திருவேங்கடத்தந்தாதி
திருவேங்கடத்தந்தாதி (பதிப்பு: 1830), திருவேங்கடம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியுள்ள வெங்கடேசப் பெருமாள் மீது பாடப்பட்டது. இதனை இயற்றியவர், பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
வெளியீடு
திருவேங்கடத்தந்தாதி, சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப்புலவர் வேங்கடாசல முதலியாரால் ஆராயப்பட்டு, மேடவாக்கம் சேஷாசல முதலியாரின் ரவாணா அச்சுக்கூடத்தில், பொ.யு. 1830-ல் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 1860, 1873, 1884, 1904 ஆண்டுகளில் பல பதிப்புகள் வெளியாகின. வைத்தமாநிதி முடும்பை சடகோபராமநுஜாசாரியர் இயற்றிய உரையுடன் கூடிய இந்நூலின் புதிய பதிப்பு, சென்னை கணேச அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு 1906-ல் வெளியானது. அதே ஆண்டில் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரின் உரையுடன் இந்நூல் வெளியானது.
இந்நூலின் ஆசிரியர் அழகிய மணவாளதாசர் என்னும் திவ்வியகவி பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
ஆசிரியர் குறிப்பு
திவ்வியகவி என்று போறப்பட்டவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். அழகிய மணவாளதாசர் என்றும் இவர் அழைக்கப்பட்டார். பொ.யு. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ், வடமொழி இரண்டிலும் புலமை மிக்கவர். 'அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்' என்று கூறிய இவர் 'கண்டமாலை' என்னும் நோயால் பாதிக்கப்பட்டார். திருவேங்கடவனை வேண்டிக் கொண்டதால் நோய் குணமானது. அதனால் வேங்கடவன் மீது 'திருவேங்கடத்தந்தாதி', கண்டமாலை' உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினார். இவர் இயற்றிய நூல்களின் தொகுதி அஷ்டபிரபந்தம் என அழைக்கப்படுகிறது.
நூல் அமைப்பு
திருவேங்கடத்தந்தாதி நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம்பெற்றது. தொடர்ந்து அந்தாதித் தொடையால் அமைந்த நூறு கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இடம்பெற்றன. இன்ன்னூல் திரிபு அந்தாதியாக அமைந்தது.
உள்ளடக்கம்
வேங்கடம் என்பது திருமாலின் திவ்விய தேசங்கள் நூற்றியெட்டுள் ஒன்று. வடநாட்டுத் திருப்பதிகள் பன்னிரெண்டுள் முதலாவது. திருவேங்கடத்தில் எழுந்தருளியுள்ள 'ஸ்ரீநிவாஸன்' என்று வடமொழியிலும் 'அலர்மேல் மங்கையுறைமார்பன்' என்று தமிழிலும் அழைக்கப்படும் திருமாலின் பெருமை, சிறப்பு, புகழ் ஆகிய இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. திருமால், திருமகள், திருவரங்கம், திருமாலின் அவதாரச் செய்திகள் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. திருமாலே முழுமுதற் கடவுள் என்பது இந்நூலில் பல வகையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாடல்
காப்பு: நம்மாழ்வார்
நல்லவந்தா திதிருவேங்கட வற்குநான் விளம்பச்
சொல்லவந்தா தின்வழுபொருட் சோர்வறச்சொல் வித்தருள்
பல்லவந்தா திசைவண்டார் குருகைப்பர சமயம்
வெல்லவந்தா திமறை தமிழாற்செய்த வித்தகனே
திருமால் பெருமை
மாயவன் கண்ணன் மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணுந்
தாயவன் கண்ணன் கமலமொப்பான் சரத்தாலிலங்கைத்
தீயவன் கண்ணன் சிரமறுத்தான் றிருவேங்கடத்துத்
தூயவன் கண்ணன் புடையார்க்கு வைகுந்தந்தூரமன்றே
வந்திக்க வந்தனை கொள்ளென்று கந்தனும் மாதவரும்
சிந்திக்க வந்தனை வேங்கடநாதா பல்சீவந்தின்னும்
உந்திக்க வந்தனைச் செற்றாயுனக் குரித்தாய பின்னும்
புந்திக்க வந்தனைச் செய்தைவர் வேட்கையொரு மென்னையே
திருவேங்கட மலையின் சிறப்பு
மாலைமதிக்கு ஞ்சியீசனும் போதனும் வாசவனு
நூலைமதிக்கு முனிவருந் தேவருநோக் கியந்தி
காலைமதிக் குள்வைத்தேத்துந் திருமலை கைம்மலையால்
வேலைமதிக் கும்பெரு மானுறை திருவேங்கடமே
மதிப்பீடு
திருவேங்கடத்திலில் எழுந்தருளியுள்ள திருமால் மீது பாடப்பட்ட குறிப்பிடத்தகுந்த அந்தாதி நூலாக, 'திருவேங்கடத்தந்தாதி' நூல் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Dec-2024, 09:26:16 IST