ஞா. ஸ்டீபன்
ஞா. ஸ்டீபன் (முனைவர் ஞா. ஸ்டீபன்; பேராசிரியர் ஞா. ஸ்டீபன்; .ஞானசெல்வமணி ஸ்டீபன்) தமிழ்ப் பேராசிரியர். நாட்டாரியல் ஆய்வாளர். எழுத்தாளர். நாட்டுப்புற இலக்கியம் சார்ந்த பல நூல்களை எழுதினார். தேசியக் கருத்தரங்குகள் பலவற்றை ஒருங்கிணைத்து நடத்தினார். 'பண்பாட்டு வேர்களைத் தேடி' எனும் ஞா. ஸ்டீபனின் நூல், நாட்டார் வழக்காற்று ஆய்வாளர்களால் முக்கிய நூலாகக் கருதப்படுகிறது.
பிறப்பு, கல்வி
ஞா. ஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், கருங்கல்லில் சா. ஞானசெல்வமணி - சு.சொர்ணத்தங்கம் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை முடித்த இவர், மார்த்தாண்டம் கிறித்துவக் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் பயின்று ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
கல்விப் பணிகள்
ஞா. ஸ்டீபன், சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றினார். 1992-ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறை ஆய்வு மையத்தில் களப்பணியாளராகவும், ஆவணக்காப்பாளராகவும் பணிபுரிந்தார். 1995 முதல் 1998 மார்ச் வரை தற்காலிக விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1998-ல், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். பேராசிரியராக உயர்ந்தார்.
ஞா. ஸ்டீபனின் வழிகாட்டலில் பல மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.
இலக்கிய வாழ்க்கை
ஞா. ஸ்டீபன், நாட்டார் இலக்கியம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுத் திட்டங்கள், ஆய்வுப் பணிகள் எனத் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா எனப் பல இடங்களில் கள ஆய்வுகப் பணிகளை முன்னெடுத்தார். மாணவர்களுடன் இணைந்து பல கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 12 தேசியக் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தினார். கன்னியாகுமரி மாவட்டம் குன்னத்தூர் மக்களின் 'குன்னத்தூரார்' தொடர்பான நகைச்சுவைகளைச் சேகரித்து வெளிப்படுத்தினார். வட்டார வழக்குச் சொற்கள் பலவற்றைச் சேகரித்துத் தொகுத்தார்.
தனது ஆய்வு முடிவுகளை பல்வேறு இதழ்களில் கட்டுரைகளாக எழுதினார். ஞா. ஸ்டீபன், 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். நூல்கள் சிலவற்றை வெளியிட்டார்; சிலவற்றைப் பதிப்பித்தார்.
விருதுகள்
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் வழங்கிய 'சிறந்த கல்வியாளர்' விருது (2010)
- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அளித்த 'நா.வானமாமலை நினைவு இலக்கிய விருது (2010)
வாழ்க்கை வரலாறு
ஞா. ஸ்டீபனின் வாழ்க்கை வரலாற்றை ஆர். முத்துராஜன் எழுதினார். இந்நூலை 2015-ல், கலைஞன் பதிப்பகம், தமிழியல் துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயாவுடன் இணைந்து வெளியிட்டது.
மதிப்பீடு
ஞா. ஸ்டீபன், தென் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தகுந்த நாட்டுப்புறவியல் ஆய்வாளர்களுள் ஒருவர். ஆய்வாளர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் பல கருத்துகளைத் தனது ஆய்வு நூல்களில் வெளிப்படுத்தினார். இளம் ஆய்வாளர்கள் பலருக்குச் சிறந்த வழிகாட்டியாகச் செயல்பட்டார். "பேராசிரியர் ஞா. ஸ்டீபன் குமரி மாவட்ட மலைக்குடிகளைக் குறித்த நாட்டாரியல் ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்களிப்பாற்றியவர் [1]" என ஜெயமோகன் மதிப்பிட்டார்.
நூல்கள்
- கொக்கறை: காணிக்காரர் வாழ்வும் வழிபாடும்
- இலக்கிய இனவரைவியல்
- தமிழ்ச் சமூகத்தில் வாய் மொழிக் கதைகள்
- தொல்காப்பியமும் இனவரையியல் கவிதையியலும்
- அமைப்பியல்: கோட்பாடும் ஆய்வுகளும்
- வகைப்படுத்துதல்: முறையியல்களும் வகைமைக் கோட்பாடும்
- பண்பாட்டு வேர்களைத் தேடி
உசாத்துணை
- பேராசிரியர் ஞா. ஸ்டீபன், எழுத்தாக்கம்: ஆர். முத்துராஜன், கலைஞன் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2015
- ஞா. ஸ்டீபன் நூல்கள்: பனுவல் தளம்
- ஞா. ஸ்டீபன் உரை, யூ ட்யூப் தளம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 13:12:00 IST