under review

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது

From Tamil Wiki
திருவேங்கடநாதன் வண்டு விடு தூது

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது (பொ.யு. பதினெட்டாம் நூற்றாண்டு) தூது இலக்கிய நூல்களுள் ஒன்று. தென்பாண்டி நாட்டில் உள்ள திருவழுதி என்னும் வளநாட்டை ஆண்ட குறுநில மன்னன் திருவேங்கடநாதன், இந்நூலின் பாட்டுடைத் தலைவன். திருவேங்கடநாதன் உலா வரும்போது, அவனைக் கண்டு காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதல் நிறைவேற வண்டைத் தூதாக அவனிடம் அனுப்புவதே திருவேங்கடநாதன் வண்டு விடு தூது. இதன் காலம் 18 -ம் நூற்றாண்டு. இந்நூலில், காப்புச் செய்யுள் தவிர்த்து 327 கண்ணிகள் அமைந்துள்ளன.

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது - சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்பேடு

பதிப்பு, வெளியீடு

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது, உ.வே. சாமிநாதையர் நூலகத்தில் ஓலைச்சுவடி வடிவில் பாதுகாக்கப்பட்டது. தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை, பதிப்பாசிரியர் மு. சண்முகம்பிள்ளை மற்றும் பொறுப்பாசிரியர் முனைவர் இரா. நாகசாமியின் முயற்சியால், 1981-ல், இச்சுவடியை நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.

இதே நூல் பற்றிய ஆய்வை, பேராசிரியர், முனைவர் வீ. அரசு நெறியாள்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டத்திற்காக, வே. கார்த்திகேயன் என்பவர் ஆய்வு செய்து, மே 2003-2004 கல்வியாண்டில், பதிப்பித்துள்ளார்.

மேற்கண்ட இரண்டு நூல்களுக்கிடையேயும் காப்புச் செய்யுள் தொடங்கி, பாடல்களின் சொற்கள், அமைப்பு, பாடல்களின் எண்ணிக்கை எனப் பல வேறுபாடுகள் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது நூலை எழுதிய ஆசிரியர் பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. இவர், மன்னன் திருவேங்கடநாதனால் ஆதரிக்கப்பட்டவர் என்ற செய்தியையும், தமிழ் மற்றும் வடமொழி அறிந்தவர் என்பதும், இலக்கண, இலக்கியப் புலமை அதிகம் உள்ளவர் என்பதும் இந்நூல் மூலம் அறிய முடிகிறது.

நூல் அமைப்பு

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது, தூது என்னும் சிற்றிலக்கிய வகைமையச் சார்ந்தது. நூலின் முதற்பகுதியில், 203-ம் கண்ணிவரை திருவேங்கடநாதனது கொடைச்சிறப்பு, வெற்றிச்சிறப்பு, குடிச்சிறப்பு ஆகிய தசாங்கங்கள் கூறப்பட்டுள்ளன. திருவேங்கடநாதனின் குடும்ப உறவுகளின் பெருமையும் பாடல்களில் விளக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பிற கண்ணிகளில் திருவேங்கடநாதன் உலா வருதல், அவன் அழகைக் கண்டு பெண்கள் மயங்கிக் காமம் கொள்ளுதல், தலைவி தலைவனைச் சேர விழைந்து பலவாறாகப் புலம்புதல், பின் சோலையில் தன் முன் எதிர்ப்படும் வண்டினை வேண்டித் தூதாக விடுத்தல், வண்டின் சிறப்பு, பெருமை ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

இறுதியில்,

கண்டே நான் கொண்ட மயல் காதலெல்லாம் சொல்லி மலர்
வண்டே பூந் தார்வாங்கி வா

- என்ற வரிகளுடன் திருவேங்கடநாதன் வண்டு விடு தூது நூல் நிறைவடைகிறது.

இந்நூலில் திருக்குறள், நாலடியார், சீவகசிந்தாமணி, பெருங்கதை போன்ற இலக்கியங்களிலிருந்து சில கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களின் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

பாடல்கள்

திருவேங்கடநாதனின் வைணவ சித்தாந்த ஈடுபாடு

யதிபதிசித் தாந்தம் முந்திக்கேது வென்றநூலே
யதிக மென்று நம்பு நமது ஐயன்

திருக்குருகூர் ஆலயத்தில் கருடவாகனம் செய்து அளித்தது

மன்னுதொளா யிரத்தறுபத் தய்யா மாண்டு
மாசிமதி மேவுபதி னோராந் தெய்தி
பன்னுசுக்கிர வாரமசு பதிநன் னாளிற்
(பங்கயக்) கண் மாயர்திரு வுளத்துக் கேற்கச்
சொன்னவடி வாற்கருடே சனைமிக் காகத்
தொல்லுல கினிற்பிரதிட்டை தோன்றச் செய்தான்
நன்னயவான் புகழ்வளஞ்சேர் குருகை மாறன்
நகர்த்திருவேங் கடநாத ராசன் மானே.

திருவேங்கடநாதன் மீது காதல் கொண்டு தலைவி புலம்புதல்

நானொருத்தி மெல்ல நடந்து நடந்துவர
மேனொருத்தி மேனெஞ் சிரங்காதோ- மேனியெல்லாம்
புண்ணாச்சே நெஞ்சம் புழுங்கி யெனக்காறு
கண்ணாச்சே காமங் கடலாச்சே - கண்ணாலே
பாராயோ வென்னையிந்தப் பாடுகண்டாற் பெண்பழிதான்
வாராதோ மெத்த வருந்தினேன் - சேராயோ
தன்னந் தனியாச்சே சாருந் துணைகாணே
னின்னந் தனிமைக் கிரங்காயோ - வென்னென்று
சொல்வே னலைவாய்த் துரும்பானேன் கொண்டமயல்
வெல்வேனா னெந்த விதத்தாலே - தொல்லுலகிற்
பெண்ணுக் கிரங்காத பேருண்டோ வென்றரசர்
கண்ணுக்கு முன்னே நான் கட்டுரைத்தேன்

தலைவி கூறும் வண்டின் பெருமை

தொல்லுலகி லுன்பேர் சுமந்தபெரி யோருக்
கல்லலுண்டோ வேறே யலைவுண்டோ - நல்லதது
கண்டோமே வாவிக் கறையிற்கோட் பட்டானை
விண்டோல மிட்டழைத்த வேலைவாய் - விண்டுவிரு
கால்சடைக்க வோடிக் கராமடியச் சக்கரந்தொட்
டாலமெனச் சீறி யடர்ந்துபோய் - மூலமென்ற
காரானை காத்த கடவுள்செய்த செய்கையெல்லா
மாராலுன் பேர்மகிமைக் கல்லவோ - நேராய்க்
கடைக்கலியிற் சீதரனார் கற்கி யவதார
மெடுப்பதுமுன் பேர்மகிமைக் கேகா - ணெடுத்தெடுத்துச்
சொன்னாலுஞ் சொல்லத் தொலையாதுன் பேர்மகிமை
யென்னாலே சொல்லு மியல்பன்றே

மதிப்பீடு

திருவேங்கடநாதன் வண்டு விடு தூது, அக்காலத்தில் வெளிவந்த பல தூது நூல்களில் ஒன்று. காமச்சுவை அதிகம் உள்ள நூல். கலவி பற்றிய செய்திகள் வெளிப்படையாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இந்நூலை அடியொற்றி காமத்தைப் பாடுபொருளாகக் கொண்ட பல தூது நூல்கள் தோன்றின.

உசாத்துணை


✅Finalised Page