த.கோ. பரமசிவம்
- பரமசிவம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பரமசிவம் (பெயர் பட்டியல்)
த.கோ. பரமசிவம் (பிறப்பு: அக்டோபர், 11, 1949) சுவடியியல் அறிஞர். தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித் துறையில் இணைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பல ஆய்வு நூல்களை எழுதினார். பதிப்பித்தார். பல சமய மாநாடுகளை, இலக்கியக் கருத்தரங்குகளை, அறக்கட்டளை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
த.கோ. பரமசிவம், அக்டோபர் 11, 1949 அன்று, வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள களம்பூரில் பிறந்தார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சுவடியயிலில் பயிற்சி பெற்றார். தொல்லியல், கல்வெட்டியல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்றார். முனைவர் பட்டம் பெற்றார். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும், தில்லிப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சுவடிப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர், புலத் தலைவர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் தொடங்கி பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார். மண வாழ்க்கை விவரங்களை அறிய இயலவில்லை.
இலக்கிய வாழ்க்கை
த.கோ. பரமசிவம், தமிழ்ச்சுவடி விளக்க அட்டவணையைப் (1-6 தொகுதிகள்) பதிப்பித்தார். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சிவப்பிரகாசர் ஆகியோர் மீதான ஆய்வு மாலை நூல்களைப் பதிப்பித்தார். பல்வேறு நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். பல்வேறு சுவடி விளக்க அட்டவணைகளை வெளிக் கொண்டுவந்தார். 'இலக்கணச் சூடாமணி' என்னும் இலக்கண நூலைப் பதிப்பித்தார். முனைவர் மோ.கோ. கோவைமணியை ஊக்குவித்தார். கோவைமணியின் முனைவர் பட்ட ஆய்வுக்கு வழிகாட்டிப் பேராசிரியராகச் செயல்பட்டார்.
அமைப்புச் செயல்பாடுகள்
த.கோ. பரமசிவம், தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவராகப் பணியாற்றியபோது பல்வேறு கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தினார். 'சுவடிப்பதிப்பு வரலாறு' என்னும் தலைப்பில் மூன்று கருத்தரங்குகளை நடத்தினார். அவற்றில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் நூலாக வெளிவந்தன. 'சுவடிப்பதிப்பு நெறிமுறைகள்', 'மொழி வளர்ச்சியில் சுவடிப்பதிப்பு', 'பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் நூற்றாண்டு விழா' எனப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தினார்.
மதிப்பீடு
த.கோ. பரமசிவம், ஓலைச்சுவடிகளிலிருந்து ஆய்வு செய்து பல்வேறு நூல்களைப் பதிப்பித்தார். கள ஆய்வுகள் மூலம் அரிய பல சுவடிகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். ஓலைச்சுவடிகளிலிருந்து இலக்கணம், இலக்கியம், சமயம் சார்ந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். கல்வியாளர், ஆய்வாளர், எழுத்தாளர், சுவடியியல் அறிஞர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- நோயும் மருந்தும்
- நற்றிணை மூலமும் உரையும்: எடுத்துக்காட்டுப் படிவம்
- சுவடிப் பதிப்பு நெறிமுறைகள்
- இலக்கணச் சூடாமணி
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-May-2026, 17:18:22 IST