under review

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

From Tamil Wiki

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். அரசியல் செயல்பாடுகளை பொது மக்களுக்கு பறையறைந்து அறிவிப்போர் பண்டைக்காலத்தில் 'செய்தி வள்ளுவர்' என வழங்க பெற்றனர். அத்தொழில் செய்த பெருஞ்சாத்தன் என்பதால் செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் என குறிப்பிடப் பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் பாடிய பாடல் குறுந்தொகையில் 228-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமணத்திற்கு முன் தலைவனின் பிரிவை எப்படி பொறுத்து கொண்டாய் என்ற தோழியின் கேள்விக்கு தலைவி பதில் உரைப்பதாக நெய்தல் திணையில் அமைந்துள்ள பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கடற்கரைs சோலையில் தாழை மடல்கள் மொட்டு அரும்பி மலர் மலராக மடலவிழும். அந்த இடங்களில் நாரைகள் சிறகு விரித்து பறந்து செல்லும். நாரையின் சிறகுகள் தாழையின் மடல்களுக்கு உவமை காட்டப்பட்டுள்ளது.
  • கடற்கரை சிற்றூரில் வாழும் மகளிர் தமது மனதிற்கினிய ஆடவர் வெகுதொலைவில் இருந்தாலும் தம்முடனே இருப்பது போல நினைத்து பிரிவுத் துயரைப் பொறுத்துக் கொள்வர்.

பாடல் நடை

குறுந்தொகை - 228

  • திணை: நெய்தல்
  • கூற்று: 'கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்'என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Aug-2025, 21:09:30 IST