under review

சங்கர விலாசம்

From Tamil Wiki
சங்கரவிலாசம்

சங்கர விலாசம் சிவனைப் போற்றிக் கூறும் கவிதை நூல். மராட்டிய மன்னர்கள் காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆசிரியர்

சங்கர விலாசத்தை இயற்றியவர் சிதம்பரநாத பூபதி. இவரைப் பற்றிய வேறு செய்திகள் எதுவும் தெரியவரவில்லை. வரலாற்றுச்செய்யுளில் 'விசயை நாரணன்சொற் சிதம்பர பூபதி' என்ற வரிகளால் ஆசிரியரின் பெயர் தெரிய வருகிறது. இவர் அரசவம்சத்தினராக இருக்கலாம் என்று பூபதி என்னும் பட்டப்பெயரால் அறியலாம். திருப்பரங்குன்ற முனிவரை தனக்கு தீட்சை அளித்த குரு எனவும், சத்தியஞானி என்பவரை ஞானாசிரியனாகவும், ஈசானதேவன், தத்துவநாதன் ஆகியோரத் தன் இலக்கண, இலக்கிய ஆசிரியர்களாகவும் கடவுள் வாழ்த்தில் குறிப்பிடுகிறார். நூலில் குறிப்பிடும் காலக்கணக்கைக் கொண்டு இது மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என அறிய வருகிறது (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு ). இவர் சங்கரன்கோவிலையடுத்த விஜயநாராயணபுரத்தில் வாழ்ந்தவர் என்று உ.வே.சா குறிப்பிடுகிறார்.

பதிப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இரத்தினசபாபதி ஐயர் தன்னிடமிருந்த ஓலைச் சுவடிகளிலிருந்து சங்கர விலாசத்தை 1937-ல் பதிப்பித்தார். செல்லரித்து, சொற்கள் அழிந்திருந்த இடங்களில் பொருத்தமான சொற்களை நிரப்பியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நூல் அமைப்பு

சங்கர விலாசம் சிவனைக் குறித்த புராணங்களில் எழுதப்பட்டவற்றைத் திரட்டி எழுதப்பட்ட சங்கர விலாசம் என்ற வடமொழி நூலைத் தமிழில் விருத்தப்படுத்தி எழுதப்பட்டது என்பதை வரலாற்றுப் பாடலால் அறியலாம். சங்கரன்கோயிலின் தெய்வமான சங்கரநயினாரைப் பற்றி எழுதப்பட்டது என உ.வே.சா குறிப்பிடுகிறார். 1435 விருத்தச் செய்யுள்களால் அமைந்தது. சிவபெருமானின் சிறப்பைக் கூறும் 12 கதைகளும், ருத்ராக்ஷம், ஐந்தெழுத்து மந்திரம், திருநீறு ஆகியற்றின் சிறப்பைக் கூறும் கதைகளும், சோமவார மகிமையைக் கூறும் கதை ஒன்றும், சிதம்பர்ம், திருவாரூர், காளத்தி, ஶ்ரீசைலம், உருத்திரகோடி ஆகிய தலங்களின் சிறப்பைக் கூறும் ஐந்து அத்தியாயங்களும், கோதாவரி நதியின் சிறப்பைக் கூறும் ஓர் அத்தியாயமும் ஆக 23 அத்தியாயங்கள் உள்ளன.

பாடல் நடை

சிவன் தாருகாவனத்தில் முனிவர்களின் அகந்தையை அழித்தது

அருண வெங்கதி ரளவிய தருவனத் தடைந்து
தருண வெம்முலை மடந்தையர் மயல்கொளத் தவள
வருண வெண்பொடி புனைந்துவண் பலிகொள வந்தோன்
கருணை தங்கிய சிவனெனக் கருதினீ ரிலையால் .
ஆதி நாதனை யவ்வனத் தகன்றிட விடுத்தீ
ரேது மாதவ மியற்றியென் னிமையமீன் றளித்த
மாது பாகனை வழுத்திலா ருய்வரோ வழங்கீர்
காத லார்காத் தெய்திய செம்பொனைக் களைந்தீர் .
வரைந்த சாதியும் வண்ணமு மிழந்துவந் திடினு
மரந்தை நீக்கிநின் றதிதிகள் பூசனை யடைவே
விரைந்து செய்துநல் லில்லறம் விளைத்திடு விதியுங்
காந்து சாபமும் விளைப்பசோ புலனெறி கடந்தோர் .

உசாத்துணை

சங்கர விலாசம், நூலகம். ஆர்க்


✅Finalised Page