நான்காவது பரிமாணம்
நான்காவது பரிமாணம் (1991-1994) கலையிலக்கியச் சிற்றிதழ். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் நடத்தியது. க.நவம் இதன் ஆசிரியர்.
தொடக்கம்
நான்காவது பரிமாணம் கலை இலக்கியச் சிற்றிதழின் முதலாவது இதழ் கனடாவின் டொரெண்டோ நகரிலிருந்து 1991 செப்டெம்பர் மாதம் வெளிவந்தது. க. நவம் இதன் ஆசிரியர்.
தாயகம் (இதழ்) ஆசிரியர் ஜோர்ஜ் குருஷேவ் மற்றும் காலம் இதழ் ஆசிரியர் குழுவில் பின்னர் பங்களிப்பாற்றிய மூர்த்தி இருவரும் க.நவத்துடன் இணைந்து ஒரு இலக்கிய இதழ் கொண்டுவரத் திட்டமிட்டனர். முதல் இதழின் முகப்பு, இலச்சினைகள், உள்வடிவமைப்பு ஆகியவை மூர்த்தியால் செய்யப்பட்டன. ஆனால் முதல் இதழுடன் பிற இருவரும் விலகிக்கொள்ள க.நவம் மட்டும் இதழைத் தொடர்ந்து நடத்தினார். தட்டச்சு, ஒப்பு நோக்கல், சந்தா சேகரிப்பு, விநியோகம் போன்றவற்றை க.நவத்தின் மனைவி ஷியாமளா நவம் செய்தார்.
"பல்வேறு சமூக, அரசியல், பொருளாதாரக் காரணிகளின் உதைப்புக்களினால் இன்று சர்வதேச இனமாகப் பரிணாமம் அடைந்துவிட்ட எம்மவரின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் புதிய வாழ்க்கை அனுபவங்களையும் கலாச்சாரப் பதிவுகளையும் பாதிப்புகளையும் பிரதிபலிக்கும் தளமாக நான்காவது பரிமாணம் பரிணமிக்கும்" என கொள்கை அறிவிப்புடன் வெளிவந்தது.
வெளியீடு
நான்காவது பரிமாணம் 1991 செப்டெம்பர் முதல் 1992 மே வரை மாத இதழாக வெளிவந்தது. மீண்டும் 1993 ஏப்ரல் தொடக்கம் 1994 ஏப்ரல் வரை காலாண்டு இதழாக வெளிவந்தது.
பங்களிப்பாளர்கள்
நான்காவது பரிமாணம் இதழுக்கு இலங்கையில் இருந்து படைப்புகளைச் சேகரிக்க தெணியான் உதவினார். இலங்கையில் இருந்து கீழ்க்கண்டோர் எழுதினார்கள்
- சபா ஜெயராசா
- சோ. கிருஷ்ணராஜா
- செ. யோகராசா
- என். சண்முகலிங்கன்
- இளங்கீரன்
- தெணியான்
- குப்பிளாண் ஐ. சண்முகம்
- செ. குணரத்தினம்
- எஸ்.எல்.எம். ஹனிஃபா
- அந்தனி ஜீவா
- எம்.கே. முருகானந்தன்
- ராஜ ஸ்ரீகாந்தன்
- கண மகேஸ்வரன்
- புலோலியூர் ஆ. இரத்தினவேலோன்
- முல்லை அமுதன்
- சோலைக்கிளி
- ரி.எல். ஜஃபர்கான்
- வாசுதேவன்
- செல்வி
- இளைய அப்துல்லா
- கௌரி சுப்பிரமணியம்
- எம்.எல்.எம். அன்ஸார்
- நிந்தாமணாளன்
- ஈழக்கவி
தமிழகத்தில் இருந்து ப. திருநாவுக்கரசு உதவியுடன் படைப்புகள் பெறப்பட்டன
- சுப்ரபாரதிமணியன்
- விக்ரமாதித்யன்
- பாவண்ணன்
- விழி பா. இதயவேந்தன்
- த. பழமலய்
- மு.மேத்தா
- எஸ்.வி.ராஜதுரை
- வ. கீதா
- வைக்கம் முகமது பஷீர் (மொழிபெயர்ப்பு – ரவி இளங்கோவன்)
- கோபிகிருஷ்ணன்
- ப. சோழநாடன்
ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றன.
ஐரோப்பாவில் இருந்து கீழ்க்கண்டோர் பங்களிப்பாற்றினர்
- எஸ். அகஸ்தியர்
- கலைதாசன்
- ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
- க. ஆதவன்
- கி.பி. அரவிந்தன்
- பார்த்திபன்
- அருந்ததி
- கமலா முகுந்தன்
கனடாவில் இருந்து எழுதியவர்கள்
- த. சிவதாசன்
- நிலா குகதாசன்
- சேரன்
- பா.அ. ஜயகரன்
- அளவெட்டி சிறீசுக்கந்தராசா
- மொனிக்கா
- கௌரி
- திலீபன்
- ரவிஅமிர்தன்
- நாவற்குழியூர் நடராஜன்
- சின்னையா சிவனேசன்
- இலங்கையன்
- டி.பி.எஸ். ஜெயராஜா
- சபா வசந்தன்
- நளாயினி மூர்த்தி
- சுதர்ஷனா
- சம்பு
- வே. ராஜலிங்கம்
- காங்கயி
- புஷ்பா கிரிஸ்ரி
- அ. அருணன்
- வீணைமைந்தன்
- மாயவன்
- ஷியாம்
நான்காவது பரிமாணம் இதழ் சக்கரவர்த்தி, நிலா குகதாசன், அ. கந்தசாமி, நளாயினி மூர்த்தி போன்ற பல புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்தது.
க. நவம் மாலனுடனும், தஞ்சை பிரகாஷ் கே. டானியலுடனும் நிகழ்த்திய நீண்ட நேர்காணல்கள் இதழில் வெளிவந்தன. சிவதாசனின் ‘மறுபக்கம்,’ சக்கரவர்த்தியின் ‘அந்தப்புரம்’ தொடர்கள் குறிப்பிடத்தக்கவையாக திகழ்ந்தன. சௌந்தர், புகழேந்தி ஆகியோரின் ஓவியங்கள் இடம்பெற்றன.
விவாதங்கள்
"இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும் என்னும் தலைப்பில் அவுஸ்திரேலியாவிலிருந்து லெ. முருகபூபதி எழுதிய கட்டுரை ஒன்றினை, வாதப் பிரதிவாதங்களை எதிர்பார்த்து நான்காவது பரிமாணம் வெளியிட்டிருந்தது. நண்பர் சபாலிங்கம் பாரிசில் படுகொலை செய்யப்பட்டமை, பத்திரிகைச் சுதந்திரத்தையும் தனிமனித ஜனநாயக உரிமையையும் மீறும் செயல் என நான்காவது பரிமாணம் கண்டனம் தெரிவித்திருந்தது. இவற்றைத் தொடர்ந்து, அதில் வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் அந்நாளைய ஆயுதம் தாங்கிய ஆதிக்க சக்திகளால் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கப்பட்டன. நா.ப.வின் யாழ்ப்பாண விநியோகம் தடை செய்யப்பட்டது. பல ஆக்கங்களைக் கடுமையாக விமர்சித்தும், நா.ப. வின் செயற்பாடுகளைக் கண்டித்தும் நீண்டதொரு எச்சரிக்கைக் கடிதம் வந்தது" என ஆசிரியர் நவம் குறிப்பிடுகிறார்.
பதிப்பகம்
நான்காவது பரிமாணம் பதிப்பகம் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.
நிறுத்தம்
1994 ஏப்ரலில் வெளிவந்த தனது 13-வது இதழுடன் நான்காவது பரிமாணம் நின்றுவிட்டது.
ஆவணம்
நான்காவது பரிமாணம் இதழ்கள் எண்ணிம வடிவில் நூலகம் இணையப்பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[1]
இலக்கிய இடம்
கனடா நாட்டுச் சூழலில் இலங்கை அரசியலின் அனைத்து தமிழ் தரப்பினரின் குரலாகவும் ஒலித்த இதழ் நான்காவது பரிமாணம். தமிழகத்தின் இலக்கியச் சூழலுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்குமான உரையாடற்களமாகவும் திகழ்ந்தது. 'புலம்பெயர் சூழலிலான இதழியல் துறைக்கு ஒரு தொடக்கப் புள்ளியாகவும் முன்னோடியாகவும் நான்காவது பரிமாணம் இருந்தது' என ஆசிரியர் நவம் குறிப்பிடுகிறார்.
உசாத்துணை
- க.நவம் இணையப்பக்கம்
- நான்காவது பரிமாணம் முதல் இதழ் ஆசிரியர்பக்கம்
- நான்காவது பரிணாமம் வரலாற்றுக்குறிப்பு க.நவம்
- நூலகம் நான்காவது பரிமாணம் பக்கம்இதழ்கள்
- கனடிய தமிழ் இலக்கிய இதழ்கள் க.நவம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Mar-2025, 09:42:50 IST