நாகம்போத்தனார்
நாகம்போத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
நாகம்போத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். போத்தன் என்னும் இயற்பெயர் கொண்டவர். நாகன் என்பது தந்தையின் பெயர்.
இலக்கிய வாழ்க்கை
நாகம்போத்தனார் பாடிய பாடல் குறுந்தொகையில் 282-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. கார்காலத்தில் திரும்புவதாக சொல்லி பொருளீட்டச் சென்ற தலைவன் உரிய நேரத்தில் வாராமை கண்டு வருந்திய தலைவியை ஆற்றுப்படுத்த தோழி உரைப்பதாக பாலை திணையில் அமைந்த பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பொருளீட்டுவதற்காக தலைவன் சென்றுள்ள செம்மணல் மேட்டு பாதையில் வரகு பயிரின் நாற்றுகள் விளைந்து காற்றில் ஆடும். வரகு நாற்றுகளில் கருமை பச்சை நிறம் கொண்ட இளஞ்செடியின் ஓரிலையை தின்று மான்கன்று அன்றைய நாளுக்கான பசியாறும்.
- உவமை: நீர்வளம் மிக்க மலைபக்கத்து குளத்தில் மலர்ந்து காம்பில் இருந்து உதிரும் வெண்கூதாளம் பூக்கள் தலைவியின் கைவளையல்கள் நெகிழ்வதை தலைவருக்கு நினைவூட்டும்.
பாடல் நடை
குறுந்தொகை - 282
- திணை: பாலை துறை: வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.
செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போலச்
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- குறுந்தொகை - 282:nallakurunthokai
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:25:25 IST