under review

நப்பாலத்தனார்

From Tamil Wiki

நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

நப்பாலத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரியின் அவையகப் புலவர்.

இலக்கிய வாழ்க்கை

நப்பாலத்தனார் பாடிய பாடல்கள் (5, 20) நற்றிணையில் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 52-ம் பாடல் தலைவியை பிரிந்து சென்று பொருள் தேட சொல்லும் தன் நெஞ்சத்திடம் தலைவியுடன் கூடி இருக்கும் இன்பத்தை தனக்குத்தானே தலைவன் கூறிக் கொள்வதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. நற்றிணை 240 -ம் பாடல் பொருளீட்டுவதற்கப் பிரிந்து சென்றிருக்கும் தலைவனை நினைத்து வருந்தும் தலைவியின் குரலாகவும் தலைவியை பிரிந்த தலைவனது ஏக்கமாகவும் இருவரும் தமக்குத்தாமே கூறி கொள்வதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

நற்றிணை - 52
  • காட்டு மல்லிகைக் கொடியில் மலர்ந்த மல்லிகை பூவையும் தூய பொற்றகடு போல மஞ்சள் நிறத்தில் மின்னும் பாதிரி பூவையும் எதிர் எதிராக வைத்து தொடுத்து சரமாக்கி தலை சூடிக்கொள்வர் மகளிர். அவர்களின் மார்பில் அழகு தேமல் காணப்படும்.
  • வில்திறன் மிக்க ஓரி மன்னன் கடுமையான போர் செய்து மிக்க பொருளை ஈட்டும் திறன் படைத்த வல்லமை மிக்கவன்.
  • அப்படிப்பட்ட ஓரியின் கையால் பொருட்செல்வம் கிடைக்கப்பெற்றாலும் ஆடவர் தலைவன் தன் தலைவியை நீங்கிச் செல்லான்.
நற்றிணை - 240
  • மகளிர் கூர்மையான அழகிய வெண்ணிற பற்களையும் தேசலான நெற்றியையும் கொண்டிருப்பர்.
  • தலைவன் செல்லும் காட்டுவழி வறட்சியான பாலை நிலமாகும். பசுக்களை மேய்க்கும் ஆயர் வெட்டிய கிணற்றில் மீந்திருக்கும் கையளவு நீரை வரிசையாக நின்று யானைகள் அருந்தும்படிக்கு கொடிய வெப்பம் வீசும் வழியாகும்.
  • இப்படிப்பட்ட வழியில் பொருளீட்டச் சென்று பிரிந்திருக்கும்படி செய்த இறைவனும் கூடல் ஏற்படாது தவிக்கும் பிரிவு துன்பத்தை தானும் அனுபவிக்கட்டும் என ஏசப்படுகிறார்.

பாடல் நடை

நற்றிணை - 52

  • திணை: பாலை துறை: தலைமகன் செலவழுங்கியது

மாக்கொடி அதிரல் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர்மலர் வேய்ந்த கூந்தல்
மணங்கமழ் நாற்றம் மரீஇ யாமிவள்
சுணங்கணி ஆகம் அடைய முயங்கி
வீங்குவர்க் கவவின் நீங்கல் செல்லேம்
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும்
பிரிந்துறை வாழ்க்கை புரிந்தமை யலையே
அன்பிலை வாழியெம் நெஞ்சே வெம்போர்
மழவர் பெருமகன் மாவள் ஓரி
கைவளம் இயைவ தாயினும்
ஐதேகு அம்ம இயைந்துசெய் பொருளே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Mar-2025, 11:57:57 IST