அமிர்த குணபோதினி
- அமிர்த என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: அமிர்த (பெயர் பட்டியல்)
To read the article in English: Amirtha Gunabodhini.
அமிர்த குணபோதினி (1926-1940) தமிழில் வெளி வந்த ஒரு பல்சுவை இதழ். எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு இதன் ஆசிரியராக இருந்தார்.
வரலாறு
1926-ல் தி.ராஜகோபால் முதலியார் தொடங்கிய ஆநந்தகுணபோதினி இதழில் ஆசிரியராக எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு பொறுப்பேற்றார். ஆனந்தபோதினி இதழுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட இதழ் அது. ஆனந்தபோதினி அன்று ஆரணி குப்புசாமி முதலியாரின் தொடர்கதைகளை வெளியிட்டு புகழ்பெற்றிருந்தது. ஆநந்தகுணபோதினியின் அமைப்பும் பெயரும் தன் பத்திரிகைபோல் இருப்பதாக எண்ணிய அதன் உரிமையாளர் நாகவேடு முனுசாமி முதலியார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவே ஆநந்த குணபோதினி தன் வடிவை மாற்றிக்கொண்டு அமிர்தகுணபோதினியாக பெயரையும் மாற்றிக்கொண்டது.
உள்ளடக்கம்
இதழில் சிறுவர் பக்கம், பெண்கள் பக்கம், சென்ற மாதம், பத்திரிகாச்சாரம் என பல பகுதிகளை எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு எழுதினார். நமது கதாப்பிரசங்கி என்ற பெயரில் நகைச்சுவைக்கதைகள், நடைச்சித்திரங்கள் எழுதினார். அவ்விதழில் மாறல் கார்த்திகேய முதலியார், அரியூர் வ. பதுமநாப பிள்ளை என சிலர் தவிர எல்லா பக்கங்களும் அவரே எழுதியவை. ஜே.ஆர். ரங்கராஜுவின் நாவல்கள் அமிர்தகுணபோதினியில் வெளிவந்தன.மாறல் கார்த்திகேய முதலியார், அரியூர் வ. பதும நாபப்பிள்ளை உள்ளிட்ட சிலர் மட்டுமே இவ்விதழில் எழுதியுள்ளனர். மற்றவை அனைத்தும் நாயுடுவே எழுதினார். பாக்கியரதி, பேபே செட்டியார், நாடகலாபம், சனிக்கிழமை விரதம், தங்கையின் மறு கல்யாணம், அத்தையின் பேராசை, புது மனிதனின் புதுமைகள், சாமுண்டியின் பிற்கால வாழ்வு, தொந்தி சுப்பு, வினோத கடிதங்கள், இயந்திர தெய்வம் (சிறுகதை) போன்ற நாயுடுவின் சிறுகதைகள் இவ்விதழில் வெளிவந்தன. "சென்று போன நாட்கள்" என்ற பெயரில் நடராஜ ஐயர், வேணுகோபாலசாமி நாயுடு, வீரராகவாச்சாரியார், கோவிந்தசாமிப்பிள்ளை, சுப்பிரமணிய பாரதி உள்பட பல ஆசிரியர்களைப்பற்றிய விரிவான தொடர் கட்டுரைகளை எழுதினார். இதைத் தொகுத்து ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.
"நமது கடை" என்ற தலைப்பில் நாயுடு பாரதியின் "தராசு" கட்டுரைகளைப் போன்றே சுவாரசியமாக் இவ்விதழில் எழுதியுள்ளார். "விகடப் பிராதபன்" என்ற தலைப்பில் கேலியும் கிண்டலுமாக எழுதப்பட்ட கட்டுரைகள் புகழ்பெற்றவை. இதில் "பரமசிவம் படியளக்கிற கொள்ளை", "எதிலே குறைச்சல் என்னத்திலே தாழ்த்தி", "ரயில்வே பிரயாண தமாஷ்" போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தகுந்தவை.
முடிவு
1934-ம் ஆண்டு அமிர்தகுணபோதினி மதுரை இ.மா.கோபால கிருஷ்ண கோனுக்கு விற்கப்பட்டபோது அவருக்கும் எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடுவுக்கும் முரண்பாடு உருவாகியது. எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு இதழில் இருந்து விலகினார். அதன்பின் ஜே.ஆர். ரங்கராஜு நாவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அமிர்தகுணபோதினி அச்சகத்திலிருந்து நூல்களும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. 1940-ல் இதழ் நின்றுபோனது.
வரலாற்று இடம்
ரா.அ. பத்மநாபன் கூறும்போது "ஆநந்த குணபோதினி மாத இதழ் ஆனந்தபோதினியை விட ஜனரஞ்சகமாக இருந்தது. துண்டு, துணுக்குகல், அனுபவ ரத்தினங்கள், நகைச்சுவை கலந்த சம்பவக் குறிப்புகள் முதலியவை பத்திரிக்கையில் இடம் பெற்றன. ஆசிரியர் ராமானுஜலு நாயுடு அனுபவம் மிக்க பழம் பத்திரிக்கையாளர். அது மட்டுமல்ல; விஷய ஞானம் கொண்ட நாவலாசிரியர்; தராதரம் தெரிந்த எழுத்தாளர்; கவி பாரதியாரின் நண்பர்" என்கிறார்.
உசாத்துணை
- அதிரூப அமராவதி டிராமா அமிர்தகுணபோதினி அச்சகம்
- குவலயமெங்கும் கொடிபெற்ற கோவலன் டிராமா அமிர்தகுணபோதினி அச்சகம்
- நவின நவரத்தின ஒப்பாரி என்னும் காம சரிதைக் கக்ஷிஅமிர்தகுணபோதினி அச்சகம்
- ஸ்ரீமத் ராமாயண சரித்திரக்கும்மி அமிர்தகுணபோதினி அச்சகம்
- கண்ணனூர் பத்மாஸனி அம்மாளால் இயற்றியஸ்ரீமத் இராமயண சரித்திரக் கும்மிஅமிர்தகுணபோதினி அச்சகம்
- "விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)": தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
- தமிழ் இதழியல் வரலாறு இணையநூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Jun-2022, 07:32:57 IST