவபக்தை; சிவவேடம் பூண்டு சிவனைப்போல் திருவோடு ஏந்துபவர். சிவச் சின்னத்தோடு சூலமும் ஏந்தியிருப்பார். பாட்டுடை இறைவனைப் பாடுபவர்.

எடுத்துக்காட்டு

காசிக் கலம்பகம்

பிச்சியார்

காணுநதிக ளெல்லாம் புனற்கங்கையே
   அங்குள்ள தெய்வம் யாவையும்
தாணு எங்கள் அகிலேசரேமற்றைத்தலங்கள்
     யாவும் தடமதிற் காசியே
பூணும் ஆசை மற்றொன்றேஉடல்விடும
      போதுநன் மணிகர்ணிகைப் பூந்துறை
 பேணுமாறு பெற வேண்டும்அப்புறம்
      பேயோடு ஆடினும் ஆடப் பெறுமே.

கண்ணில் படும் நதிகள் எல்லாம் கங்கையாகி விடுமா? அந்த நதிக் கரை யிலிருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஸ்தாணு (சிவன்) ஆகுமா? மற்றைத் தலங்கள் எல்லாம் காசிக்கு ஈடாகுமா? என்னுடைய ஆசையெல்லாம் என்ன தெரியுமா? இந்த உயிர் போகும் போது காசியிலுள்ள மணிகர்ணிகையில் உயிர் போக வேண்டும் என்பதே. ஏன் தெரியுமா? இங்கு தானே விசுவநாதர் இறப்ப வர்களின் செவியில் ப்ரணவ மந்திரத்தை உபதேசிக்கிறார்! இந்தப் பேற்றைப் பெற்று விட்டால் அப்புறம் அந்த சிவனைப் போல் பேயோடு ஆடினாலும் கவலையில்லை- என்று பிச்சியார் பாடுகிறார்

மதுரைக் கலம்பகம்

அடுத்ததோர் தவ வேடமும் புண்டரம் அணிந்த
  முண்டமுமாய் வெள்ளியம்பலத்து
 எடுத்த தாள் பதித்[து] ஆடிக் கடைப் பிச்சைக்கு
  இச்சைக்குப் பேசும் அப்பிச்சன் எனச் செல்வீர்
 கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர்
  கவர்ந்து கொள்ள விடுத்த கபாலி போல்
 பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ
  பிச்சியார் எனும் பேர் உமக்கிட்டதே?

சிவபெருமானுக்கும் பிச்சியாருக்குமுள்ள ஒற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. சிவன் மதுரையில் தூக்கிய திருவடியாகிய இடது பாதத்தை ஊன்றி கால்மாறி ஆடுகிறார். வீடுகள் தோறும் பிச்சை வாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலானான்.அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது. காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார்.

பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சை எடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன் சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம் தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண் கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:59:14 IST