under review

தத்துவபோதினி

From Tamil Wiki
தத்துவபோதினி இதழ்

தத்துவபோதினி (1864- 1872 ) இந்து மதச் சீர்திருத்த இதழ். தமிழில் வெளிவந்த இந்து சமயம் சார்ந்த முதல் இதழாக 'தத்துவபோதினி’ இதழ் கருதப்படுகிறது. இவ்விதழில் பிரம்மசமாஜக் கொள்கைகள் இடம்பெற்றன.

தொடக்கம்

பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்த கேசவசந்திர சென்னின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களான வி.ராஜகோபாலாச்சாருலுவும், சேலம் பி. சுப்பராயலு செட்டியும் சென்னையில் பிரம்ம சமாஜத்தின் கிளையாக, ஏப்ரல் 7, 1864-ல், 'வேத சமாஜம்’ என்ற அமைப்பை நிறுவினர். பின்னர் தங்கள் நண்பர் ஸ்ரீதரலு நாயுடுவையும் இணைத்துக் கொண்டு பிரம்ம சமாஜ வளர்ச்சிக்காக மே 7, 1864-ல், 'தத்துவபோதினி’ இதழைத் தொடங்கினர்.

சாந்தோமில் தத்துவபோதினி அச்சுக்கூடம் என்பதை நிறுவி அதன் மூலம் இவ்விதழை வெளியிட்டனர். இவ்வச்சுக்கூடம் அமைப்பதற்கு வள்ளல் பாண்டித்துரைத் தேவரின் தந்தை பொன்னுசாமி தேவர் அவர்கள் 1000 ரூபாய் நன்கொடையளித்தார். கா.தெய்வசிகாமணி முதலியார் என்பவர் இவ்விதழின் வெளியீட்டாளராக இருந்தார்.

தத்துவபோதினியின் சந்தா சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டும் வருஷம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் எட்டு அணா. சென்னைக்கு அப்பால் உள்ளவர்களுக்குச் சந்தா தபால் செலவுடன் சேர்த்து ரூபாய் - 2/-. பத்துப் பிரதிகளுக்கு மேல் வாங்கும் வெளியூர்க்காரர்களுக்கு தபால் கூலியுடன் சேர்த்து 1 ரூபாய் 12 அணா வசூலிக்கப்பட்டது. தனி இதழ் விலை பற்றி இதழில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

உள்ளடக்கம்

தத்துவ இதழாக வெளிவந்தது தத்துவபோதினி. இதன் ஒவ்வொரு இதழிலும் முதல் பக்கத்தில் 'கடவுள் துதி’ என்ற தலைப்பில் ராகம், தாளம் பற்றிய குறிப்புகளுடன் தோத்திரப் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. 'சத்தியமே சக்தி- தத்துவமே சித்தி’ என்ற குறிப்பு பிற்காலத்து இதழ்களின் முகப்புப் பக்கத்தில் காணப்படுகிறது. சில இதழ்களில் தெலுங்கிலும் கிரந்த எழுத்துகளிலும் பாடல்கள் காணப்படுகின்றன. சில சமயங்களில் இதழின் கடைசிப் பக்கங்களிலும் பாடல்கள் வெளிவந்துள்ளன. வேதங்களைப் பயிற்றுவித்தல், பெண் கல்வியின் இன்றியமையாமை, சதிராட்டத்தை ஒழித்தல், சாதிய ஏற்றத் தாழ்வுகளைக் களைதல், குழந்தைத் திருமணத்திற்கு எதிர்ப்பு, விதவை மறுமண ஆதரவு போன்ற பல சமூகசீர்திருத்தச் சிந்தனைகளுடன் தத்துவ போதினி இதழ் வெளியிடப்பட்டது. பெண்கள் நலம், கல்வி பற்றி மிக விரிவான கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின. பால்ய மணத்தைக் கண்டித்தும், கைம்பெண் மணத்தை ஆதரித்தும், பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அர்த்த சாஸ்திரம், பிரகிருதி சாஸ்திரம், தைத்ரீய உபநிஷத், ருக் வேத சம்ஹிதை, பழமொழிகள், வர்த்தமானக் குறிப்புகள் போன்றவையும் இடம் பெற்றுள்ளன.

இதழின் ஆசிரியர்கள்

தத்துவபோதினி இதழ் சுமார் ஒன்பது ஆண்டு காலம் வெளிவந்தது. இக்கால கட்டத்தில் மூவர் இதன் ஆசிரியர்களாகச் செயல்பட்டனர். இதழின் முதற் கால கட்டத்தில் வி. ராஜகோபாலாச்சாருலு ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். அவரைத் தொடர்ந்து சேலம் பி.சுப்பராயலு செட்டி ஆசிரியராக இருந்தார். இவரது மேற்பார்வையில் இவரது நண்பரான க. துரைசாமி ஐயங்கார் சில காலம் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். இவர்களை அடுத்து இதழின் மூன்றாவது கட்டத்தில், பிரம்ம சமாஜக் கொள்கைகளை வங்க மொழியில் கற்றவரும் சமாஜக் கொள்கைகளை விளக்கும் 'பிரம்மதர்மா’ என்ற வங்கமொழி நூலைத் தமிழில் மொழிப் பெயர்த்தவருமான ஸ்ரீதரலு நாயுடு ஆசிரியரானார். இவர் காலத்தில் தத்துவபோதினி இதழ் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. 1865 முதல் இதே குழுவினரால் 'விவேக விளக்கம்’ என்ற இதழும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தெலுங்கு மொழியிலும் தத்துவபோதினி இதழ் சில காலம் வெளிவந்தது.

தத்துவபோதினி இதழில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இடம் பெற்றன. அனைத்திற்கும் தாய் மொழி பாஷை சம்ஸ்கிருதம் என்பது இவ்விதழ் ஆசிரியர்களின் கொள்கையாக இருந்தது. தமிழை விடத் தெலுங்கு மொழி இனிமையானது என்ற கருத்தும் அவர்களுக்கிருந்தது.

இதழிலிருந்து ஒரு சிறு பகுதி

அந்தக் காலப் பக்கங்கள் : பாகம் -1, தடம் பதிப்பக வெளியீடு

ஆகஸ்ட் 1865 இதழில் வெளியாகி இருக்கும் ஆசிரியர் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி இது :

'தத்துவ போதினிகர்த்தர்களுக்கு...

சோதரர்களே! நம்ம தேசத்தாருக்கு மிகுந்த க்ஷேமகரமான ஒரு பிரயத்தனம் ரங்கநாதசாஸ்திரி யவர்களால் செய்யப்படுகிறதென்று கேள்விப்பட்டு, அதை நம்மவரனைவர்க்குந் தெரிவிக்க நான் விருப்பங்கொண்டிருக்கின்றமையால் நீங்கள் தயை செய்து இந்தச் சஞ்சிகையை உங்கள் பத்திரிகையில் பிரசுரப்படுத்துவீர்களென்று கோருகிறேன்.

நமது தேசத்தில் பாலுண்னும் பெண்களுக்கு விவாகம் செய்வதினாலும், பெண்களுக்குப் புனர்விவாகம் செய்யாமையினாலும், விளைகின்ற அளவற்ற தீமைகளை நேராய்க்கண்டும் கேட்டும் அனுபவித்து மிருப்பதினால், இத்தீமைகளை நிவர்த்திக்க மேற்கண்ட ரங்கநாதசாஸ்திரிகள் வெகுநாளாய் யோசித்திருந்ததாய்க் காண்கிறது. பிரகிருதத்தில் சங்கராசாரியர் மடம் இவ்விடம் வந்திருக்கின்றமையால் அந்த மடாதிபதியின் சகாயத்தால் அவர் இப் புகழ் பொருந்திய கோரிக்கையை நிறைவேற்ற யத்தனித்ததாய் கேள்விப்படுகிறேன். இவர் பிரயத்தனத்தின் உத்தேசியம் என்னவெனில் பிரகிருதத்தில் நடந்தேறிவரும் பொம்மைக் கல்லியாணங்களை நிறுத்திவிட்டு பெண்களுக்கு வயதும் பகுத்தறிவும் வந்தபிறகு கல்லியாணம் செய்விக்கவேண்டுமென்பது தான். இப்பால் நிஷ்பக்ஷபாதமாய் உரைக்கத்தக்க பண்டிதர்களை விசாரிக்குமளவில், இத்தன்மையான விவாஹத்துக்கு சாஸ்திர பாதகமில்லையென்றும், ஆகிலும், புதுமையானதாகையால் உலகத்தார் ஒப்பமாட்டார்களென்றும் விடையுரைத்தார்கள். லவுகிகயுக்திகளை யோசிக்கையில் அளவற்ற நன்மையளிக்கத்தக்க இக்காரியத்துக்குச் சாஸ்திர பாதகமும் இல்லாவிடில் அதையனுசரிக்க என்ன தடையுண்டோ என்னாலறியக்கூடவில்லை. கடவுளின் கிருபையினால் இக்காரியம் கைக்கூடிவருமெனில் இதற்காக முயற்சியும் ரங்கநாதசாஸ்திரியவர்களுடைய பேரும் பிரதிஷ்டையும் இந்த பூமியுள்ளவரையில் நிலைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.’

இதழ் நிறுத்தம்

1868-ல் வி .ராஜகோபாலாச்சாருலுவும் ப. சுப்பராயலு செட்டியும் காலமான பிறகு பொருளாதார ரீதியாகப் பல சிக்கல்களைச் சந்தித்த தத்துவபோதினி இதழ், 1872-ல் நின்று போனது.

வரலாற்றிடம்

பிரம்ம சமாஜம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை இவ்விதழ் முன் வைத்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் அக்கருத்துக்கள் சென்று சேர்ந்தன. தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜ வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய இதழாக 'தத்துவ போதினி’ இதழை மதிப்பிடலாம். பிற்காலத்தைய மததத்துவ இதழ்களுக்கு முன்னோடியாகவும் அமைந்தது.

உசாத்துணை


✅Finalised Page