under review

திருவிடம் (இதழ்)

From Tamil Wiki
திருவிடம் இதழ் (படம் நன்றி: பொள்ளாச்சி நசன், தமிழகம் தளம்)
இதழாசிரியர் அர. திருவிடம்

திருவிடம் (1972) திராவிட இயக்கம் சார்பாக வெளிவந்த இதழ். திருவாரூரில் இருந்து வெளியிடப்பட்ட இந்த இதழின் ஆசிரியர் அர. திருவிடம். திராவிட இயக்கக் கொள்கைகள், சுயமரியாதைச் சிந்தனைகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

திருவாரூரைச் சேர்ந்த அர. திருவிடம், ஜூன் 1, 1972-ல், திருவிடம் இதழைத் தொடங்கினார். பகுத்தறிவுக் கொள்கைகளுக்கும் சுயமரியாதைச் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளியான திருவிடம் இதழின் விலை 40 காசு. சில மாதங்களுக்குப் பின் சென்னையில் சொந்த அச்சகம் அமைக்கப்பட்டு அங்கிருந்து திருவிடம் இதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்

திராவிட இயக்கம் சார்ந்த முன்னோடிகளின் படங்களை இவ்விதழ் முகப்பில் வெளியிட்டது. ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் கருத்துகளை முதன்மைப்படுத்தியது. சிறுகதை, கட்டுரை, கவிதைகள், மரபுப் பாடல்கள், ஆய்வுத் தொடர்கள் ஆகியன திருவிடம் இதழில் வெளிவந்தன.

திராவிடக் கழகப் பேச்சாளர் திருவாரூர் கே.தங்கராசு எழுதிய ‘கருஞ்சட்டையின் கடிதம்’ வாரா வாரம் இடம் பெற்றது. கேள்வி-பதில் பகுதியும் இவ்விதழில் வெளியானது. நாடகங்கள் வெளியாகின. தரங்கை பன்னீர் செல்வன், பாவலர் கருமலைப்பழம் நீ போன்றோர் எழுதிய கவிதைகள் இடம் பெற்றன. விளம்பரங்களும் இவ்விதழில் இடம் பெற்றன.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்.

இதழ் நிறுத்தம்

திருவிடம் இதழ் பொருளாதாரச் சூழல்களால் நின்று போனது. இதழ் நின்ற வருடம் பற்றி அறிய இயலவில்லை.

வரலாற்று இடம்

பகுத்தறிவுக் கொள்கைகளுக்கும் சுயமரியாதைச் சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வெளிவந்த திருவிடம் இதழ், திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு இதழாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page