under review

ஜான் மர்டாக்

From Tamil Wiki
ஜான் மர்டாக்

ஜான் மர்டாக் (John Murdoch) (ஜூலை 22, 1819 - ஆகஸ்ட் 10, 1904) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்; கல்வியாளர். இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வி மற்றும் மதப்பணிகளை மேற்கொண்டார். சென்னை கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தைத் தோற்றுவித்தார். தமிழில் 1865-ம் ஆண்டு வரை வெளிவந்த நூல்களின் விவரங்களைத் தொகுத்து இவர் உருவாக்கிய ‘Classified Catalogue Of Tamil Printed Books' தமிழின் மிக முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

ஜான் மர்டாக், ஜூலை 22, 1819 அன்று, ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோவில், ஜான்- மார்க்ரெட் இணையருக்குப் பிறந்தார். க்ளாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். கலை மற்றும் ஓவியத்தில் சிறந்து விளங்கினார். தனது 19 -ம் வயதில் ஓவிய மேற்கல்விக்காக ஹாலந்தில் உள்ள ஆமஸ்டர்டாம் சென்றார். கல்வியை முடிக்காமல் க்ளாஸ்கோ திரும்பினார். ‘தி நார்மல் செமினரி’ என்னும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியக் கல்வி கற்றார். க்ளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றார். அதே பல்கலைக்கழகத்தில் இராபர்ட் குன்னிகாம் என்பவரிடம் பயின்று ஆயருக்கான தகுதி பெற்றார்.

தனி வாழ்க்கை

ஜான் மர்டாக், திருமணம் செய்துகொள்ளவில்லை. இறுதிவரை தனியராக வாழ்ந்தார்.

இலங்கையில் கல்விப் பணிகள்

ஜான் மர்டாக், க்ளாஸ்கோவில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஜான் மர்டாக்கின் பணியால் கவரப்பட்ட ரெவரண்ட் பிரேசர், ஜான் மர்டாக்கை இலங்கையில் உள்ள அரசு மையப்பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமித்தார். ஜான் மர்டாக், நவம்பர் 24, 1844-ல், கொழும்பு நகரில் உள்ள அரசு மையப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களுக்குக் கல்வி போதித்தார். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பைபிளைக் கற்பித்தார்.

1848-ல், கொழும்பில் ஏற்பட்ட பொருளாதாரச் சூழல்களால் பல கல்வி நிலையங்கள் பாதிக்கப்பட்டன. கல்விக் கட்டணங்கள் பலவாறாக உயர்த்தப்பட்டன. மாணவர்கள் வருகையும் சேர்க்கையும் குறைந்ததால் பல பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் ஜான் மர்டாக் தனது பணியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் மதப்பணிகள்

ஆயர் கல்வி கற்றிருந்த ஜான் மர்டாக், மக்களிடையே கிறிஸ்துவின் போதனைகளை எடுத்துச் சொல்ல விரும்பினார். அதற்காக Local Track Soceity என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் மூலம் கிறிஸ்துவின் போதனைகளை, செய்திகளை, மதச் சிறப்பைப் பற்றி எழுதி நூல்களாக, செய்தி அறிக்கைகளாக வெளியிட்டார். சிங்கள டிராக்ட் சொசைட்டியுடன் இணைந்து பணிபுரிந்தார். கிறிஸ்து பற்றித் தானே பல செய்திகளைத் தன் கைப்பட எழுதி அவற்றை நகலெடுத்துப் பொது மக்களிடையே விநியோகித்தார். இலங்கையில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மிஷனரிகளுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் இணைந்து உழைத்தார். 1850-ல், கிறிஸ்தவ மதம் பரப்பும் நோக்கில், 'SINHALESE' என்ற மாத இதழைத் தொடங்கினார். அதன் மூலம் கிறிஸ்துவின் போதனைகளைச் சிங்கள மொழியில் பரப்பினார்.

ஜான் மர்டாக், மதம் பரப்பும் வேலைகளில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஜான் மர்டாக்கின் பணிகளுக்கு க்ளாஸ்கோவில் இருந்த WELINTONSTREET UNITED PRESBYTERIAN CHURCH நிதி உதவி அளித்து ஆதரித்தது. இந்நிலையில், ஜான் மர்டாக்கை The Church Missionary Society in Madras-ஐச் சேர்ந்த ரெவரண்ட் வில்லியம் க்னைட் (Rev. WILLIAM KNIGHT) என்பவர் சந்தித்தார். இருவரும் இணைந்து தமிழ் கூலி மிஷன் (Tamil Coolie Mission) என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர். இவர்களுடன் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் தாமஸ் என்பவரும் இணைந்தார். மாணவர்கள் கல்வி பயில பாட நூல்கள் இல்லை என்பதை அறிந்த இவர்கள் பாடப் புத்தகங்கள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா முழுமைக்கும் பொதுவான புத்தகச் சங்கம் ஒன்றைத் தோற்றுவிக்கும் எண்ணம் ஜான் மர்டாக்கிற்குத் தோன்றியது. அதைத் தனது நண்பரும் கொழும்பின் பிஷப்புமான சாப்மேனிடம் தெரிவித்தார். சாப்மேனும் அதனை ஏற்றுகொண்டு, அதுகுறித்து சென்னை பிஷப்பைச் சந்தித்து உரையாடும்படி ஆலோசனை கூறினார். அதற்கான ஓர் அறிமுகக் கடிதத்தை ஜான் மர்டாக்கிடம் கொடுத்தனுப்பினார்.

இந்தியாவில் கல்வி மற்றும் மதப் பணிகள்

இந்தியா வந்த ஜான் மர்டாக், சென்னை பிஷப்பைச் சந்தித்தார். அவருடைய வழிகாட்டுதலின்படி SOUTH INDIAN CHRISTIAN SCHOOL BOOK SOCIETY என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இந்நிறுவனத்திற்கு GOVERNER LORD HARRIS தலைவராகவும், பேராயர் DEALTRY குழு அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டனர். மர்டாக் இவ்வமைப்பின் முகவராக இருந்து பணியாற்றினார். இவ்வமைப்பின் பணி நிமித்தம் இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணப்பட்ட ஜான் மர்டாக், இக்காலகட்டத்தில் தமிழைக் கற்றுக் கொண்டார். இந்தியா முழுவதும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பள்ளிகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப அந்தந்த மொழிகளில் பாட நூல்களை வெளியிடுவதற்கான முயற்சிகளைப் பிற மிஷனரிகளுடன் இணைந்து மேற்கொண்டார்.

ஜான் மர்டாக், இந்தியாவில் உள்ள பல மிஷனரிகள் மற்றும் செல்வாக்கு மிக்க பிரமுகர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். நலிவடைந்த, பின்தங்கிய இடங்களிலெல்லாம் கிறிஸ்தவ நிறுவனங்களை, அதன் கிளைகளை நிறுவினார். கிறிஸ்தவ இலக்கியத்தை மக்கள் படித்துத் தெரிந்துகொள்வதையும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவுதையும் தனது நோக்கங்களுள் ஒன்றாகக் கொண்டு செயல்பட்டார்.

1858-ல் லண்டன் சென்ற ஜான் மர்டாக், சர்ச் மிஷனரி தலைமையிடம், இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்; புதிய பள்ளிகளை உருவாக்குதல்; கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் கிறிஸ்தவ புத்தகங்களை வழங்குதல் போன்ற தனது தனது நோக்கங்களைப் பற்றி எடுத்துரைத்தார். மிஷனரி தலைமையின் ஆதரவுடன் 1858-ல்,இந்தியாவில் கல்வி மற்றும் மதத்தைப் பரப்பும் வகையில் CHRISTIAN VERNACULAR EDUCATION SOCIETY என்ற அமைப்பை நிறுவினார். அதன் மூலம் அமிர்தசரஸ், அகமதுநகர், திண்டுக்கல் என மூன்று இடங்களில் பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் கிறிஸ்தவ ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ‘கிறிஸ்டியன் வெர்னாகுலர் சொசைட்டி’யின் கிளை கிளை நிறுவனமாக, 1858-ல், சென்னையில் ‘கிறிஸ்தவ தாய்மொழிக் கல்விச் சங்கம்' என்பது தோற்றுவிக்கப்பட்டது. அதுவே பின்னர் ‘கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்’ என்பதாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஜான் மர்டாக், 1872-ல் அலகாபாத்தில் நடைபெற்ற மிஷனரி மாநாட்டில் கலந்துகொண்டு கல்வி மற்றும் கிறிஸ்தவ இலக்கியம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார். இங்கிலாந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவிற்குப் பலமுறை தொழில்முறைப் பயணம் மேற்கொண்டார். உலகெங்குமுள்ள முக்கியக் கல்வி வாரிய உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். 1891-ல் ஸ்காட்லாந்தில் Christian Literature Society for China என்ற நிறுவனத்தை நிறுவி அதன்மூலம் கல்வி மற்றும் மதப் பணிகளை முன்னெடுத்தார்.

The Indian Missionary Manual Book by John Murdoch

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்

ஜான் மர்டாக், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் மூலம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள் பலவற்றையும் அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் மொழிக்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பல அகராதிகள், இலக்கணங்கள், பாட நூல்கள், பாட விளக்கக் குறிப்புகள், வரைபடங்கள் போன்றவற்றை வெளியிட்டார். தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நூல்களை வெளியிட்டார். இந்நிறுவனத்தின் முதல் பத்து ஆண்டுகளில் 250 புத்தகங்களை, உலகின் 14 மொழிகளில் எழுதச் செய்து மூன்று மில்லியன் பிரதிகளை வெளியிட்டார்.

ஜான் மர்டாக், கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின், தமிழ் மொழிப் பிரிவின் பதிப்பாசிரியராக எச்.ஏ. கிருஷ்ணபிள்ளையை நியமித்தார். சாமுவேல் பவுல் உள்ளிட்டோரிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். தனது நூலாக்கப் பணிகளுக்காக தமிழறிஞர்கள் பலரோடு நெருங்கிய நட்புக் கொண்டு அவர்களது ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்பட்டார்.

எழுத்து

ஜான் மர்டாக் தினந்தோறும் நாட்குறிப்பு எழுதும் பணியை மேற்கொண்டிருந்தார். உலகளாவிய தனது நண்பர்களுக்கு அடிக்கடிக் கடிதங்கள் எழுதினார். அவற்றில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தான் பெற்ற அனுபவங்களை, இந்தியப் பயணங்களின் போது தான் எதிர்கொண்ட சிக்கல்களைப் பற்றியெல்லாம் விரிவாக விளக்கி எழுதினார்.

ஆங்கில இதழ்கள் பலவற்றில் கிறிஸ்தவம் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். அவற்றைத் தொகுத்து ‘ESSAYS ON THE BIBLE' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். கிறிஸ்தவத் தமிழக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஊக்குவித்தார். இதழ்கள் சிலவற்றையும் தோற்றுவித்து நடத்தினார்.

ஆவணப்பணிகள்

ஜான் மர்டாக் ஆவணப்படுத்துதலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் பயின்றிருந்த அவர், தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் ஒன்றைத் தன் இல்லத்தில் அமைத்திருந்தார். அவற்றையும் தன் தேடலையும், பல்வேறு அறிஞர்களிடமும், நூல்களிடமிருந்தும் தான் திரட்டிய தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, 1865 வரை தமிழில் வெளியான நூல்கள் பற்றிய நூல் விவரப் பட்டியல் தொகுப்பான, தமிழ் நூல் விவர அட்டவணை (Classified Catalogue Of Tamil Printed Books) நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

தமிழில் 1865 வரை சமயம், தத்துவம், இலக்கியம், மொழியியல், கணிதம், புவியியல் மற்றும் வரலாறு, இதழ்கள், செய்தித்தாள்கள் என்று ஒவ்வொரு வகைப்பாட்டிலும் அச்சாகி வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கை, நூல்களின் பெயர், ஆசிரியர்களின் பெயர், ஆசிரியர்கள் பற்றிய சிறு குறிப்பு, நூல்கள் பற்றிய அறிமுகங்கள் போன்றவை அந்த நூலில் இடம்பெற்றன. கூடவே தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை போன்றவற்றைப் பற்றியும் தனி அத்தியாயங்களில் ஜான் மர்டாக் விளக்கியிருந்தார். தமிழில் வெளியான முதல் நூல் விவரப் பட்டியல் நூலாக 'Classified Catalogue Of Tamil Printed Books' நூல் அறியப்படுகிறது.

பாராட்டுக்கள்/விருதுகள்

  • ஜான் மர்டாக்கின் மதப் பணிக்காகவும், அவருடைய பொதுச் சேவைக்காகவும், அவரைப் பாராட்டி 1889-ம் ஆண்டு LIFE GOVERNER OF SOCIETY என்ற அமைப்பு கௌரவித்தது.
  • கிளாஸ்கோ பல்கலைக்கழகம் LL.D. என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
  • இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் லாரன்ஸ் ஜான் மர்டாக் செய்து வரும் பணிகளைப் பாராட்டினார்.
  • ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் ஜான் மர்டாக்கைச் சந்திக்க விரும்பி, மர்டாக் இங்கிலாந்து சென்றபோது சந்தித்து அவரது பணிகளைப் பாராட்டினார்.
  • ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கி உழைத்த ஜான் மர்டாக்கின் பணிகளை அவரது நண்பர்கள் பாராட்டி, வாழ்த்துரை அளித்தனர்.
  • பிரிட்டிஷ் இந்திய அரசு ஜான் மர்டாக்கின் பணிகளைப் பாராட்டி ‘கைசர்-இ-ஹிந்த்’ வெள்ளிப் பதக்கம் அளித்துச் சிறப்பித்தது.
  • லார்ட் கர்சன், லார்ட் நார்த் ப்ரூக் ஆகியோர் ஜான் மர்டாக்கின் தன்னலமற்ற கல்வி மற்றும் மதச் சேவைகளைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதி ஊக்குவித்தனர்.
  • பிரிட்டிஷ் இந்திய அரசு, ஜான் மர்டாக்கின் பணிகளைச் சிறப்பிக்கும் வகையில், 1904-ல், தங்கப் பதக்கம் அளித்தது.
John Murdoch Life History In English

மறைவு

ஜான் மர்டாக், திடீர் உடல் நலக் குறைவால், ஆகஸ்ட் 10, 1904 அன்று, தனது 85- ஆம் வயதில், சென்னையில் காலமானார்.

John Murdoch Life History by Mrs. J.H. Mair

நினைவு நூல்கள்

  • ஜான் மர்டாக்கின் வாழ்க்கையை, ஹென்றி மோரிஸ், ‘The Life of John Murdoch, LL.D.; The Literary Evangelist of India' என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
  • திருமதி ஜே.ஹெச். மெய்ர், ஜான் மர்டாக்கின் வாழ்க்கையை, ‘John Murdoch - Pioneer in Christian Literature' என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். தமிழ் இணைய மின்னூலகத்தில் அந்நூல் சேகரிக்கப்பட்டுள்ளது.
  • கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், ஜான் மர்டாக்கின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் நூலாக வெளியிட்டது.

வரலாற்று இடம்

ஜான் மர்டாக், தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்த அயல்நாட்டுக் கிறிஸ்தவர்களில் ஒருவர். இலக்கிய நற்செய்தியாளர் (Literary Evangelist) என்று சக மிஷனரிகளால் மதிப்புடன் அழைக்கப்பட்டார். கிறிஸ்தவ சமய வளர்ச்சிக்காகப் பணிபுரிந்தாலும் கல்வி மற்றும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழ் மொழியில் பாட நூல்கள் உருவாக்கப் பட வேண்டும் என்பதற்காகவும் சிந்தித்து உழைத்த முன்னோடி அறிஞராக ஜான் மர்டாக் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • Classified Catalogue Of Tamil Printed Books
  • The History of Civilization in India
  • ESSAYS ON THE BIBLE
  • The Indian Missionary Manual: Or, Hints to Young Missionaries in India, With Lists of Books
  • Catalogue of the Christian Vernacular Literature of India
  • The Cow Ouestion in India, with Hints on the Management of Cattle
  • How to pass Examinations
  • Conference on Urdu and Hindi Christian literature, Held at Allahabad, 24 and 25 February (1875)
  • Education in India: A Letter to His Excellency the Most Honourable, the Marquis of Ripon
  • England’s Duty to India: A Letter to the Marquis of Hartington
  • Debt: and How to get out of it
  • The Duty to a Wife or How to have healthy Children
  • Theosophy Unveiled
  • Theosophy Exposed: or Mrs. Besant and Her Guru: An Appeal to Educated Hindus
  • The Theosophic Craze: Its History: The Great Mahatma Hoax
  • Swami Vivekananda on Hinduism: An Examination of His Address at the Chicago Parliament of Religions
  • Caste: Its Supposed Origin: Its History: Its Effects: The Duty of Government, Hindus, and Christians With Respect to It: And Its Prospects
  • The Call of the Twentieth Century to Awakened India
  • The Indian Patriot’s Duty to his Country
  • God's Voice from Armenia to the Churches
  • Kasi, or Benares: The Holy City of the Hindus
  • Report on Theological Education in India
  • The History of Civilization in India: A Sketch, With Suggestions for the Improvement of the Country
  • Hindu and Muhammadan Festivals
  • Pictorial Tour Round India

உசாத்துணை


✅Finalised Page