under review

நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை

From Tamil Wiki
நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை

நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை (1914) சிந்து இலக்கிய நூல்களுள் ஒன்று. நீதிச்சிந்து என்னும் வகையில் இயற்றப்பட்ட இந்நூல், குடும்பத்து மருமகள்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கூறுகிறது. ‘தடிக்கழுதைப் பாட்டு’ என்ற மற்றொரு பெயரும் இந்நூலுக்கு உண்டு. இந்நூலைப் பதிப்பித்தவர் டி. கோபால் நாயகர்.

பிரசுரம், வெளியீடு

நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலையை (தடிக்கழுதைப் பாட்டு), தனது சென்னை என்.சி. கோள்டன் அச்சியந்திர சாலை மூலம் பதிப்பித்தவர் திருப்போருர் டி. கோபால் நாயகர். இந்நூல் தொடர்ந்து சிறுமணவூர் முனிசாமி முதலியார் உள்ளிட்ட பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

நூல் அமைப்பு

நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை, சிந்துக் கண்ணிகளால் இயற்றப்பட்டது. இந்நூலில் 24 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு குடும்பத்தில் உள்ள நல்ல மருமகளின் நற்செயல்களையும், தீய மருமகளின் பண்பற்ற செயல்களையும் மாறிமாறிக் கூறி மருமகள் எப்படியிருக்க வேண்டும் என்பதையும், எப்படி இருக்கக் கூடாது என்பதையும் எடுத்துரைக்கிறது. நல்ல மருமகளைப் பதிவிரதை என்றும் தீய மருமகளைத் தடிக்கழுதை என்றும் இந்நூல் குறிப்பிடுகிறது. கொச்சைச் சொற்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள்

அன்னைத்தந்தைகளை தெய்வமென்றேதினம்
அன்பாயுபசரிப்பாள் பதிவிரதை
இன்னிலத்தில்கெட்ட துரோகியெனும்பேரை
ஏற்றுக்கொள்வாள்மூட தடிக்கழுதை

சொந்தக்கணவனொரு அந்தகனானாலும்
வந்தனைசெய்திடுவாள் பதிவிரதை இல்லாமல்
சிந்தையில் வெவ்வேறு எண்ணத்தால்கணவனை
சீறித்திரிபவள் கெட்ட தடிக்கழுதை.

இரப்பவர்க்குப்பிட்சை யிடவேணுமென்பதை
எண்ணிநடந்திடுவாள் பதிவிரதை இல்லாமல்
வரக்கண்டவுடனிங்கு வைத்திருக்குதோவென்று
வாதுசெய்தோட்டுவாள் தடிக்கழுதை

பணிகளிருந்தாலும் அணிந்துவெளியில் வந்து
பாதையில்நடக்காள் பதிவிரதை இல்லாமல்
துணியாகிலும் ஒழுங்கா யலங்கரித்துக்கொண்டு
சொகுசாய்திரிந்திடுவாள் தடிக்கழுதை

இன்னில் நடத்தையை சொன்னேன்முனிசாமி
இதைத்தெரிந்துகொள்வாள் பதிவிரதை இல்லாமல்
என்னபாட்டு இதை அச்சிலிட்டாரென்று
என்னைப் பழிப்பவளே தடிக்கழுதை.

மதிப்பீடு

பதிவிரதைக்குரிய கடமையையும் பொறுப்பற்ற மனைவியின் இயல்பையும் நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை நூல் கூறுகிறது. அத்துடன் 'அறஞ்செய விரும்பு', 'உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு', 'ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்' போன்ற நீதிமொழிகள் மாற்றமின்றி எடுத்தாளப்பட்டுள்ளன. அக்காலத்தில் பெண்கள் பற்றிய சிந்தனை மக்களிடையே எப்படி இருந்தது என்பதற்குச் சான்றாக, தடிக்கழுதைப் பாட்டு என்னும் நீதிச்சிந்துயென்னும் பெண் புத்தி மாலை நூல் அமைந்திருக்கிகிறது.

உசாத்துணை


✅Finalised Page