திருப்போரூர் முருகன் மாலை
திருப்போரூர் முருகன் மாலை திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட சிற்றிலக்கிய நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்.
வெளியீடு
திருப்போரூர் முருகன் மாலை நூலை, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, 2018-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.
ஆசிரியர்
சிதம்பர சுவாமிகள் வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். நெஞ்சு விடு தூது, மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா முக்கியமான படைப்புகள்.
நூல் அமைப்பு
மலர்களால் கட்டப்படும் மாலை போன்று பாக்களால் தொடுக்கப்படுவது மாலை என்னும் சிற்றிலக்கியம். திருப்போரூர் முருகன் மாலை நூல் நேரிசை வெண்பாக்களால் ஆன 100 பாடல்களைக் கொண்டுள்ளது. காப்புச் செய்யுள் திருப்போரூர் வேம்படி விநாயகர் மீது பாடப்பெற்றுள்ளது. இந்நூலில் மொத்தம் 103 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
முருகனின் பெருமை, சிறப்பு, புகழ், கருணை உள்ளம், அடியவர்களுக்கு அவன் அருள்புரியும் விதம் ஆகியன இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
பாடல்
இல்லறத்தான் அல்லேன் இயற்கைத் துறவியல்லேன்
நல்லறத்து ஞானியல்லேன் நாயினேன் - சொல்லறத்தின்
ஒன்றேனும் இல்லேன் உயர்ந்த திருப்போரூரா
என்றேநான் ஈடேறு வேன்.
அருளே வடிவாகி ஆனந்த வாரிப்
பொருளாய்யான் என்னதெனல் போமோ - மருளேதும்
இல்லானே போரூர் இறைவனே நாயேற்கு
நல்லானே சொல்லாய் நயந்து
வேல்கண்டேன் தோளில் வியன்சதங்கை மொய்த்திருந்த
கால்கண்டேன் ஆறுமுகங் கண்டேனே - நீல்கொண்ட
மாயூரங் கண்டேன் வளமைதரு போரூரிற்
போயூரங் கண்டேன் புகுந்து
ஆறு முகம்வாழி ஆறிரண்டு தோள்வாழி
தேறுபதம் வாழியிரு தேவிமார் - வீறுபுடை
வாழிவேல் வாழி மயில்வாழி போரூரர்
வாழிசகம் வாழி மகிழ்ந்து.
மதிப்பீடு
திருப்போரூர் முருகன் மாலை நூல், எளிய நடையும் இனிய சந்தமும் கொண்டுள்ளது. முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.
உசாத்துணை
- திருப்போரூர் முருகன் மாலை, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, திருப்போரூர்; முதல் பதிப்பு: 2018.
- தினமணி இதழ் கட்டுரை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:35:38 IST