under review

பழநி. அரங்கசாமி

From Tamil Wiki
பழநி. அரங்கசாமி (நன்றி: மு. இளங்கோவன்)
பழனி அரங்கசாமி

பழநி. அரங்கசாமி (பிறப்பு: ஜூன் 5, 1936) எழுத்தாளர், பேராசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர். சங்க இலக்கியங்களையும் பாரதிதாசன் படைப்புகளையும் ஆங்கில நூல்களின் வழியாக அறிமுகம் செய்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

பழநி. அரங்கசாமி தமிழ்நாட்டின் தஞ்சாவூரை அடுத்துள்ள விண்ணமங்கலத்தில் பழநிவேலு, ரெங்கம் அம்மாள் இணையருக்கு ஜூன் 5, 1936-ல் பிறந்தார். விண்ணமங்கலத்தில் தொடக்கக் கல்வி பயின்றார். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் முதல் படிவம் முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார். 1953 முதல் 1957 வரை நான்கு ஆண்டுகள் தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் தமிழ் வித்துவான் வகுப்பில் பயின்று பட்டம் பெற்றார். பயின்ற முதல் மூன்று ஆண்டுகளும் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். காரைக்குடி அழகப்பா செட்டியாரும், டாக்டர் கஜபதியும் கல்லூரி ஆண்டு விழாவில் இவருக்குப் பரிசளித்துப் பாராட்டினர்.

பழனி அரங்கசாமி இளமையில்

பழநி. அரங்கசாமி 1959-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார். 1959 முதல் 1961 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றபொழுது சி. பி. இராமசாமி ஐயர் கட்டுரைப் பரிசு, சிலப்பதிகார இசைத்தமிழ்க் கட்டுரைப் பரிசு, அண்ணாமலை செட்டியார் தமிழ்ப் பரிசு, இராணி சீதை ஆச்சி தமிழ்ப் பரிசு ஆகியவற்றைப் பெற்றார். 1985-ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வழியாக ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவாறே வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பெயர்களைப் பற்றிய திறனாய்வு செய்து, 'Critical Study of the Tamil rendition of Shakespeare' என்னும் தலைப்பில் ஆய்வேட்டினை வழங்கி, முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பழநி. அரங்கசாமி ஜூன் 25, 1961 அன்று இந்திராவை திருமணம் செய்துகொண்டார். நான்கு மகன்கள், ஒரு மகள்.

ஜெர்மனி, மலேசியா, மொரீஷியஸ், இலங்கை, நேபாளம், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து முதலிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

ஆசிரியப்பணி

பழநி. அரங்கசாமி கோவை பூ.சா.கோ, கலை அறிவியல் கல்லூரியிலும், பழநி கலைக்கல்லூரியிலும் ஆங்கில விரிவுரையாளராக 1961 முதல் 1968 வரை பணியாற்றினார். 1968 முதல் 1972 வரை உசிலம்பட்டி பி.எம்.டி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 1972 முதல் 1988 வரை பதினாறு ஆண்டுகள் ஆங்கிலத்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புப் பேராசிரியராக 1989 முதல் 1996 வரை - ஏழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார். ஓய்வுக்குப்பின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 2010 முதல் 2016 வரை பேராசிரியராகவும் பணியாற்றினார். ஜெர்மனி, கொலோன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக அயல்பணி அடிப்படையில் ஆறு மாதங்கள் பணியாற்றினார்.

மாணவர்கள்

பழநி. அரங்கசாமி பேராசிரியர் பணிக்காலத்தில் எட்டு முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்தார். இருநூற்றுக்கும் மேலான ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்கள் இவரின் நெறிகாட்டலில் ஆய்வு செய்துள்ளனர்.

பொறுப்புகள்

  • 1972 முதல் 1988 வரை தொலைநிலைக் கல்வியின் இயக்குநராகப் பணியாற்றினார்.
  • பணி ஓய்வுக்குப்பின் 2009-2010 காலகட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிப்புத்துறை இயக்குநராகப் பணியாற்றினார்.
  • பெரியார் உயராய்வு மையத்தில் 2011 முதல் 2013 வரை இயக்குநராகப் பணியாற்றினார்.
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • மதுரைத் தமிழச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிஞர் அவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சொற்பொழிவுகள்

பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரைத் தமிழ்ச்சங்கம் முதலான கல்வி நிறுவனங்களில் பல்வேறு அறக்கட்டளைப் பொழிவுகளை வழங்கினார். பல்வேறு பணிப்பட்டறைகளில் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு 1984 முதல் 1988 வரை ஆங்கிலப் பாடங்களைக் குறித்துச் சொற்பொழிவுகளை வானொலியில் நிகழ்த்தினார்.

இலக்கிய வாழ்க்கை

பழநி அரங்கசாமி செந்தமிழ், தினமணி, சுதேசமித்திரன், விடுதலை, புதிய தென்றல் உள்ளிட்ட பல இதழ்களில் தமிழ் இலக்கியம், தமிழ் நாகரிகம், கலை, பண்பாடு, சமூகம் சார்ந்த பல கட்டுரைகளை எழுதினார்.

முதல் நூல் 'செய்தி உலகம்' 1975-ல் வெளியானது. தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

பழனி. அரங்கசாமி, பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு, தமிழிலும், ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அளித்தார்.

மொழியாக்கம்

பழனி. அரங்கசாமி சாகித்ய அகாதெமி நிறுவனத்திற்காக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குச் சில நூல்களை மொழியாக்கம் செய்தார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பழனி. அரங்கசாமி மொழிபெயர்த்த 'கீத கோவிந்தம்' நூலும், தமிழிலிருந்து ஆங்கிலththil மொழிபெயர்த்த மு. கருணாநிதியின் 'சங்கத் தமிழ்' நூலும் குறிப்பிடத்தகுந்தவை.

இதழியல்

  • பழனி. அரங்கசாமி, மதுரை செந்தமிழ் இதழின் மதிப்புறு ஆசிரியராக 12 ஆண்டுகள் பணியாற்றினார்.
  • சென்னையிலிருந்து வெளிவரும் 'தி மாடர்ன் ரேஷனில்ஸ்ட்' ஆங்கில இதழின் அசோசியேட் மெம்பர், கட்டுரையாளர்.

விருதுகள்

  • சங்கப் புலவர் விருது, கரந்தைத் தமிழ்ச்சங்கம் - 1996
  • பெரியார் விருது, பகுத்தறிவாளர் கழகம் - 1998
  • மொழிபெயர்ப்பு விருது, தமிழ்நாடு அரசு - 2019
  • இலக்கியப் பேரறிஞர் விருது, செண்பகத் தமிழ்அரங்கு - 2020
  • ஜி.யு.போப். மொழிபெயர்ப்பு விருது (SRM பல்கலைக்கழகம்) - 2021
  • இலக்கியச் சாதனையாளர் விருது, தமிழக நூலகத்துறை வாசகர் வட்டம் - 2023

இலக்கிய இடம்

பழனி. அரங்கசாமி முதன்மையாக ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அரசியல் மற்றும் வாழ்க்கைவரலாற்று நூல்களை மொழியாக்கம் செய்தவராகவும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு பாரதிதாசன் முதலிய நவீன படைப்பாளிகளையும் நாலடியார் போன்ற மரபிலக்கியங்களையும் மொழியாக்கம் செய்தவராகவும் அறியப்படுகிறார்.

நூல் பட்டியல்

தமிழ்
  • செய்தி உலகம், 1971
  • அன்னை தெரசா, 1976
  • குருநானக், சாகித்ய அகாதெமி,1978
  • கேரள வர்மா, சாகித்ய அகாதெமி,1980
  • வேற்றுமையில் ஒற்றுமை, 1981
  • ஆத்திசூடி(பாரதிதாசன்)- பெயர்ப்பும் விளக்கமும், 1982
  • இந்து மதம் பற்றி காந்தியார், 1983
  • மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன், 1984
  • இலக்கிய மலர்கள்,1985
  • தமிழ் நாடக வளர்ச்சி, 1988
  • தமிழ்ப் பேரகராதி தொகுதி 3, 1996
  • அறிவியல் நூல்கள் ஐந்து(மொழிபெயர்ப்பு) ஆக்சுபோர்டு,1997
  • மதுசாலா ஹர்வன்ஷராய் பச்சன் கவிதைப் பெயர்ப்பு,1998
  • தமிழுக்கு வந்த ஷேக்ஸ்பியர் - இலக்கியத் திறனாய்வு, 2002
  • கீத கோவிந்தம் (தமிழ்க் கவிதை), 2009
  • கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள், 2009
  • கலைஞர் தந்த செம்மொழி (கட்டுரை), 2010
  • இலக்கியமும் அரசியலும் - கட்டுரை 2013
  • வண்ணக் கலவை - கட்டுரை,2013
  • அதிகாலை அய்ந்துமணிப் புரட்சி, 2023
  • தமிழில் தனிப்பாடல்கள்
  • பள்ளுப் பாடல்கள்- திறனாய்வு
  • கீதையின் மறுபக்கம்(சுருக்கம்), 2003
  • ஜெனரல் கரியப்பா, 2025
  • அகநானூறு - ஆங்கில உரைநடை
  • இறையனார் களவியல்
ஆங்கிலம்
  • Selected Poems of Wordsworth, 1973
  • Utopia(Ed), 1974
  • Bharatidasan - A critical perspective (Ed), 1991
  • Life and works of Bharatidasan, 1995
  • Shakespeare in Tamil version - Literary criticism, 1998
  • Cankat - Tamil (Translation), 1999
  • Bhagavat Gita - Critical Study (Translation), 2000
  • English for Seniors, 2003
  • Professional Ethics, 2004
  • Improve your English, 2005
  • Tamil Civilization, Special Supplement, 2010
  • Women' Role in Indian Press - Ed, 2012
  • Ainguru nooru - In English, 2013
  • History of Sararsvathi Mahal, 2014
  • Ethical Treatise from Ancient Tamil, 2022
  • Naladiyar, (English Translation),2023
  • Ahananooru in English Prose
  • Tolkappiam - Eluttu Atikaram
  • Is there a God - Periyar(Translation), 1998
  • Periyarism, 2023
  • Viyarivaiyoor - Poems (English trans)
  • Vellicha Devadai - Poems (English trans)
  • Bharatidasan His Mind and Art, 2025

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Dec-2025, 09:43:57 IST