நோயல் நடேசன்
- நடேச என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நடேச (பெயர் பட்டியல்)
நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர். விலங்குகளுக்கான மருத்துவர். புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். உதயம் என்னும் மாத இதழை நடத்தியவர். புனைகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று நோயல் நடேசன் பிறந்தார். இயற்பெயர் நோயல் சின்னத்தம்பி நடேசன். ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பலகலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நோயல் நடேசனின் மனைவி பெயர் சியாமளா. மகன் பெயர் நவீன். மகள் பெயர் கிசானி.
நோயல் நடேசன், 1984 - 1987 காலப்பகுதியில் தமிழகத்தில் தங்கியிருந்தபோது, தமிழர் மருத்துவ சேவை என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தில் நோயல் நடேசனுடன் மருத்துவரான அவரது மனைவியும் பணியாற்றினார். 1987-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தார். இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 40 வருடங்கள் விலங்கு மருத்துவராக பணிபுரிந்து, ஓய்வு பெற்று, தற்போது மெல்பேர்னில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார்.
இதழியல்
நோயல் நடேசன் ஏப்ரல் 1984-ல் ' உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு வரை “உதயம்” பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார்.
இலக்கியம்
நோயல் நடேசன் முதலில் அனுபவக்கட்டுரைகளையும், அரசியல் குறிப்புகளையுமே எழுதிவந்தார். மே 1997-ல் 'உதயம்' பத்திரிகையில் எழுதிய 'நடுக்காட்டில் பிரேத பரிசோதனை' என்ற மிருக வைத்திய அனுபவக் கட்டுரையைத் தொடர்ந்து நோயல் நடேசனின் எழுத்துக்கள் அதிகம் வெளிவரத்தொடங்கின. "திடீரென நிகழ்ந்த விபத்தினால் பேசமுடியாமற்போன சிறுவனைப்போன்று நானும் எனது வாழ்விடத்தில் நடந்த சம்பவங்களை வெற்றுத்தாள்களில் கிறுக்கி வைத்திருந்தேன். பதினைந்து வருடங்களுக்கு முன்" என்று தனது எழுத்தின் தோற்றம் பற்றி நடேசன் வண்ணாத்திக்குளம் நாவல் – முன்னுரையில் சொல்கிறார்
1980-1983 ஜூலை வரையான காலத்தில், இலங்கையின் - மதவாச்சி பகுதியில் மிருக வைத்தியராக பணிபுரிந்த காலப் பின்னணியில் எழுதப்பட்ட நடேசனின் 'வண்ணாத்திக்குளம்; என்ற முதலாவது நாவல் 'மித்ர 'பதிப்பகத்தினால் வெளியானது. இந்நாவல் பின்னர் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. 'உதயம்' பத்திரிகையில் வெளிவந்த மிருகவைத்தியஅனுபவக் கட்டுரைகள் 2003 'வாழும் சுவடுகள்' என்ற பெயரில் புத்தகமாகியது. நோயல் நடேசனின் படைப்புகளில் தனித்தன்மை கொண்ட ஆக்கம் அசோகனின் வைத்தியசாலை.
அமைப்புப் பணிகள்
ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர்களில் நடேசனும் ஒருவர்.
இலக்கிய இடம்
தான் பணி செய்த விலங்குமருத்துவத்துறை சார்ந்த அனுபவங்களை அபுனைவுகளாகவும் புனைவுகளாகவும் எழுதியதன் ஊடாக நோயல் நடேசன் தமிழ் இலக்கியப் பரப்பில் பரவலாக அறிமுகமானார். ஈழத்து அரசியல்சூழலில் வன்முறைக்கும், கருத்தியல் ஒடுக்குமுறைக்கும் எதிரானக அவர் முன்வைத்த அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த எழுத்துக்கள் அவருக்கு எதிர்ப்பையும் கவனத்தையும் உருவாக்கின. பின்னர் அவருடைய இலக்கியப் படைப்புகளில் இவ்விரு உலகங்களும் இணைகின்றன. விலங்குகளின் உலகை உருவகமாகக் கொண்டு அரசியலையும் பண்பாட்டையும் பேசும் அசோகனின் வைத்தியசாலை நோயல் நடேசனின் முக்கியமான படைப்பு.
வாழும்சுவடுகள் நூல் பற்றி கோவை ஞானி குறிப்பிடும்போது - “இந்தத் தொகுப்பு எஸ்பொ முதலியவர்கள் சுட்டிக்காட்டியபடி தமிழுக்கு ஒரு புதுவரவு என்பதில் ஐயமில்லை" - என்று தெரிவித்துள்ளார். 'யாழ்ப்பாணத்தில் பிறந்து கண்டியில் உயர் கல்வி கற்று புலம்பெயர்ந்து இப்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நடேசன் அவர்கள் மனித நேயத்தைத் தேடும் தனது எழுத்துக்கள் மற்றும் மனித நேயப்பணிகள் மற்றும் மனித உரிமைப்பணிகள் மூலம் மனிதனால் சாத்தியமாகக் கூடிய சகலதினதும் எல்லைகளை விஸ்தரிக்கும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றார்' என்று தெளிவத்தை ஜோசப் குறிப்பிடுகிறார். நடேசன் தமிழ் புலம்பெயர்ந்த இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறார்.
படைப்புகள்
சிறுகதை தொகுப்புகள்
- மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை மலைகள் பதிப்பகம்)
- அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
- பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)
நாவல்கள்
- வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
- உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
- அசோகனின் வைத்தியசாலை (2016 - கருப்பு பிரதிகள்)
- கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
- பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு)
பயண இலக்கியம்
- நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்)
கட்டுரைத் தொகுப்புகள்
- வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்)
- வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்)
- வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்)
- எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்)
- வண்ணாத்திக்குளம் - சிங்களத்தில் “சமணல வெவ” என்ற பெயரிலும் மடுல் கிரிய விஜயரட்ணவினால் மொழிபெயர்க்கப்பட்டது)
- உனையே மயல் கொண்டு - Lost in you (மொழிபெயர்த்தவர் - பேராசிரியர் திருமதி பார்வதி வாசுதேவா)
- அசோகனின் வைத்தியசாலை - King Asoka's Veterinary Hospital (மொழிபெயர்த்தவர் திரு. கிருஷ்ண பிரசாத்)
விருதுகள்
- வண்ணாத்திக்குளம் - சின்னப்பா பாரதி விருது - 2012
- மலேசியன் ஏயர்லைன்370 - திருப்பூர் இலக்கிய விருது - 2015
- அந்தரங்கம் - திருப்பூர் இலக்கிய விருது - 2022
உசாத்துணை
- நோயல் நடேசனின் இணையப்பக்கம்
- "நைல் நதிக்கரையோரம்" குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
- மெல்லுணர்வு - அனோஜன் பாலகிருஷ்ணன்
- அனோஜன் பாலகிருஷ்ணன் தளம் நோயல் நடேசன்
- நோயல் நடேசனின் அசோகனின் வைத்தியசாலை முன்னுரை, ஜெயமோகன்
- தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேன் -நடேசன் நேர்காணல்
- தெளிவத்தை ஜோசப் நோயல் நடேசன் கதைகள் பற்றி
- பண்ணையில் ஒரு மிருகம் மதிப்புரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:39:14 IST