under review

தல புராணங்கள்

From Tamil Wiki

தமிழின் தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று புராணம். தல புராணம் என்பது, ஒரு தலத்தில், ஆலயம் தோன்றியதன் அல்லது அமைக்கப்பட்டதன் காரணம், அத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பெருமை, அந்த இறைவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறு, வழிபடும் முறை, அந்தத் தலத்தின் மூர்த்தி, தீர்த்தச் சிறப்புகள் போன்றவற்றைச் செய்யுள் மற்றும் உரைநடை வடிவில் கூறுவது. தமிழில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தல புராணங்கள் எழுதப்பட்டுள்ளன.

தல புராணங்களின் தோற்றம்

தெய்வத்தின் சிறப்பினையும், அருளாளர்களால் போற்றப்பட்ட திருத்தலங்களின் பெருமைகளையும், தத்துவங்களையும், கதைகளின் மூலமாக உணர்த்த எழுதப்பட்ட நூல்களே தல புராணங்கள். திருமுறைகள், மூர்த்தி (இறைவன்), தலம் (இறைவன் உறையும் கோயில் உள்ள ஊர்), தீர்த்தம் (அக்கோயிலை அடுத்துள்ள குளம் அல்லது ஆறு) ஆகிய மூன்றையும் வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தின. அதன் விளைவாகத் தல புராணங்கள் தோன்றின.

இறைவனை நாடித் துன்பம் தீர்த்து முக்தி பெற்றவர்களின் கதைகளையும் தல புராணங்கள் கூறுகின்றன. பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவிளையாடற் புராணமே, தமிழில் தோன்றிய முதல் தல புராணமாகக் கருதப்படுகிறது

பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார், தில்லையைப் பற்றி, ‘கோயில் புராணம்’ எனும் தல புராணம் பாடினார். அவரைத் தொடர்ந்து தமிழ்ப் புலவர்கள் பலரும் தல புராணங்களைப் படைக்கத் தொடங்கினர். தல புராணங்கள் தமிழ் மரபோடு இயற்றப்பட்டன. தமிழுக்கே உரிய இலக்கிய வகைமையாகத் தல புராணங்கள் கருதப்படுகின்றன. ஒரு சில நூல்கள் மட்டுமே வடமொழியை மூலமாக வைத்துத் தமிழில் எழுதப்பட்டன.

தல புராண விளக்கம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறுவதே தல புராணங்களின் முதன்மை நோக்கம். வழிவழியாகக் கூறப்பட்டு வந்த கர்ண பரம்பரைச் செய்திகள், பல தலைமுறைகளுக்குப் பின் எழுதப்பட்டமையால் இவை புராணம் என்று பெயர் பெற்றன. தல புராணங்களில் சில வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டன. சில தேவாரப் பாடல்களை மையமாக வைத்துப் புனையப்பட்டன. சில தொன்மை வரலாறுகளை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்டன. தல புராணங்களில் சில, அவற்றின் தன்மைக்கேற்ப மான்மியம், மகாத்மியம், லீலை, ரகசியம், காதை, விளையாடல், விலாசம் என்று பெயர் சூட்டப்பட்டன.

உதாரணம்:

புராணம் திருவிளையாடற் புராணம்
மான்மியம் அத்திகிரி மான்மியம்
லீலை தியாகராச லீலை
ரகசியம் காசி ரகசியம்; சிதம்பர ரகசியம்
காண்டம் காசி காண்டம்
காதை அரசிலிக் காதை
விலாசம் சங்கர விலாசம்

தலங்களின் அடிப்படையில் மட்டுமல்லாது வனம், ஆரண்யம், நகர், கோயில், நதி, மலை, பூ முதலானவற்றின் பெயரினை அடிப்படையாகக் கொண்டும் சில புராணங்கள் தோன்றின.

உதாரணம்:

வனம் கடம்பவனப் புராணம், தேவதாருவனப் புராணம், வேணுவனப் புராணம்
ஆரண்யம் (ஆரண்யத் தலபுராணம்) வில்வாரண்யத் தலபுராணம்
நகர் (நகர்ப் புராணம்) நெல்லை மாநகர்ப் புராணம், கரையேற விட்ட நகர்ப் புராணம்
கோயில் (கோயில் புராணம்) கோயிற் புராணம், இராசமன்னார் கோயிற் புராணம்
நதிப் புராணம் பஞ்சநதிப் புராணம், காவேரிப் புராணம், பெண்ணை நதிப் புராணம், திருக்கூவப் புராணம்
மலைத் தலபுராணம் சென்னிமலைத் தலபுராணம், திருமூர்த்தி மலைப் புராணம், தணிகாசலப் புராணம், மகாதேவ மலைப் புராணம்
பூப் புராணம் (பூவின் பெயர் கொண்ட புராணம்) செவ்வந்திப் புராணம்
இறைவன் பெயர் கொண்ட புராணம் சிதம்பர சபாநாத புராணம்

தல புராண வகைகள்

தமிழ்த் தல புராணங்கள், நூல் கூறும் பொருள் பாகுபாட்டினையும், அமைப்பையும் கொண்டு, ஆறு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவை,

  • மகா புராணங்கள்
  • இதிகாச புராணங்கள்
  • சிவ புண்ணியம், சிவ தருமம் கூறும் புராணங்கள்
  • ஆண்டவன், அடியார் வரலாறும், பிற வரலாறும் கூறும் புராணங்கள்
  • சாதிப் பெருமை விளக்கும் புராணங்கள்
  • ஊர்ச் சிறப்பினை எடுத்துரைக்கும் புராணங்கள்

தல புராண நூல் அமைப்பு

தல புராணங்கள் பொதுவாகக் கீழ்காணும் அடிப்படை அமைப்புகளைக் கொண்டு இயற்றப்பட்டன.

  • குறிப்பிட்ட தலத்திற்குரிய தேவாரப் பாடல்களை முதலில் கூறுதல்
  • சிறப்புப் பாயிரம்
  • நால்வர் துதி
  • நூலின் மூலம், உள்ளடக்கம், சுருக்கம், பாடல் தொகை, நூற்பெயர் ஆகியனவற்றைக் கூறுதல்
  • நூல் வந்த வழி கூறுதல்
  • அவையடக்கம்
  • நாட்டுச் சிறப்பும் நகரச் சிறப்பும்
  • தலவிருட்சங்கள் தோன்றிய வரலாறு
  • தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவற்றின் சிறப்பு
  • தல வரலாற்றுக் கதைகள்
  • பிற தல புராணக் கதைகளை இணைத்துக் கூறுதல்.
  • கதைகளில் ஊர்ப் பெயருக்கானக் காரணங்கள் கூறுதல்.
  • ஒரே தலத்தின் சிறப்பைப் பல தல புராணங்களிலும் எடுத்துக் கூறுதல்.
  • நூற்பயன்
  • புராணம் கேட்ட பயன்
  • புராணங்கேட்ட மகிமைச் சருக்கம்
  • வாழ்த்து

மூர்த்தி, தலம், தீர்த்தம்

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை அடிப்படையாகக் கொண்டே பல தல புராணங்கள் தோன்றின.

மூர்த்தி

தலத்தில் வீற்றிருக்கும் இறைவன், இறைவியே மூர்த்தி என்று அழைக்கப்படுகின்றனர். தலங்களுக்கு ஏற்ப மூர்த்தங்கள் (இறைவன், இறைவி) இருவரும் இணைந்தும் காட்சி அளிப்பர். சில இடங்களில் தனித்தனிச் சந்நிதியிலும் காட்சி தருவர்.

தலம்

தலம் என்பதற்கு இடம், பூமி எனப் பிங்கல நிகண்டு பொருள் கூறுகிறது. இடம், பூமி, உலகம், தலைமை நகரம் எனப் பலப் பெயர் பெறினும், இறைவன் உறையும் ஊர்களே புண்ணிய பூமி என்றும், தலம் என்றும் க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகின்றன. வடமொழியில் இது ‘ஸ்தலம்’ என்று அழைக்கப்படுகின்றது.

சிறப்புப் பொருந்திய ஊர்களுக்கு அங்குள்ள கோயில்களே பெருமை சேர்க்கின்றன என்பதால் தலம் என்பது சிறப்பாகக் கோயிலையே குறிக்கும்.

தீர்த்தம்

தீர்த்தம் என்பது இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திலோ அல்லது அடுத்தோ உள்ள நீர்நிலைகளைக் குறிக்கும். பெரும்பாலான புகழ்பெற்ற ஆலயங்கள் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் பெருமைகளைப் பெற்றவை.

இறைவனை வழிபட்டவர்கள் அங்கு உள்ள தீர்த்தங்களையும் வணங்கி வழிபட்டனர். அந்தத் தீர்த்தங்களில் மூழ்கி வழிபட்டோரை விட்டு நீங்கிய பாவங்களைத் தல புராணங்கள் கூறுகின்றன. இந்நீர்நிலைகளை அடிப்படையாகக் கொண்டு பல விழாக்கள் நடைபெறுகின்றன.

விருட்சம்

விருட்சம் என்ற சொல் ஆலயத்தில் உள்ள தல மரத்தைக் குறிக்கும். ‘தலவிருட்சம்’ என்றும் இது அழைக்கப்படும். முதன்முதலில் அம்மரத்தடியில் இறையுருவத்தை வழிபட்டு, பின்னர் ஆலயமாக உருவான தலங்களும் உண்டு. விருட்சங்களின் நிழல்களில் அமர்ந்து அதன் பயனை நுகர்ந்ததால் நீங்கிய பிணிகள், அதனால் பெறும் நன்மைகள் முதலானவற்றைத் தல புராணங்களில் காணலாம்.

தல புராணங்களின் பயன்கள்

ஆலயங்களின் தொன்மையான வரலாற்றுச் சிறப்பினை விவரிக்கும் நூல்களாகத் தல புராணங்கள் உள்ளன. தல புராணங்களில் பலவும் இறைவன், இறைவி தேவருக்கும், முனிவருக்கும் மற்றும் வந்து வழிபட்ட பிறருக்கும் அருள்பாலித்த கருத்தை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டன.

இன்னின்ன காலங்களில் இன்னின்ன முறைகளால் வழிபடுவோருக்கு பிணிகளும், துன்பங்களும் நீங்கும் என்பதையும், இம்மையில் வளமான வாழ்வும் மறுமையில் வீடுபேறும் கிட்டும் என்பதையும் தல புராணங்கள் விரிவாக விளக்குகின்றன.

தல புராணங்களுக்கு ஆதரவின்மை

தல புராணங்களில் சில பல்வேறு கற்பனைச் செய்திகளைப் புனைந்து எழுதப்பட்டதாலும், ஒரே மாதிரி அமைப்பைக் கொண்டிருந்ததாலும், கடும் செய்யுள் நடையில் இருந்ததாலும், மக்களால் புராணக் கதைகளைப் புரிந்து கொள்ள இயலாத சூழல்களாலும், ஆட்சி மாற்றங்களினாலும், பிற்காலத்தில் தல புராணங்கள் மக்களிடையே தங்கள் செல்வாக்கை இழந்தன.

உசாத்துணை


✅Finalised Page