under review

அஷ்ட லிங்க வழிபாடு

From Tamil Wiki

அஷ்டலிங்க வழிபாடு: சிவபெருமானை எட்டு வகைகளில் சிவலிங்கமாக வழிபடும் முறை. தமிழகத்திலும் கர்நாடகத்திலும் வெவ்வேறு வகையில் இந்த வழிபாட்டுமுறை உள்ளது. சைவ மரபில் இது அட்ட மூர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.

அட்டமூர்த்தம்

நிலம், தீ, நீர், காற்று, வானம் என்னும் ஐந்து பருப்பொருட்களிலும், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய மூன்று ஆலயங்களிலும் உள்ளுறைந்து இருக்கும் சிவனை சிவலிங்கமாக நிறுவி வழிபடுவது அட்ட மூர்த்த வழிபாடு எனப்படுகிறது. பிரம்மனுக்கு சிவன் இவ்வண்ணம் தோற்றமளித்து படைப்புத்தொழிலை அறிவித்தார் எனப்படுகிறது. சிவலிங்க தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று அட்டமூர்த்தக் கொள்கை. அறிதற்கு அப்பாற்பட்ட அருவ வடிவமான ஆதிசிவம் தன் பருப்பொருள் வடிவை இந்த எட்டு வகையில் தானே உருவாக்கிக் கொண்டது. அவற்றிலிருந்தே இப்பிரபஞ்சம் உருவானது என சைவதத்துவம் சொல்கிறது.

அஷ்டதிக்கு லிங்கம்

எட்டு திசைகளுக்கும் உரிய எட்டு தேவர்களால் வழிபடப்பட்ட எட்டு லிங்கங்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. இவையும் அஷ்டலிங்கம் எனப்படுகின்றன. பெரும்பாலான இடங்களில் சிவதத்துவத்தின் விளக்கமான அட்டலிங்கங்கள் காலப்போக்கில் அந்த அடிப்படைக் கொள்கைகள் மறக்கப்பட்டு, எட்டு திசைக்காவலுக்குரிய லிங்கங்களாக எளிமையான மறுவிளக்கம் அளிக்கப்பட்டு, வழிபடப்படுகின்றன. திருவண்ணாமலை, திருவேற்காடு போன்ற ஊர்களில் உள்ளவை அஷ்டதிக்கு லிங்கங்கள் எனப்படுகின்றன (பார்க்க அஷ்டலிங்கங்கள், திருவண்ணாமலை )

அஷ்டபைரவ லிங்கம்

தமிழகத்தில் சில ஆலயங்களில் எட்டு சிவலிங்கங்கள் சிவபைரவனின் எட்டு தோற்றங்களாக வழிபடப்படுகின்றன. அவை அஷ்டலிங்கங்கள் எனப்படுவதும் உண்டு. காஞ்சீபுரம் பிள்ளையார்ப்பாளையம் சோளீஸ்வரர் ஆலயத்தில் உள்ள எட்டு லிங்கங்கள் அஷ்டபைரவ லிங்கங்கள் எனப்படுகின்றன. (பார்க்க அஷ்ட பைரவர்)

அஷ்டவீரட்ட தலங்கள்

சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்ந்த எட்டு தலங்கள் அஷ்டவீரட்ட தலங்கள் எனப்படுகின்றன. இவற்றையும் அஷ்டலிங்கங்கள் என்று சொல்வதுண்டு. இந்த புராணமும் அட்டமூர்த்தங்கள் என்னும் அடிப்படை தத்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்டதே. (பார்க்க அஷ்ட வீரட்டானம்)

அஷ்டலிங்க பத்ரகா பத்மம்

சைவத்தின் தாந்த்ரிக மரபில் அஷ்டலிங்கங்கள் (அட்டமூர்த்தங்கள்) மண்டலங்களாக வரையப்பட்டு, மேருக்களாக உருவாக்கப்பட்டு வழிபடப்பட்டன. இவை அஷ்டலிங்க பத்ரகா பத்மம் என அழைக்கப்பட்டன. அவற்றை வரைவது, வழிபடுவது ஆகியவற்றை பழைய தாந்திரிக நூல்கள் விவரிக்கின்றன. தமிழகத்தில் அந்த தாந்த்ரிக மரபு புழக்கத்தில் இல்லை. கேரள நூல்களிலேயே குறிப்புகள் உள்ளன.

உசாத்துணை


✅Finalised Page