under review

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள்

From Tamil Wiki

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் (1875-1950) ஈழத்து தமிழ் அறிஞர், உரையாசிரியர், ஜோதிடர், பதிப்பாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலோலியில் தும்பளை என்னும் ஊரில் பிப்ரவரி 17, 1875-ல் பிறந்தார். தந்தை சபாபதி ஐயர். தாய் வழிப் பாட்டன் மகாதேவக் குருக்கள் இவருக்கு ஏடு தொடங்கி, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்பித்தார். தாய் மாமனும் ஆரிய திராவிட மகாபண்டிதருமான முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், சமஸ்கிருதம், தருக்கம், வியாகரணம், ஜோதிடம் ஆகியவற்றையும் கற்றார். இரண்டு ஆண்டுகள் மேலைப் புலோலியிலுள்ள சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், சமஸ்கிருதத்திலும், ஜோதிடத்திலும் புலமை இருந்ததால் ‘சாஸ்திரிகள்" என்று அழைக்கப்பட்டார்.

ஜோதிடம்

யாழ்ப்பாணத்தில் கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பஞ்சாங்கங்கள் சீரான முறையில் கணிக்கப்படாமல் இருந்ததைக் கண்டு, அவற்றிலுள்ள குறைபாடுகளை நீக்குவது பற்றி வலியுறுத்தினார். ச. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் முயற்சியால், பருத்தித் துறையிலிருந்து வாக்கிய கணித பஞ்சாங்கமொன்று ஆண்டுதோறும் வெளிவந்தது. அப்பஞ்சாங்கத்தினைக் இவரே கணித்து வெளியிட்டார்.

பதிப்பாளர்

ஜோதிட விலாச யந்திரசாலை

பிற அச்சகங்களில் ச. சுப்பிரமணிய சாஸ்திரிகளின் பஞ்சாங்கம் அச்சிட்டதால் விலை மிகுதியானது மட்டுமல்லாமல் உரிய காலத்தில் அச்சிட்டு எடுத்துக் கொள்வதிலும் தொல்லை ஏற்பட்டது. அதனால் தும்பளையில் தமது இல்லத்திலேயே "ஜோதிட விலாச யந்திரசாலை’ என்னும் பெயருடன் அச்சகமொன்றை நிறுவினார். சாஸ்திரிகள் பஞ்சாங்கம் கணித்துப் பதிப்பிப்பதுடன் நின்றுவிடாமல், சாதக ரத்னகரம், இருதுசாதகம், பால சிகூடிா மஞ்சரி, சமஸ்கிருத பிரதம பாலபாடம், சிவராத்திரி மகிமை முதலான நூல்களையும் தமது அச்சகத்தில் பதிப்பித்தார்.

கலாநிதி யந்திரசாலை

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1904-ல் தன் தம்பி சோமசுந்தர ஐயரின் துணையுடன் “கலாநிதி யந்திரசாலை" என்னும் பெயருடன் அச்சகத்தை நிறுவினார். அவ்வச்சகத்திலேயே இவரது நூல்கள் யாவும் அச்சேற்றப்பட்டன. நாவலரின் முன்னேராகிய திருநெல்வேலி ஞானப்பிரகாச சுவாமிகள் சமஸ்கிருதத்தில் எழுதி ஏட்டு வடிவில் கிடந்த பிரமாண தீபிகா விருத்தி, சிவஞான போதவிருத்தி, சித்தாந்தசிகாமணி ஆகிய சைவ சித்தாந்த நூல்களையெல்லாம், நல்லூர், த. கைலாசப்பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்கி ம. முத்துக் குமாரசுவாமிக்குருக்களுடன் இணைந்து அச்சிடுவதற்காகப் பிழைப் பரிசோதனை செய்தார். சங்கானை, அருணாச்சல சாஸ்திரியார் (அண்ணாச்சாமிக் குருக்கள்) ’ஆபஸ்தம்ப அபரப் பிரயோகம்’ என்னும் சமஸ்கிருத நூலை அச்சேற்றியபோதும் அதற்குப் பல திருத்தங்கள் செய்தார்.

அமைப்புப் பணிகள்

கோயில்களில் நடைபெறும் புராண படனங்களிலும் பிற இடங்களில் விரிவுரைகள் செய்தார். “வித்தியா விருத்தித் தருமாலயம்" என்னும் பெயருடன் ஒரு நூல் நிலையத்தை நிறுவினார்.

இலக்கிய வாழ்க்கை

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும், பாண்டித் துரைத்தேவர், டாக்டர். உ.வே. சாமிநாதையர் ஆகியோருடனும் தொடர்பு கொண்டிருந்தார். "சொற்பொருள் விளக்கம்" என்னும் தமிழகராதியை வெளியிட்டார். தமிழறிஞரும் ஜோதிட வல்லுநருமான தும்பளை மு. சின்னைய சாஸ்திரியாரவர்களுக்கும் இவருக்கும் இடையில் கண்டன மறுப்புப் போர் ஒன்று நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. கந்தபுராணத்திற்கு உரை எழுதினார்.

மறைவு

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் 1950-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • கந்தபுராணம்-உற்பத்திகாண்டம் உரையுடன்
  • கந்தபுராணம்அகர காண்டம் உரையுடன்
  • கந்தபுராணம்மகேந்திர காண்டம் உரையுடன்
  • கந்தபுராணம்யுத்தகாண்டம் (பகுதி) உரையுடன்
  • நீதிவெண்பா விரிவுரை
  • கந்தரனுபூதியுரை
  • ஏகாதசிப் புராணக் குறிப்பு
  • சொற்பொருள் விளக்கம்-தமிழ் அகராதி

உசாத்துணை


✅Finalised Page