under review

திலக பாமா

From Tamil Wiki
திலகபாமா
திலக பாமா (நன்றி: puthu.thinnai)

திலக பாமா( பிறப்பு" மே 20, 1971) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

திலக பாமா திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் மே 20, 1971-ல் என்.ஆர். பார்த்தசாரதி, சசிரேகா இணையருக்குப் பிறந்தார். பள்ளிப்படிப்பை பட்டிவீரன்பட்டியில் பயின்றார். மதுரை பாத்திமா கல்லூரியில், வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

திலக பாமா, மருத்துவர் க. மகேந்திரசேகரை மணந்தார். மகன்கள் மருத்துவர் நிதர்ஷ பிரகாஷ், மருத்துவர் கோகுல் பிரகாஷ். தற்போது விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வசித்து வருகிறார்.

திலகபாமா

அரசியல் வாழ்க்கை

திலகபாமா பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக உள்ளார். சிவகாசியில் உள்ள மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இ. பெரியசாமி வெற்றி பெற்றார். 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி- பாரதீய ஜனதாக் கட்சி கூட்டணி வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

திலக பாமா கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுத தொடங்கினார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

சிறுகதை

திலகபாமா வடக்கு வாசல் இணையதளம், இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதினார். இலங்கை வீரகேசரி பத்திரிக்கை, லண்டன் பூபாள ராக அமைப்பு இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ’நனைந்த நதி’, 'மறைவாள் வீச்சு’ என்ற சிறுகதைத் தொகுப்புகளாக வெளிவந்தன.

நாவல்

திலகபாமா ’கரையாத உப்புப் பெண்’ 'தாருகா வனம்' ஆகிய நாவல்களையும் எழுதியுள்ளார்

கட்டுரை

திலகபாமா 'சுயமரியாதை மண்ணின் தீராத வாசம்' போன்ற நூல்களை எழுதினார். 'வெளிச்சத்தை சிறைப்படுத்திய 14 நாட்கள்'என்ற கட்டுரையை எழுதினார். ' இலங்கை, துருக்கி, பாலித்தீவு ஆகிய நாடுகளில் மேற்கொண்ட பயணங்களை ’திசைகளின் தரிசனம்’ என்ற பெயரில் வெளியிட்டார்.

அமைப்புப்பணிகள்

திலகபாமா சி. கனகசபாபதியின் கட்டுரைகள் நூலாக வர உதவினார். பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சௌந்திர பாண்டியனாரின் வரலாற்று நூலை எழுதினார். இலக்கிய கருத்தரங்குகள் நடத்தி வருகிறார். திலகபாமா கவிதைகளுக்கு சி. கனகசபாபதி நினைவுப் பரிசும், சிறுகதைகளுக்கு சி.சு. செல்லப்பா நினைவுப்பரிசும் வழங்கி வருகிறார்.

குறும்படம்

திலகபாமா லஷ்மி அம்மாள் என்னும் இலக்கியவாதியைப் பற்றி 'வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சம்’ என்ற குறும்படத்தை இயக்கினார்.

இலக்கிய இடம்

திலகபாமா பெண்ணியக் கருத்துக்களையும் சமூகக் கருத்துக்களையும் உரத்தகுரலில் வெளிப்படுத்தும் கவிதைகளையும் கதைகளையும் எழுதிவருகிறார்."திலகபாமாவின். கவிதை மொழி உருவகங்களாலும் குறியீடுகளாலும் ஆனது. பூடக மானது. பெண்ணின் சுதந்திர இருப்பைத் தன் தனித்த குரலாய் பதிவு செய்பவை." என வெங்கட் சாமிநாதன் மதிப்பிடுகிறார். "உடல்மொழியைப் பெண் மொழியாக முன்னிறுத்தும் கவிதைகளே மிகுதியான கவனத்தைப் பெறும் இக்காலத்தில் திலகபாமாவின் கவிதைகள் பெண்களின் போராட்ட உணர்வையும், நம்பிக்கையையும் மீட்டெடுக்கும் வகையில் உள்ளது." என பேராசிரியர் எம். ஏ. சுசீலா மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • எட்டாவது பிறவி தொகுப்பிற்காக ’கவிதை விருதை’ ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
  • கூர் பச்சையங்கள் தொகுப்பிற்காக சிற்பி இலக்கிய விருது பெற்றார்.
  • கண்ணாடி பாதரட்சைகள் தொகுப்பிற்காக திருப்பூர் அரிமா சங்கத்தின் சக்தி விருது பெற்றார்.

நூல் பட்டியல்

  • சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் (வரலாறு)
  • வெளிச்சத்தை சிறைப்படுத்திய 14 நாட்கள் (கட்டுரை)
  • தாருகா வனம் (நாவல்)
  • நிசும்பசூதினியும் வேதாளமும் (சிறுகதை)
கவிதைத் தொகுப்பு
  • கரையாத உப்புப் பெண்
  • திகம்பர சக்கரக் குருதி
  • சூரியனுக்கும் கிழக்கே (2001)
  • சூரியாள் (2002)
  • சிறகுகளோடு அக்னிப் பூக்களாய் (2002)
  • கண்ணாடிப் பாதரட்சைகள் (2006)
  • எட்டாவது பிறவி
  • கூர்பச்சையங்கள்
  • கூந்தல் நதிக் கதைகள் (2007)
  • கரையாத உப்புப் பெண்
  • திலகபாமா கவிதைகள் (ஒட்டு மொத்த கவிதை தொகுப்பு)
சிறுகதை
  • நனைந்த நதி (2004)
  • மறைவாள் வீச்சு
  • நிசும்பசூதினியும் வேதாளமும்
நாவல்
  • கழுவேற்றப்பட்ட மீன்கள்
  • தாருகாவனம்
  • சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் (ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனார் வரலாறு)
கட்டுரைத் தொகுப்புகள்
  • திசைகளின் தரிசனம் (பயணக் கட்டுரைகள்)
  • இருப்பின் தர்க்கத்தில்
  • வெளிச்சத்தை சிறைப்படுத்திய பதினான்கு நாட்கள்(தன் அனுபவம்)
  • நதியும் நதி சார்ந்த கொள்ளையும்
  • புதுமைப்பித்தனில் பூமத்திய ரேகை (2006)

இணைப்புகள்


✅Finalised Page