under review

திருக்கண்டியூர்

From Tamil Wiki
கண்டியூர் (நன்றி சைவம் இணையதளம்)
பிரம்மசிரகண்டீஸ்வரர், மங்களநாயகி
ராஜகோபுரம் திருக்கண்டியூர்

திருக்கண்டியூர்: (பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயம், கண்டியூர் ஆலயம்) அட்டவீரட்டான ஆலயங்களில் ஒன்று. சிவன் பிரம்மனின் தலையை கொய்த இடம் என்பது தொன்மம். ஆகவே இப்பெயர் அமைந்தது.சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

(பார்க்க அஷ்ட வீரட்டானம் )

இடம்

தஞ்சாவூர் திருவையாறு பாதையில், திருவையாற்றுக்கு இரண்டு கி.மீ. முன்பாக இத்தலம் அமைந்துள்ளது. இது சப்தஸ்தானங்கள் என்னும் ஏழு கோயில்களில் ஒன்று

(பார்க்க சப்த ஸ்தானம்)

தெய்வங்கள்

இங்குள்ள சிவன் பிரம்மசிரகண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர்,ஆதிவில்வநாதர் என்றும் பெயர்கள் உண்டு. இறைவியின் பெயர் மங்களநாயகி.

இது சூரியத்தலம். நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார். பிரம்மனுக்கும் சரஸ்வதிக்கும் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், விஷ்ணுதுர்க்கை சந்நிதிகள் இங்கே உள்ளன.

தொன்மம்

சிவபெருமானுக்கு ஈசானம், அகோரம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம் என்னும் ஐந்து முகங்கள் உண்டு. பிரம்மனுக்கும் ஐந்து முகங்கள் இருந்தன. இதனால் பிரம்மன் செருக்குற்று சிவனை போட்டிக்கு அழைக்க சிவன் பிரம்மனின் ஐந்தாம் தலையை கிள்ளி எடுத்தார். அந்த தலை பிரம்மகபாலமாக சிவன் கையில் ஒட்டிக்கொண்டது. அந்தணக்கொலை (பிரம்மஹத்தி) பாவம் உருவானதனால் சிவன் பிச்சாடனராக அலைந்தார். பின்னர் அந்த பழி நீங்கியது. பிரம்மன் தலையை சிவன் கிள்ளிய இடம் என இந்த தலம் கருதப்படுகிறது.

சாதாதாப முனிவர் இங்கே வழிபடும்போது கயிலையில் இருந்து இறைவன் வில்வமரம் கொண்டுவந்து அளித்தார். ஆகவே இத்தலத்திற்கு 'ஆதிவில்வாரண்யம் ' என்று பெயர்.

துரோணர் இங்கே வில்வத்தால் பூசை செய்து அஸ்வத்தாமனை மகனாகப் பெற்றார். ஆகவே இது பிள்ளைவரம் தரும் தலம்.

சித்ரவஜன் என்னும் கந்தர்வன் தன் மனைவி குணவதியுடன் காட்டில் கூடியிருந்ததைக் கண்ட தேவலர் என்னும் முனிவர் அவர்கள் மேல் தீச்சொல் தொடுக்க அவன் அரக்கனானான், அவள் பலாசமரம் ஆனாள். அவர்கள் சொல்மீட்சி கோரியபோது தேவலர் அருளியபடி பின்னாளில் சாதாதாப முனிவர் அங்கே வந்து பலாசமரத்தடியில் மழைக்கு ஒதுங்கினார். அவர் அவர்களை மீட்டு முந்தைய உருவை அளித்தார்.

நூற்குறிப்புகள்

தேவாரப் பாடல்கள்

பதிகங்கள்
பாடல்கள்

அப்பர் - திண்டீச்சரஞ் சேய்ஞலூர் (6.70.9) , தண்டி குண்டோ தரன் (6.93.7)

சுந்தரர் - நாளும் நன்னிலம் (7.12.8)

சேக்கிழார்

கல்வெட்டுகள்

இந்த ஆலயத்தில் கருவறையின் வலப்புறம் நிருபதுங்க பல்லவனின் கல்வெட்டு உள்ளது. சோழன் மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் ராஜேந்திரசோழன் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில், இப்பெருமான், "திருவீரட்டானத்து மகாதேவர்", "திருக்கண்டியூர் உடைய மகாதேவர்" எனக் குறிக்கப்படுகிறார்.

கோயில் அமைப்பு

இக்கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. திருக்கோயில் மேற்குநோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது கோபுரம் அணுக்கன் திருவாயில் எனப்படுகிறது. கருவறைக்கு இருபுறமும் துவாரபாலகர்களுக்கு பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும் தாமரைமொட்டு மாலை ஏந்திய வீரஸ்கந்தரும் இருக்கிறார்கள். பிரம்மா சன்னிதி அருகே பிராகாரத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் கலையழகு கொண்டது

விழாக்கள்

இங்கே மாசி 13 14, 15 தேதிகளில் சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழுகிறது. சித்திரை மாதத்தில் சப்தஸ்தானம், வைகாசிரியில் பிரம்மோற்சவம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடைபெறுகின்றன.

உசாத்துணை


✅Finalised Page