under review

திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில்

From Tamil Wiki
அப்பாண்டைநாதர் கோயில் (நன்றி பத்மாராஜ்)

திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் கோயில் (பொ.யு. 9-ம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த சமணக் கோயில். இக்கோவிலைப்பற்றி அப்பாண்டநாதர் உலா, திருமேற்றிசை அந்தாதி, திருநறுங்கொண்டை தோத்திரமாலை போன்ற இலக்கியங்கள் பாடப்பட்டுள்ளன.

இடம்

தென்னார்க்காடு மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை தாலுகாவைச்சார்ந்த திருநறுங்கொண்டையில் அப்பாண்டைநாதர் எனப்படும் பார்சுவநாதர் கோயிலும், அதனை ஒட்டி சந்திரநாதர் கோயிலும் ஒரே வளாகத்தில் உள்ளன. விழுப்புரம்-விருத்தாச்சலம் இருப்புப்பாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16 கி.மீ தொலைவில் திருநறுங்குன்றம் உள்ளது. தற்போது திருநறுங்குன்றம் அல்லது திண்ரங்கோட்டை என்றழைக்கப்படுகிறது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரமுள்ள பாறைக்குன்றில் கோயில் உள்ளது. இந்த மலைமேல் திருநறுங்கொண்டை குகைப் பள்ளி உள்ளது.

வரலாறு

இக்குன்று தொல்காலத்தில் இயற்கை குகையில் அமைந்த சமண வழிபாட்டு நிலையமாக இருந்திருக்கிறது. பின்னர் படிப்படியாக கட்டப்பட்ட இப்பள்ளிகளுக்கு சோழ மன்னர்களும், அவர்களுக்குக் கீழ் ஆட்சிசெய்த வாணர், மலையமான், காடவராயர் ஆகியோரும், பாண்டிய அரசர்களும் தானங்களை அளித்துள்ளனர். சமணப்பெருங்குடி மக்களும் ஆதரித்தனர்.

திருநறுங்கொண்டை பார்சுவநாதர்

அமைப்பு

திருநறுங்கொண்டை மலையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பார்சுவப் பெருமான் கோயில் மேலைப்பள்ளி எனவும், சந்திரநாதர் கோயில் கீழைப்பள்ளி எனவும் அழைக்கப்பட்டது. மலையின் மீதுள்ள குகைப்பாழி, பார்சுவநாதர் கோயில், சந்திரநாதர் கோயில், அழகம்மை மண்டபம், பத்மாவதியம்மன் கோயில் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியவாறு பிரகாரச்சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது இத்திருச்சுற்றுமதிலின் கிழக்குப்புறத்தில் ஐந்து தளங்களையுடைய கோபுர வாயில் உள்ளது.

பார்சுவநாதர் கோயில்

நறுங்கொண்டை மலையின் மேற்பரப்பில் கிழக்கும், மேற்குமாக உள்ள இருபாறைகளுக்கு இடைப்பட்ட பகுதியினை மண்டபமாக அமைத்துக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாறைகளுள் கிழக்கிலுள்ள பாறையின் மேற்கு முகப்பில் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. பொ.யு. 9-ம் நூற்றாண்டில் இந்த பார்சுவநாதர் திருவுருவம் தோற்றுவிக்கப்பட்டது.

சந்திரநாதர் கோயில்

குகைப் பாழிக்கும், பார்சுவப் பெருமான் சன்னதிக்கும், அதனையடுத்துள்ள மற்றொரு பாறைக்கும் இடைப்பட்ட பகுதியில் கீழைப்பள்ளி என்றும், சதுர்முகத்திருக்கோயில் என்றும் பெயர்கள் கொண்ட சந்திரநாதர் கோயில் கட்டப்பட்டுள்ளது. பொ.யு. 9-ம் நூற்றாண்டில் காவிரியின் தென் கரையிலுள்ள தழக்குடி என்னும் ஊரைச் சார்ந்த விசய நல்லுழான் குமரன் தேவன் என்பவர் கட்டியுள்ளார். கருவறையில் தியான நிலையில் வீற்றிருக்கும் மூலவராகிய சந்திரநாதர் சுதையினால் செய்யப்பட்டுள்ளார்.

திருநறுங்கொண்டை ரிஷபதேவர்

சிற்பங்கள், உலோகத்திருமேனிகள்

மண்டபத்தின் வடபுறத்தில் தனியாக ரிஷப நாதர், மல்லி நாதர்; மகாவீரர், தருமதேவி, மகாசாத்தன் ஆகியோரைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தியது ரிஷபநாதரது திருவுருவம். இச்சிலை பொ.யு. 10-ம் நூற்றாண்டு சோழர் கலைப்பாணியினைக் கொண்டது. இங்குள்ள தீர்த்தங்கரர் உலோகத் திருமேனிகளுள் கச்சி நாயகர் என அழைக்கப்பட்ட சந்திரநாதர் திருவுருவமும், நேமிநாதர் செப்புத்திருமேனியும் பொ.யு. 13-ம் நூற்றாண்டு கலைப்பாணியைக் கொண்டது. சிறிய அளவிலான பார்சுவநாதர், மகாவீரர், சர்வாண யக்ஷன், தர்மச்சக்கரம், பிரம்மதேவர், பூரண-புஷ்கலை, தருமதேவி முதலிய பல உலோகத்திருமேனிகளும் இக்கோயிலில் உள்ளன.

கல்வெட்டுக்கள்

திருநறுங்கொண்டையில் நாற்பத்தி மூன்று சாசனங்கள் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் பொ.யு. 9-ம் நூற்றாண்டிலிருந்து 20-ம் நூற்றாண்டு வரையுள்ள காலகட்டத்தைச் சார்ந்தவை. பெரும்பாலானவை சோழப் பேரரசர் காலத்தையும், அவர்களது ஆட்சிக்குட்பட்டிருந்த மலையமான், காடவராய சிற்றரச பரம்பரையினரது ஆட்சியின் போதும் பொறிக்கப்பட்டது.

கல்வெட்டுச் செய்திகள்

  • முதலாம் இராஜராஜனது ஆட்சியில் (பொ.யு. 995) ஐயாறன் என்னும் அதிகாரியின் மனைவி நறுங்கொண்டையின் சில நிலங்களைப் பயிர் செய்ய ஏற்றவாறு திருத்தியமைத்து கோயிலில் திருப்பலி, திருவாராதனை முதலிய வழிப்பாட்டுச்செலவுகளுக்காக அளித்திருக்கிறார்.
  • இந்த அரசனது படைத்தலைவனாகிய மும்முடிச்சோழபிரம்மராயன் என்பவரும் அரசன் எல்லா நலமும் பெற்றுத் திகழ வேண்டி இக்கோயிலுக்கு பத்து மா அளவுள்ள நிலத்தை வழங்கியிருக்கிறார்.
  • பொ.யு. 1128-ம் ஆண்டில் மலையப்பன் என்னும் சிற்றரசன் பயிர் செய்யப்படாமல் கிடந்த நிலங்களில் வரப்புகளை எழுப்பி மீண்டும் சாகுபடி செய்யும் வண்ணம் மாற்றி, கோயிலுக்கு அளித்திருக்கிறார்.
  • மூன்றாம் குலோத்துங்க சோழமன்னன் கனகஜினகிரியிலுறையும் அப்பாண்டைநாதருக்குச் சிறுசாத்தநல்லூர் என்னும் ஊரையே தானமாகக் கொடுத்திருக்கிறான். இந்த அரசனது ஒன்பதாவது ஆட்சியாண்டில் (பொ.யு. 1187) ஆற்றூர், ஏனாதிமங்கலம் முதலிய ஊர்களிலுள்ள நிலங்கள் பள்ளிச்சந்தமாக வழங்கப்பட்டிருக்கிறது.
  • இது போன்று ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன், விக்கிரம பாண்டியன், முதலிய பாண்டிய அரசர்கள் காலத்திலும் நறுங்கொண்டைக்கோயிலுக்குப் பல்வேறு தானங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலுக்குப் பல்வேறு அரச பரம்பரையினரால் பள்ளிச்சந்த நிலங்கள் மட்டுமின்றி ஆடுகள், பொன், பணம் முதலியவையும் அளிக்கப்பட்டிருக்கின்றன.
  • இந்த கோயிலிலுள்ள இறைத் திருவுருவங்களின் முன்னர் தினமும் விளக்குகள் ஏற்றப்பட வேண்டுமென்பதற்காகவும், நைவேத்தியம் முதலிய வழிபாட்டுச் செலவுகளுக்காகவும், வைகாசி, தை ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப் பெறுவதற்காகவும் தானங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
அப்பண்டைநாதர் ஜினாலயம்

பிறசெய்திகள்

குமரி மாவட்டத்திலுள்ள திருச்சாரணத்து மலையில் திருநறுங்கொண்டைப் பள்ளியைச் சார்ந்த வீரநந்தியடிகளும். நெல்லை மாவட்டத்து கழுகுமலையில் பலதேவக்குரவடிகளின் மாணக்கராகிய கனகவீர அடிகளும், அண்ணா மாவட்டத்தைச் சார்ந்த ஐவர்மலையில் பெருமடை (பெருமண்டூர்) ஊரினராகிய மல்லிசேன பெரியாரும் சமண சமயச் சிற்பங்களைச் செதுக்க பொ.யு. 9-ம் நூற்றாண்டில் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

சமணப் படுக்கைகள்

இக்கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்க்ப்பட்டுள்ளன. இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் உள்ளது என்று ஆய்வாளர் ஏ.ஏகாம்பரநாதன் குறிப்பிடுகிறார். பார்க்க திருநறுங்கொண்டை குகைப் பள்ளி

இலக்கியங்கள்

  • அப்பாண்டநாதர் உலா
  • திருமேற்றிசை அந்தாதி
  • திருநறுங்கொண்டை தோத்திரமாலை

வழிபாடு

அப்பண்டைநாதர் மூலவர் (நன்றி- பத்மாராஜ்)

பண்டைக்காலத்தில் திருநறுங்கொண்டையில் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழாவும், தைமாதத்தில் அஸ்த நட்சத்திரம் கூடிய நன்னாளில் அஸ்தத் திருவிழாவும் கொண்டாடப்பட்டது.

தேர்த்திருவிழாவினை மையமாகக் கொண்டு தீர்த்தங்கரர் தேரில் பவனி வருதலை அப்பாண்டைநாதர் உலா என்னும் இலக்கியம் கூறுகிறது. இந்த விழாவின்போது உற்சவமூர்த்திகளாகிய நித்திய கல்யாண தேவரையும், அருண்மொழித்தேவரையும் பல்லக்கில் ஏற்றி வழிபாடு செய்யும் செலவுகளுக்காக நறுங்கொண்டையிலுள்ள சில நிலங்கள் அளிக்கப்பட்டது.

தை மாத அஸ்த விழாச் செலவுகளுக்காக இராசாக்கள் நாயகன் தவத்தாளன் தேவன் என்பவர் நிலங்கள் சிலவற்றைத் தானமாகக் கொடுத்தார். இதனால் இவரது பெயராலே இராசாக்கள் நாயகன் திருவிழா என அழைக்கப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page