under review

அஷ்ட வீரட்டானம்

From Tamil Wiki

அஷ்டவீரட்டானம் (அட்டவீரட்டானம், அட்டவீரட்ட லிங்கங்கள்) சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டு சைவத்தலங்கள் இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன

தத்துவம்

சிவதத்துவத்தில் அஷ்டமூர்த்தம் (அஷ்டமூர்த்தம்) என்னும் கருத்து அடிப்படையானது, ஐந்து பருப்பொருட்கள், சந்திரன், சூரியன், மனம் என்னும் ஆறுவகையில் அருவமான சிவம் உருவம் கொண்டு சிவலிங்கம் ஆகியது. இந்த அடிப்படையில் எட்டு லிங்கங்கள் வெவ்வேறு புராண விளக்கங்களுடன் வழிபடப்படுகின்றன.

(பார்க்க அஷ்ட லிங்க வழிபாடு )

எட்டு தலங்கள்

  1. பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயில் - திருக்கண்டியூர்: பிரம்மன் தலையை கொய்ந்த இடம்
  2. வீரட்டேஸ்வரர் கோயில் - திருக்கோவலூர்: அந்தகாகரனைக் கொன்ற இடம்
  3. வீரட்டானேஸ்வரர் கோயில் - திருவதிகை: திரிபுரத்தை எரித்த இடம்
  4. திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் கோயில் கீழப்பரசலூர் திருப்பறியலூர்: தட்சனை அழித்த இடம்.
  5. திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்: சலந்தராசுரனை கொன்ற தலம்
  6. திருவழுவூர்: கயமுகாசுரனைக்கொன்று தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட தலம்
  7. திருக்குறுக்கை: மன்மதனை எரித்த தலம்
  8. திருக்கடவூர்: மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம்.

தொன்மம்

பிரம்ம சிரக்கண்டீஸ்வரர் கோயில்

ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவன் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்தார். பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால் இத்தலத்தின் பெயர் கண்டியூர் என்றானது. இறைவனின் பெயர் பிரமசிரக்கண்டீஸ்வரர் என்றானது.

வீரட்டேஸ்வரர் கோயில்

அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி இத்தலத்தில் காட்சியளிக்கிறார். அந்தகாசுரன் என்பவன் இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவனிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி சிவபெருமான் தன் அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார்.

வீரட்டானேஸ்வரர் கோயில்

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன. முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தினர். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இத்தலத்தின் இறைவன் திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்தார்.

திருப்பறியலூர் வீரட்டானேசுவரர் கோயில்

தட்சன் தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்தான். அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் திருப்பறியலூர் எனவும் அழைக்கப்படுகிறது.

திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில்

ஜலந்தரன் என்ற அசுரனை சிவன் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.

திருவழுவூர் வீரட்டானேஸ்வரர் கோயில்

யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவன், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார்.

திருக்குறுக்கை வீரட்டானேஸ்வரர் கோயில்

கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவன் தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவனின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவன், மன்மதனை எரித்த தலம் இது. பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இணங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்

மார்க்கண்டேயன் தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான். ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமன். தன் பக்தனைக் காப்பாற்றவும், யமனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது.

உசாத்துணை


✅Finalised Page