under review

தே. லூர்து

From Tamil Wiki
முனைவர், பேராசிரியர் தே. லூர்து (படம் நன்றி: முனைவர் மு. இளங்கோவன் தளம்)

தே. லூர்து (ஜூன் 26, 1937 - ஏப்ரல் 05, 2008) தமிழ்ப்பேராசிரியர். நாட்டாரியல் ஆய்வாளர், எழுத்தாளர், இதழாளர். நாடோடி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த துறைக்கு நாட்டாரியல் என்ற பெயரை அளித்தவர். நாட்டாரியல் துறை வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்..

பிறப்பு, கல்வி

தே. லூர்து, ஜூன் 26, 1937 அன்று, பர்மாவில் உள்ள தாந்தபீன் என்ற ஊரில் பிறந்தார். அவரது முன்னோர்களின் ஊர் தேவகோட்டைக்கு அருகில் உள்ள வடக்கு ஆண்டாவூரணி. பர்மாவில் சவரிமுத்து என்ற ஆசிரியரிடம் தனிக் கல்வியாக வாய்பாடுகள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விவேகசிந்தாமணி உள்ளிட்ட இலக்கியங்களைக் கற்றார். ரங்கூன் ஆண்கள் பள்ளியில் தொடக்கக் கல்வி கற்றார். தேவகோட்டை தேபிரித்தோ உயர்நிலைப்பளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். திருச்சி தூயவளனார் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். இளங்கலை பொருளாதாரம் பயின்றார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் கற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 'தமிழ்ப்பழமொழிகள் ஓர் ஆய்வு' என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

தே. லூர்து பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியர் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றினார். 24 ஆண்டுகள் தமிழ்த்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். தே. லூர்து மணமானவர்.

நாட்டார் வழக்காற்றியல் நூல்

நாட்டாரியல் ஆய்வு

தே. லூர்து, தூய சவேரியர் கல்லூரியில் 1987-ல் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தினைத் தொடங்கி, அதன் இயக்குநராகச் செயல்பட்டார். நாட்டுப்புறவியலுக்குத் தனித் துறையை உருவாக்கி பல மாணவர்களை இத்துறையில் கற்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஊக்கப்படுத்தினார். நாடோடி இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவந்த துறைக்கு நாட்டாரியல் என்ற பெயரைச் சூட்டினார். நாட்டாரியல் குறித்த ஆவணக்காப்பகம் ஒன்றை உருவாக்கினார். ஒளிப்படங்கள், ஒலி-ஒளிக்காட்சிகள், நூலகம் அமைத்தார்.

நாட்டுப்புறவியல் சார்ந்த பல்வேறு பயிற்சிப் பயிலரங்குகளை நடத்தினார். நாட்டார் வழக்காற்றியல் துறை சார்ந்த மேனாட்டு அறிஞர்கள் பலரை அழைத்து வந்து தமிழகத்தில் பலருக்குப் பயிற்சியளிக்கச் செய்தார். வெளிநாடு வாழ் நாட்டார் இயல் அறிஞர்களான ஆர்ச்சர் டோலர், ஆலன் டண்டிஸ், வில்லியம் பாஸ்கம், லாரி ஹாங்கோ போன்ற அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களிடமிருந்து துறை சார்ந்த பல்வேறு கட்டுரைகளைப் பெற்று வெளியிட்டார். தான் சேகரித்து வைத்திருந்த நூல்களைத் தாம் உருவாக்கிய நாட்டார் வழக்காற்றியல் மைய நூலகத்திற்கு வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

தே. லூர்து, நாட்டாரியல் சாய்ந்த பல ஆய்வுகளை முன்னெடுத்தார். நாட்டார் வழக்காற்றியல், பழமொழிகள், நாட்டுப்பு மக்கள், கலை, இலக்கியம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து பல்வேறு ஆய்வு நூல்களை, கட்டுரைகளை எழுதினார்.

நாட்டுப்புற மக்களின் பயன்பாட்டில் உள்ள பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள், புராணக்கதைகள் குறித்து ஆய்வு செய்து தே. லூர்து எழுதிய 'நாட்டார் வழக்காறுகள்' நூல் முக்கியமான ஆய்வு நூலாக அறியப்படுகிறது.

இதழியல்

தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழகம் வெளியிட்ட நாட்டார் வழக்காற்றியல் ஆண்டிருமுறை இதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார்.

பொறுப்பு

  • நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுக் கழகச் செயலாளர்

விருதுகள்

  • தமிழக அரசின் குறள் பீட விருது (2000)

மறைவு

தே. லூர்து, ஏப்ரல் 05, 2008 அன்று காலமானார்.

மதிப்பீடு

தே. லூர்து, பேராசிரியர் நா. வானமாமலையைத் தனது முன்னோடியாகக் கொண்டு செயல்பட்டார். நாட்டாரியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த நா.ராமச்சந்திரன், ஞா.ஸ்டீபன் போன்றோர் லூர்துவின் மாணவர்கள். தமிழகம் மட்டுமன்றி அயல்நாட்டினர் பலரும் தமிழகத்தில் நாட்டுப்புற ஆய்வுகளை மேற்கொள்ள துணைநின்றார். ஆய்வுகள் மூலமும் நூல்கள் மூலமும் நாட்டார் வழக்காற்றியலுக்கு மிக முக்கியப் பங்களித்த முன்னோடித் தமிழறிஞர்களுள் ஒருவராக தே. லூர்து மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம்
  • நாட்டார் வழக்காற்றியல் கள ஆய்வு
  • தமிழ்ப்பழமொழிகள்: அமைப்பு, பொருண்மை, செயல்பாடு
  • சூழலியம் பழமொழிகளை முன்வைத்து
  • நாட்டார் வழக்காற்றியல் சில கோட்பாடுகள்
  • நாட்டார் வழக்காற்றியல் சில அடிப்படைகள்
  • நாட்டார் வழக்காற்றியல்: ஆய்வுகள்

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:10:37 IST