சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார்
சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சிறிய கருநிற தும்பிகளை பற்றி பாடல் எழுதியிருந்ததால் காரண பெயராக சிறுகருந்தும்பியார் என அழைக்கப்பெற்றதாக கருதப்படுகிறது. இவர் சோழநாட்டில் அமைந்துள்ள முகையலூர் என்னும் ஊரில் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
சோணாட்டு முகையலூர் சிறுகருந்தும்பியார் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் 181 மற்றும் 265 ஆம் பாடல்களாக இடம்பெற்றுள்ளன. வல்லார் என்னும் ஊரின் தலைவனான பண்ணன் என்பானின் கொடை திறத்தை புறநானூறு 181 ஆம் பாடலில் வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமையுமாறு பாடியுள்ளார். பண்ணன் போரில் வீரமரணம் அடைந்த போது ஏற்பட்ட துயரத்தை 265 ஆம் பாடலில் கரந்தைத் திணையில் கையறுநிலை துறையில் அமையுமாறு பாடியுள்ளார்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு - 181
- வல்லார் என்னும் ஊரினை பண்ணன் என்பவன் ஆட்சி செய்தான்.
- போர் செய்யும் போது பாதுக்காப்பாக பதுங்கி கொள்வதற்கு ஏற்ப அடர்த்தியான காட்டினை கொண்டது வலிமையான அரண்களால் சூழப்பட்டதுமான ஊர் பண்ணனின் வல்லார்.
- தொடர்ச்சியாக போரில் ஈடுபடுவதால் பண்ணனின் அம்புகள் எப்போதும் புலால் நாற்றம் வீசுபவை.
- பண்ணன் இரவலர் பசி பிணியை போக்கும் கொடை குணம் மிகுந்தவன்.
- பண்ணனின் ஊர் முற்றத்தில் நின்றிருக்கும் விளாமரத்தில் இருந்து வீழும் விளாம்பழத்தை யானைக்கன்றும் வேட்டை குல மகளிரின் மகனும் ஒரு சேர எடுத்து உண்பர். அத்தகு வளம் உடையது பண்ணன் ஆண்ட வல்லார் என்னும் ஊர்.
புறநானூறு - 265
- மன்னர்களுக்கு படைத்துணை தரும் தளபதிகள் குதிரைப்படையை சொந்த கொண்டிருப்பர்.
- போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவை போற்றும் நடுக்கல் பாறைகள் சூழ்ந்த பொட்டல் வெளியில் நடப்படும். நடுக்கல்லான வீரர்களுக்கு வேங்கை மலர் சூட்டி, பனங்குருத்துகளை படைப்பர்.
பாடல் நடை
புறநானூறு - 265
- திணை: கரந்தை
- துறை: கையறு நிலை
ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Apr-2025, 10:40:51 IST