under review

சு.யுவராஜன்

From Tamil Wiki
சு.யுவராஜன்

சு.யுவராஜன் (பிறப்பு: நவம்பர் 3, 1978 ) மலேசிய எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் எழுத வந்த மலேசியத் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

பிறப்பு, கல்வி

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணியில் நவம்பர் 3, 1978 அன்று சுப்ரமணியம் வையாபுரி- கண்ணகி இணையருக்குப் பிறந்தார்.ஐந்து ஆண் குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இவரே மூத்தவர். தன்னுடைய தொடக்கக்கல்வியைச் சரஸ்வதி தமிழ்ப்பள்ளியில் 1990-ம் ஆண்டு நிறைவு செய்தார். அதன் பின், படிவம் 1 முதல் 3 வரையிலான இடைநிலைக்கல்வியைப் பண்டார் சுங்கைபட்டாணி இடைநிலைப்பள்ளியில் கற்றார். தொடர்ந்து, படிவம் 4 முதல் 6 வரையில் இப்ராஹிம் இடைநிலைப்பள்ளியில் பயின்றார். 2001-ம் ஆண்டு தொடங்கி 2005-ம் ஆண்டு வரை மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இளங்கலைக் கல்வி மேற்கொண்டார்.

தனிவாழ்க்கை

நன்றி களம் இதழ்

சிறுவயதிலே ஸ்கார்புரோ தோட்டத்திலிருந்த தாய்வழி தாத்தாவான திரு பெரியண்ணன் மாரியப்பன், பாட்டி திருமதி முனியம்மாள் செல்லப்பிள்ளை ஆகியோரின் வளர்ப்பில் வளர்ந்தார். 13-ம் வயதில் தோட்டம் மூடப்பட்டதால் சுங்கை பட்டாணி நகரில் மலிவு விலை வீடொன்றில் குடும்பத்தாருடன் குடியேறினார். 2006-ல் தொடங்கி பல தனியார் நிறுவனங்களில் பொறியியலாளராகப் பணியாற்றியிருக்கிறார். 2015-ம் ஆண்டு தொடங்கி 2018-ம் ஆண்டு வரையில் தமிழ் அறவாரியத்தின் திட்டக்குழுத் தலைவராகப் பணியாற்றினார்.

2008-ம் ஆண்டு மலேசிய எழுத்தாளர் தோழியை (இயற்பெயர் லட்சுமி) மணம் புரிந்தார். இவர்களுக்கு இளநேயன், இளனருண் என்ற இரு மகன்கள். 2018-ம் ஆண்டு தொடங்கி கெடா மாநிலத்தில் பொறியியலாளராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

வாசிப்புப் பழக்கம் கொண்ட தாத்தா, மாமாமார்கள் இடையே வாழ்ந்ததால் சிறுவயதிலே இயல்பாக வாசிப்புப் பழக்கம் உடையவராக வளர்ந்தார். இளவயதிலே சித்பவானந்தரின் பொழிப்புரையுடன் வெளிவந்த மகாபாரதம், மணிமேகலைப் பிரசுரத்தில் வந்த கம்பராமாயணப் பாடல்கள், சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள் ஆகியவற்றை வாசித்தார். அத்துடன் அம்புலி மாமா போன்ற சிறுவர் இதழ்களையும் வாசித்தார். ஆறாம் படிவத்துக்குப் பிறகு பல்கலைக்கழக நுழைவுக்குக் காத்திருந்த ஈராண்டு காலக்கட்டத்தில் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள் அடங்கிய தொகுப்புகளின் வழி நவீன இலக்கிய வாசிப்புக்குள் நுழைந்தார். பின்னர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போது அங்கிருந்த தமிழ்ப்பிரிவு நூலகத்தில் தீவிர இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்.

மலாயாப் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் பேரவைக் கதைகள் சிறுகதைப் போட்டியின் பொதுப்பிரிவிலும் மாணவர் பிரிவிலும் அவரது கதைகள் தேர்வு பெற்றன. தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் ஏற்பாடு செய்த போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் பெற்றார். அதன் பின்னர், காதல், வல்லினம் ஆகிய இதழ்களில் கதை, கட்டுரைகள் எழுதிப் பங்களித்திருக்கிறார். அதன் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார்.

இலக்கியப் பங்களிப்பு

'அல்ட்ராமேன்' எனும் தலைப்பில் இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. 'காதல்' இதழில் இவர் எழுதிய 'கதை வெளியில் கரைந்த காலம்' எனும் தொடர் நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் உலக சினிமாக்களையும் இணைத்த அறிமுகத்தைத் தந்தது. நவீன இலக்கியத்தை எளிய வடிவில் வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க 2010-ல் தொடங்கப்பட்ட மாதம் இருமுறை அச்சிதழான 'முகவரி’ ல் ஆசிரியராகப் பங்காற்றினார். மலேசிய இந்திய அறிவியல் அறிவார்ந்த இயக்கத்தின் (MISI) ஆதரவுடன் 2010-ம் ஆண்டு 'தும்பி' எனும் சிறுவர் அறிவியல் இதழை ஓராண்டுக்கு நடத்தினார். அதன் பின்னர் டிரா மலேசியா அமைப்பின் உதவியுடன் 'அறிவன்’ எனும் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வெளிவந்த சிறுவர் அறிவியல் இதழை 2012-லிருந்து 2015 வரையில் 28 இதழ்களுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 2015-ம் ஆண்டு 'தோழி' எனும் பதிப்பகத்தைத் தொடங்கி 2016-ம் ஆண்டு 'தனியன்' எனும் நூலில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் வேதாந்த உரைகளைத் தொகுத்து வெளியிட்டார். 2017-ம் ஆண்டு எழுத்தாளர் கே.பாலமுருகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான 'இறந்தகாலத்தின் ஓசைகள்' நூலுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

இலக்கிய இடம்

2000-ம் ஆண்டுக்குப் பிறகு எழுதவந்த மலேசிய எழுத்தாளர்களில், யுவராஜன் சிறுவர்களின் அகவுலகை நெருக்கமாகத் தன்னுடைய கதைகளில் காட்டியிருக்கிறார் எனக் கருதப்படுகிறது. நகர்ப்புற வாழ்வுடன் காலூன்ற முடியாத தோட்டப்புற வாழ்வின் மனப்பதிவுகளைக் கொண்டவை யுவராஜனின் சிறுகதைகள் என எழுத்தாளர் அ.பாண்டியன் குறிப்பிடுகிறார். யுவராஜனின் கதைகளில் உறவுகளுக்கிடையிலான தவிப்பு மனநிலை இயல்பாக வெளிப்படுகிறது என எழுத்தாளர் சண்முகசிவா குறிப்பிடுகிறார்.

பரிசுகள்/ விருதுகள்

  • மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் மாணவர் பிரிவில் முதற்பரிசு – 2002
  • மலாயாப் பல்கலைக்கழக பேரவைக் கதைகள் மாணவர் பிரிவில் இரண்டாம் பரிசு - 2003
  • மலேசியத் தேசியப்பல்கலைக்கழகச் சிறுகதைப் போட்டி பொதுப்பிரிவில் முதற்பரிசு - 2003
  • மலேசியத் தேசியப்பல்கலைக்கழகச் சிறுகதைப் போட்டி பொதுப்பிரிவில் முதற்பரிசு - 2004
  • சிலாங்கூர் மாநில அரசு - சிலாங்கூர் இளம் திறன்மிகு எழுத்தாளர் - 2010

படைப்புகள்

தொகுப்பாசிரியர்
  • எழுத்தாளர் பாலமுருகனின் இறந்த காலத்தின் ஓசைகள் சிறுகதைத் தொகுப்பு- 2017

உசாத்துணை


✅Finalised Page