under review

தி. அ. முத்துசாமிக் கோனார்

From Tamil Wiki
முத்துசாமி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்துசாமி (பெயர் பட்டியல்)
கோனார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கோனார் (பெயர் பட்டியல்)
தி.அ.முத்துசாமிக் கோனார்

தி.அ.முத்துசாமிக் கோனார் (1858- நவம்பர் 2, 1944) ( திருச்செங்கோடு அ. முத்துசாமிக் கோனார்) கொங்கு நாட்டு வரலாற்றாசிரியர். பதிப்பாளர். கொங்குமண்டல சதகம் என்னும் நூலை பதிப்பித்தவர்

பிறப்பு, கல்வி

இன்றைய நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 1858-ம் ஆண்டில் அர்த்தநாரிக் கோனாருக்கும் காத்தாயி அம்மாளுக்கும் தி.அ. முத்துசாமிக் கோனார் பிறந்தார். திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய பொன்னைய உபாத்தியாயரிடம் தமிழ் கற்றார். பிறகு தெலுங்கும் வடமொழியும் கற்றார். அட்டாவதானம், இசை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தார். யாழ்ப்பாணம் நா.கதிரைவேற் பிள்ளையிடமும் தமிழ் கற்றதாக கூறப்படுகிறது.

தனிவாழ்க்கை

தி.அ.முத்துசாமிக் கோனார் மலைப்படி அமைக்கும் ஆளாகச் சேர்ந்து, பின்னர் 'படிமேஸ்திரி' ஆனார்.1934 முதல் 1944 வரை கண்பார்வை இழந்து வாழ்ந்தார்.

இதழியல்

தி.அ.முத்துசாமிக் கோனார் விவேக திவாகரன் என்ற அச்சுக் கூடத்தைத் தொடங்கிக் கொங்குவேள், விவேக திவாகரன், கொங்கு மண்டலம் போன்ற இதழ்களை நடத்தினார்.

பதிப்புப் பணிகள்

குழந்தையானந்த தேசிகர் பாடிய 'அர்த்தனாரீசுர மாலை'யைக் கோனார் 1882-ல் பதிப்பித்தார். அந்நூலில் "இஃது பாடங்கள் தோறும் சீர்கள் மிகுந்துமிருந்ததைத் திருச்செங்கோடு தாலூகா படிமேஸ்திரி முத்துச்சாமி கோனாரவர்களால் பல பிரதிரூபங்களைக் கொண்டாராய்ந்து சுத்த பாடமாக்கி மேற்படியூர் அர்த்தநாரி முதலியார் கேட்டுக் கொண்டபடி" வெளியிட்டதாக குறிப்பு உள்ளது. அதே ஆண்டு 'கருணாகரமாலை' எனும் நூலைக் தி.அ. முத்துசாமிக் கோனார் பதிப்பித்தார். சிறிதும் பெரிதுமாகக் கோனார் பதிப்பித்த நூல்களில் இருபத்தைந்து நூல்கள் திருச்செங்கோட்டைப் பற்றியனவாகவே அமைந்துள்ளன.

இவை தவிர சர்க்கரை மன்றாடியார் காதல் (1913), சிவமலைக் குறிவஞ்சி (1918), பாம்பண கவுண்டர் குறவஞ்சி (1917), மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை (1916), பூந்துறைப்புராணம் (1917) கொங்கு மண்டல சதகம் (1923) எனப் பல நூல்களையும் பதிப்பித்தார். இவற்றில் கொங்கு மண்டல சதகம் கொங்கு வரலாற்றுக்கான ஆவணப்பதிவாக உள்ளது.

வரலாற்று எழுத்து

தி.அ.முத்துசாமிக் கோனார் 1934-ல் 'கொங்குநாடு' எனும் புத்தகத்தை வெளியிட்டார். அந்நூல் முழுமை பெறவில்லை. எழுபது வருடங்களுக்குப் பிறகு, 2004-ல் பெருமாள் முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கொங்குநாடு, புதுமலர்ப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்நூலின் முன்னுரையில் பெருமாள் முருகன் தற்போது நான்காம் பதிப்பாக வெளியாகியிருக்கும் கோவைக்கிழார் கோ.ம. இராமசந்திரன் செட்டியார் எழுதிய 'கொங்கு நாட்டு வரலாறு' நூலின் பதிப்பாசிரியர்கள் அதன் பதிப்புரையில், "கொங்கு நாட்டைப் பற்றி யாரும் எழுதவில்லை; கோவைக்கிழார் முன்கை எடுக்கிறார் என்று கூறுகின்றனர். இக்கருத்துத் தவறானது. கோவைக்கிழாரின் நூல் 1954-ல் வெளியானது. அதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே கொங்கு நாட்டு வரலாறு எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் முத்துச்சாமிக் கோனார் என்பதை இந்நூல் நிறுவும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்

கோனாரின் சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்டமையால் 'தக்கை இராமாயண'த்தைப் பதிப்பித்துப் பின் அச்சுப் பணி முடியும் முன்னர் கோபத்தில் அதைத் தீயிட்டு விட்டதாகத் தெரிகிறது என்று கு. மகுடீஸ்வரன் குறிப்பிடுகிறார்

முத்துசாமிக் கோனார், ஒரு நூலைப் பதிப்பிக்கும் முன், பதிப்பு நெறிமுறைப்படி அந்நூலுக்குரிய பல சுவடிகளைத் தேடியே பதிப்பித்தார். கொங்கு மண்டல சதகம் ஏட்டுச் சுவடி முதலில் கிடைத்தபோது குறைப் பிரதியாக 40 செய்யுள்களுடன் இருந்தது. பின்னர் பல இடங்களில் தேடியதன் பயனாக 5 குறைப் பிரதிகளும் 6 முழுமையான பிரதிகளும் கிடைத்தன.

பதிப்பு நெறி

தி.அ.முத்துசாமிக் கோனார் ஒரு நூலைப் பதிப்பிக்கும்போது, அதற்கு ஆதாரமான பல செய்திகளையும் திரட்டித் தந்தார். கொங்கு மண்டல சதகம் சம்பந்தமாக, "கோயில் பூசகர், மாணிக்கத்தாள், சாசனம் (பட்டயம்), நாட்டுக் குருக்கள், நாட்டுப் புலவர்கள் இவர்களைத் தேடிக் கண்டு கேட்டுச் சில ஒருவாறு விளங்கின. சங்க நூல் பதிப்புகள், மதுரை செந்தமிழ்ப் பிரசுரங்களிற்சில, நமது ராஜாங்கத்தாரால் எடுத்து வெளிப்படுத்தியுள்ள சிலாசாசனங்கள், என்னாற் கண்ட சிலாசாசனங்கள், செப்பேடுகள் முதலியன இதற்குத் துணையாக நின்று பண்படுத்தின. இவற்றில் இச்சதகத்துக் கதைகள் தெரிந்தன. ஆதலின் கருத்துரை, வரலாறு, மேற்கோள்கள் எழுத ஒருவாறு இயன்றன" என எழுதுகிறார்

பாம்பண கவுண்டர் குறவஞ்சி நூல் முகவுரையில் தி.அ.முத்துசாமிக் கோனார் தமக்கென அமைத்துக்கொண்ட பதிப்பு நெறியைத் தெளிவுபடுத்துகிறார். "அந்தந்த நாட்டிலுள்ளவர்கள் தங்கள் நாட்டுக்கு, தங்கள் முன்னோர்களுக்கு உள்ள கீர்த்தி பரவும்படிக்கு மாத்திரமல்ல, எல்லோரும் தெரிந்துகொள்ளட்டும் என்ற எண்ணங் கொண்டவர்களாய்ப் பழைய காலத்திலிருந்த புலவர்கள் அருமையுறத் தெய்வத்தின் பேரில், அல்லது உபகாரிகள் பேரில் இயற்றிய பிரபந்தங்களைச் சொற்பப் பொருட்செலவு செய்து அச்சேற்றுவிப்பார்களானால் நம் நாட்டுக்குப் பேருபகாரம் புரிந்ததாகும்" என்கிறார்

மேலும், "இது ஒரு நரஸ்துதியாக இருந்தாலும் (பாம்பணன் பற்றி) இதனுள் மறைந்து காணும் சில சரித்திரக் குறிப்புகள் உள்நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி செய்யப் புகுவோருக்குச் சிறிது உபகாரமாகுமென்பது இதிலடங்கியுள்ள "பாம்பண கவுண்டன்' வரலாற்றுச் சுருக்கம் என்பதில் விளங்கும்" எனத் தனி மனிதனைப் போற்றுவதை விட, இது வரலாற்று ஆய்வுக்கு உதவும் எனும் தன்மையிலேயே பதிப்புப் பணியை மேற் கொண்டுள்ளார்.

மறைவு

தி.அ.முத்துசாமிக் கோனார் 86 ஆண்டுகள் வாழ்ந்து நவம்பர் 2, 1944 அன்று மறைந்தார். அவர் சேர்த்துவைத்திருந்த ஏராளமான சுவடிகளும் குறிப்புகளும் அவர் மறைவுடன் பேணுவாரின்றி அழிந்தன.

பங்களிப்பு

திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்,

"ஊர்பலவும் ஆண்டுகளாய் ஓடிஉழைத்து
உரைகண்டே ஊன்றும் அச்சுத்
தேர்புகுத்தித் தமிழருக்குச் சிறப்பாக
விருந்தளித்த செல்வன்".

என்று தி.அ.முத்துசாமிக் கோனாரைப் பாராட்டுகிறார். "இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட ஆண்டறிக்கைகள், கல்வெட்டுத் தொகுதிகள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட ஒரு தமிழ்நாட்டு நூல் பதிப்பாசிரியர் கோனார் அவர்களேயாவார்" என்று புலவர் செ. இராசு குறிப்பிடுகிறார்

பதிப்பித்த நூல்கள்

திருச்செங்கோடு பற்றிய நூல்கள்
  1. .திருச்செங்கோட்டு மாலை
  2. பணிமலைக் காவலர் அபிஷேக மாலை
  3. திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை
  4. செங்கோட்டுக் குமரர் இரட்டை மணிமாலை
  5. அர்த்தநாரீசுர மாலை
  6. சந்திரசேகர மாலை
  7. கருணாகர மாலை
  8. திருச்செங்கோட்டுப் புராணம்
  9. திருச்செங்கோட்டு மான்மியம்
  10. அர்த்தநாரீசுவரர் பதிகம்
  11. கருணாகரப் பதிகம்
  12. அர்த்தநாரீசுவரர் வருகைப் பதிகம்
  13. உமைபாகப் பதிகம்
  14. பணிமலைக் காவலர் பதிகம்
  15. திருச்செங்கோட்டுக் கலம்பகம்
  16. திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ்
  17. அர்த்தநாரீசுவரர் கும்மி
  18. அர்த்தநாரீசுவரர் முளைக்கொட்டுப் பாட்டு
  19. திருமுக விலாசம்
  20. திருச்செங்கோட்டுச் சதகம்
  21. நாரிகணபதி ஒருபா ஒருபஃது
  22. திருச்செங்கோட்டு ஊசல்
  23. திருச்செங்கோட்டு மும்மணிக்கோவை
  24. செங்கோட்டு வேலவர் பஞ்சாமிர்தம்
  25. அர்த்தசிவாம்பிகை நவகம்
பிறநூல்கள்
  1. சர்க்கரை மன்றாடியார் காதல் (1913)
  2. சிவமலைக் குறிவஞ்சி (1918)
  3. பாம்பண கவுண்டர் குறவஞ்சி (1917)
  4. மோரூர்ப் பாம்பலங்காரர் வருக்கக்கோவை (1916)
  5. பூந்துறைப்புராணம் (1917)
  6. கொங்கு மண்டல சதகம் (1923)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:38:22 IST