under review

திருத்தாமனார்

From Tamil Wiki

திருத்தாமனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

திருத்தாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சேரமான் வஞ்சன் காலத்தைச் சேர்ந்த புலவர்.

இலக்கிய வாழ்க்கை

திருத்தாமனார் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 398-வது பாடலாக உள்ளது. சேரமான் வஞ்சனின் கொடைத்திறனை திருத்தாமனார் பாடியதாக பாடல் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

சேரமான் வஞ்சன்
  • பறைபோல் முழங்கும் அருவிகளையுடைய பாயல் என்னும் நாட்டிற்கு உரியவனாகிய வஞ்சன் பாயல்கோ எனப்பட்டான். கோசர்களில் ஒரு பிரிவினர் வாய்மொழிக் கோசர் எனப் பாராட்டப்பட்டனர். எனவே இவனைச் சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோசர்குடித் தலைவன் எனலாம். புலி உறங்கும் குகை போன்ற பெரும்புகழ் பெற்றது அவனுடைய ஊர்.
  • எப்பொழுதும் வாய்மையே பேசுபவன். அவனை மகிழ்விக்கும் பாணர், பொருநர் முதலியோர் அணுக முடியுமே தவிர, அவனுடைய பகைவர்களால் அணுக முடியாதவன்.
  • சேரமான் வஞ்சனின் கொடைத்திறம்: பாணர்கள் சிறிய யாழை மீட்டிக்கொண்டு கோழி கூவும் வைகறைப் பொழுதில் சேரமான் வஞ்சனைப் பாடுவர். மிகுந்த மணமுள்ள பந்தலில் பரிசிலர்களின் தகுதி அறிந்து அவர்களுக்குப் பரிசளிப்பவன் வஞ்சன். அவர்களின் அழுக்குப் படிந்த ஆடைகளை நீக்கித் தான் அணிந்திருப்பது போன்ற புகைபோன்ற மெல்லிய ஆடைகளை உடுத்திவிடுவான். நிழலைக் காட்டும் கண்ணாடி போன்ற தேறலைப் (கள்) பருகத் தருவான். நல்ல அரிசிச் சோற்றையும் கருணைக் கிழங்குக் குழம்பையும் வயிறார ஊட்டி மகிழ்வான். தன் மார்பில் அணிந்திருந்த, உலகம் எல்லாம் வியக்கும், பல மணிகள் கோத்து ஒளியுடன் விளங்கும் பாம்பு போல் வளைந்த மாலையையும், பூ வேலைப்பாடுகள் அமைந்த மெல்லிய உடைகளையும் அளிப்பான்.

பாடல் நடை

புறநானூறு 398

திணை: பாடாண் திணை; துறை: கடைநிலை

மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
வகைமாண் நல்இல் . . . . .
பொறிமயிர் வாரணம் பொழுதறிந்து இயம்பப்
பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
கைவல் சீறியாழ் கடன்அறிந்து இயக்க

இரவுப்புறம் பெற்ற ஏம வைகறைப்
பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
புலியினம் மடிந்த கல்லளை போலத்

துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
மதியத் தன்னஎன் அரிக்குரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
தள்ளா நிலையை யாகியர் எமக்கென

என்வரவு அறீஇச்
சிறிதிற்குப் பெரிதுவந்து
விரும்பிய முகத்த னாகி என்அரைத்
துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்அரைப்
புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ

அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
யான்உண அருளல் அன்றியும் தான்உண்
மண்டைய கண்ட மான்வறைக் கருனை
கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர

வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
உரைசெல அருளி யோனே
பறைஇசை அருவிப் பாயல் கோவே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Sep-2024, 18:46:33 IST