சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார்
- காசி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காசி (பெயர் பட்டியல்)
சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் ( 1806-1871) தமிழின் தொடக்ககால நாடக ஆசிரியர்களில் ஒருவர். சமூகநாடகங்களை எழுதிய முன்னோடி. உடுமலைப்பேட்டையில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். பிரம்ம சமாஜக் கொள்கைகளில் ஆர்வமுடையவர். டம்பாச்சாரி விலாசம், தாசில்தார் நாடகம், பிரம்ம சமாஜ நாடகம் போன்ற நாடக நூல்களை இயற்றியவர்.
பிறப்பு, கல்வி
காசி விஸ்வநாத முதலியார், 1806-ல், சென்னை சைதாப்பேட்டையில், செல்வ வளம் மிக்க குடும்பத்தில், தியாகராஜ முதலியாருக்கு மகனாகப் பிறந்தார். உயர் கல்வி கற்ற இவர், தமிழோடு தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார்.
தனி வாழ்க்கை
காசிவிஸ்வநாத முதலியார் சித்தூர் மாவட்ட நீதிமன்றம், கடப்பை மாவட்ட நீதிமன்றம் போன்றவற்றில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். பின் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று பெல்லாரி மாவட்ட நீதிமன்றத்தில் சில ஆண்டுகாலம் பணியாற்றினார். 1853-ல் கோயமுத்தூர் மாவட்டம் உடுமலைப்பட்டையில் நீதிபதியாகப் பணிபுரிந்தார். 1868-ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று சென்னைக்கு குடியேறினார்.
இலக்கிய வாழ்க்கை
நாடகங்கள்
சமூகசீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் நோக்கத்துடன் காசிவிஸ்வநாத முதலியார் 'டம்பாச்சாரி விலாசம்’ என்ற நாடகத்தை 1867-ல் எழுதினார். அரசுத்துறை ஊழல்களை கண்டிக்கும் 'தாசில்தார் நாடகம்’ அடுத்து வெளியானது. 1870-ல், ’பிரம்ம சமாஜ நாடகம்’ என்பதை எழுதி வெளியிட்டார்.
பொதுநூல்கள்
மருத்துவம், சோதிடம், வேதம், சாஸ்திரம், இலக்கணம், சமையற்கலை நூல்களையும் படைத்துள்ளார் காசி விஸ்வநாத முதலியார்.
காசி விஸ்வநாத முதலியாரின் மகன் சோமசுந்தர முதலியார், தனது ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ் அச்சகத்தின் மூலம் இந்த நூல்களை பிற்காலத்தில் மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.
இதழியல்
பிரம்ம சமாஜக் கொள்கைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் காசி விஸ்வநாத முதலியார். 1870-ல், தமது இல்லத்திலேயே 'பிரம்ம ஸமாஜம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். 'தத்துவ போதினி’ என்ற சமயம் சார்ந்த இதழ் முறையாக வெளிவருவதற்கு நிதி உதவி அளித்து ஆதரித்தார். பிரம்ம சமாஜக் கொள்கைகளை விளக்கும் வகையில் 'பிரம்ம தீபிகை’ என்ற இதழை ஆரம்பித்து நடத்தினார்.
மறைவு
அக்டோபர் மாதம் 14, 1871-ல், காசி விஸ்வநாத முதலியார் காலமானார்.
வரலாற்று இடம்
புராண, இதிகாச, பக்தி நாடகங்களையே கண்டுவந்த தமிழர்களிடையே, சமூகச் சீர்த்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட நாடகங்களைப் படைத்தவர் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார். இவரது நாடக நூல்களைப் பாராட்டி ஐம்பதுக்கும் மேற்பட்ட புலவர்கள் சாற்றுக்கவி வழங்கியுள்ளனர். சென்னைச் சகலகலா வித்தியாசாலைத் தமிழ்த் தலைமைப் புலவர் சீனிவாசராகவாசாரியார், காசி விஸ்வநாத முதலியாரை,
பாரார் புகழ்வளத்துச் சைதாபுர மகிபன் மேதா
திகழ்காசி விச்சுவநாதன் "
- என்று புகழ்ந்துரைத்துள்ளார். பம்மல் சம்பந்த முதலியார், தனது 'நாடகத் தமிழ்' நூலில், "தமிழ் நாடகமானது சுமார் 100 வருடங்களுக்கு முன்பு மறுமலர்ச்சி அடையத் தொடங்கின காலத்தில் அதை ஆதரித்துத் தமிழ் நாடகங்கள் எழுதி அச்சிட்டவர்களில் முக்கியமானவர்களுள் ஒருவர் காசிவிசுவதாத முதலியார்" என்று குறிப்பிட்டுள்ளார். காசி விஸ்வநாத முதலியாரைப் பற்றி எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு, அமிர்தகுணபோதினி இதழில் வெளியான தனது 'சென்று போன நாட்கள்’ என்ற தொடர் கட்டுரையில், "இவரது நூல்கள் யாவும் மிக்க எளிய நடையில் அமைந்துள்ளவை. பாடல்களும் அவ்விதமே வெகு சுலபமானவை. தமது மனஸாக்ஷிக்கு விரோதமின்றி நடந்த பெரியோராவர். பண்டைக் காலத்துப் பிரபல கிரந்த கர்த்தர்களிலே இவருமொருவராவார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
நூல்கள்
நாடக நூல்கள்
- டம்பாச்சாரி நாடகம்
- தாசில்தார் நாடகம்
- பிரம்ம சமாஜ நாடகம்
பொது நூல்கள்
- புனர் விவாக தீபிகை
- பிரம்ம பிரார்த்தனைப் புஸ்தகம்
- யாப்பிலக்கண வினா-விடைச் சுருக்கம்
- அப்பர்சாமி பதிகம்
- தாலுகாச் சட்டம்
- மேகவெள்ளைக்கு மேலானபரிகாரம்
- ருக், யஜுர், சாமம், அதர்வணம் என்கிற நான்குவேத ரகசியம்
- வேதப்பொருள் விளக்கம்
- வைத்தியத் திரட்டு
- வைத்திய அகராதி
மொழிபெயர்ப்பு நூல்கள்
- மநுநீதி சாஸ்திரச் சுருக்க அட்டவணை
- பிராயச்சித்த நிர்ணய சாஸ்திர சங்கிரகம்
- பாக சாஸ்திரம்
- அக்பர் பாதுஷா புலவுநூல் என்னும் இந்தியா சமையல் சாஸ்திரம்
- தன்வந்திரி நாடி, ஜுர, ஜன்னிபாத சிந்தாமணி
உசாத்துணை
- தாய்நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு: தமிழ் இணைய நூலகம்
- டம்பாசாரி விலாசம்: ஆர்கைவ் தளம்
- சமுதாய இலக்கியம்:தமிழ் இணைய நூலகம்
- விலாச நாடகங்கள்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி: தமிழ் இணைய நூலகம்
- நாடகத்தமிழ் பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் இணைய நூலகம்
- சென்று போன நாட்கள்: எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு, பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பக வெளியீடு
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:38:59 IST