நீத்தல் விண்ணப்பம்
நீத்தல் விண்ணப்பம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் ஆறாவது பிரபந்தம். இறைவனைத் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும்படி விண்ணப்பம் செய்து பாடப்பட்ட 50 பாடல்களைக் கொண்டது.
ஆசிரியர்
நீத்தல் விண்ணப்பம் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் ஆறாம் பிரபந்தம். மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர். திருவாசகமும் திருக்கோவையாரும் அவர் இயற்றியவை.
பின்னணி
திருப்பெருந்துறையில் குருமூர்த்தியாக மாணிக்கவாசகருக்கு உபதேசம் அளித்த பின் சிவபெருமான் கயிலைக்குத் திரும்பினார். அவருடன் உபதேசம் பெற்ற 999 மாணவர்களையும் பொய்கையில் தீ தோன்றும் போது அதில் மூழ்கி சிவபதம் அடைய உத்தரவிட்டார். மாணிக்கவாசகரை பூமியில் இன்னும் சில காலம் வாழ்ந்து சிவநெறியைப் பரப்ப ஆணையிட்டார். 999 மாணவர்களும் தீயில் மூழ்கி மறைந்தபின் மாணிக்கவாசகர் கலக்கமடைந்தார். சிவத்தலங்களுக்கு யாத்திரை செய்தார். உலகப் பற்றினால் ஆட்கொள்ளப்படுவோமோ என அஞ்சி தன்னை விட்டு நீங்க வேண்டாம் என்று சிவபெருமானை வேண்டிப் பாடியதே நீத்தல் விண்ணப்பம். நீத்தல் விண்ணப்பம் திருப்பெருந்துறையில் பாடப்பட்டது.
நூல் அமைப்பு
நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டது. 'கடையவனேனை' எனத் தொடங்கி அந்தாதித் தொடையில் அமைந்த பாடல்கள் 'கடையவனே' என மண்டலித்து முடிகின்றன.
நீத்தல் என்ற செயல் இங்கு இறைவனைப் பற்றியது. மாணிக்கவாசகரை வேண்டாமென்று நீத்தல் செய்யும் ஆற்றலுடையவன், தலைவனாகிய இறைவனே. ஆதலின், தாம் எவ்வாறு இருப்பினும் தம்மைக் கைவிட்டு விடவேண்டா என்று விண்ணப்பம் செய்கிறார். ஆதலின், இப்பகுதி நீத்தல் விண்ணப்பம் என்ற பெயரைப் பெற்றது.
திருச்சதகம் மாணிக்கவாசகர் ஞானாசிரியனாக சிவபெருமானை அடைந்த பேரின்பப் பெறுநிலையப் பாடுகிறது. நீத்தல் விண்ணப்பத்தில் அப்பெருநிலையை மீண்டும் பெறத் தடையாக உள்ள உடலைத் துறக்க முடியவில்லையே என வருந்தி, சிற்றின்பங்களுக்கு ஆட்படாமல் காக்க வேண்டுகிறார் மாணிக்கவாசகர்.
நீத்தல் விண்ணப்பத்தில் வரும் ஐம்பது பாடல்களிலும் 'என்னை விட்டுவிடாதே' என்ற ஒரே கருத்து மீட்டும் மீட்டும் பேசப்படுகிறது. நின் அடியார் கூட்டத்தோடு செல்லாமல் இவ்வுலகிடை உடலோடு தங்கிவிட்ட என் தவற்றை நினைந்து மனங்குழைந்து பெருந்துயரம் அடைகின்றேன். தம் பிழையை நினைந்து வருந்தும் ஒருவரை மன்னித்து ஏற்றுக்கொள்ளுதல் பெரியோனாகிய நினது கடமையல்லவோ' எனவே, என்னை விட்டுவிட வேண்டா என நீத்தல் விண்ணப்பம் முடிகிறது.
பாடல் நடை
என்னைத் தாங்கிக் கொள்ளே
கடையவனேனைக் கருணையினால்
கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே விட்டிடுதி கண்டாய்
விறல் வேங்கையின் தோல்
உடையவனே மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
சடையவனே தளர்ந்தேன் எம்பிரான்
என்னைத் தாங்கிக்கொள்ளே 1
என் மணியே, எனை விட்டிடுதி
மறுத்தனன் யான் உன் அருள்
அறியாமையின் என் மணியே
வெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்
வினையின் தொகுதி
ஒறுத்து எனை ஆண்டுகொள் உத்தரகோச
மங்கைக்கு அரசே
பொறுப்பர் அன்றே பெரியோர் சிறு
நாய்கள் தம் பொய்யினையே 6
தயிரில் மத்தாகச் சுழலும் உயிர்
குலம் களைந்தாய் களைந்தாய் என்னைக்
குற்றம் கொற்றச் சிலை ஆம்
விலங்கல் எந்தாய் விட்டிடுதி கண்டாய்
பொன்னின் மின்னு கொன்றை
அலங்கல் அம்தாமரை மேனி அப்பா
ஒப்பு இலாதவனே
மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில்
பொரு மத்து உறவே
உசாத்துணை
- திருவாசகம் நீத்தல் விண்ணப்பம்-பண்டிதமணி கதிரேசன் செட்டியார், ஆர்கைவ் வலைத்தளம்
- திருவாசகம் சில சிந்தனைகள்-2-அ.ச. ஞானசம்பந்தன், தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:26:49 IST