சுப. அண்ணாமலை
சுப. அண்ணாமலை (டாக்டர் சுப. அண்ணாமலை; பேராசிரியர் சுப. அண்ணாமலை; சுப்பிரமணியன் அண்ணாமலை) (பிறப்பு: அக்டோபர் 10, 1929) தமிழறிஞர், ஆய்வாளர், எழுத்தாளர். கல்லூரிப் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை, ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். திருமந்திரம் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்தவர்.
பிறப்பு, கல்வி
சுப்பிரமணியன் அண்ணாமலை என்னும் சுப அண்ணாமலை, அக்டோபர் 10, 1929 அன்று, தேவகோட்டையில், சுப்பிரமணியன் செட்டியார் - சீதை ஆச்சி இணையருக்குப் பிறந்தார். தேவக்கோட்டையில் பள்ளிக் கல்வி கற்றார். சென்னை. பச்சையப்பன் கல்லூரியில் 1947 முதல் 1952 வரை பி.ஓ.எல். (ஹானர்ஸ்) பயின்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அதற்காக சர். ஜான் லாசரஸ் தங்கப்பதக்கம் பெற்றார். 'பழந்தமிழகத்துக் கலைகளும் அறிவியலும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட். பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் வள்ளலாரின் நுல்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
சுப அண்ணாமலை 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீனாட்சி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்குச் சீராளன் என்ற மகனும் சீதா, அங்கயற்கண்ணி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
கல்விப் பணிகள்
சுப. அண்ணாமலை, கோவை பூசா.கோ கலைக்கல்லூரியில் ஓராண்டு விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1954 முதல் 1968 வரை மதுரை தியாகராசர் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1968 முதல் 1988 வரை அதே கல்லூரியில் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். 1977 முதல் 1988 வரை மதுரை தியாகராசர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சுப. அண்ணாமலை சமயம், இசை, தத்துவம். மொழியியல், கல்வெட்டு ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஆர்வம் கொண்டவர். அவை குறித்து ஆராய்ந்து 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். நூல்கள் பலவற்றை எழுதினார். ஆலய மலர்கள் பலவற்றின் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார். 'குருத்து' என்னும் புனைபெயரில், நகரத்தார் குரல் இதழில் நகரத்தார் சமூக மரபுகள், பண்பாட்டு வளர்ச்சி, சடங்குகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து 'வாழையடி வாழை' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதினார். 'மணிவண்ணன் மடல்' என்ற தலைப்பில் நகரத்தார் குலச் சமூகச் சீர்திருத்தம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினார்.
'வள்ளலார் வாழ்வும் வாக்கும்' (Life and Teachings of St. Ramalingar) என்னும் சுப. அண்ணாமலையின் ஆங்கில ஆய்வு நூலை பாரதீய வித்யாபவன் வெளியிட்டது.
சுப. அண்ணாமலை, 1968-ல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நடத்திய தமிழ் விழாக்களில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர் பட்டம் பெற ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டார்.
திருமந்திர ஆய்வு
சுப. அண்ணாமலை, பணி ஓய்வுக்குப் பின் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் திருமந்திரம் குறித்து மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார். ஏற்கனவே அச்சில் வெளிவந்த பல திருமந்திரப் பதிப்புகளையும் பழமையான ஏட்டுச் சுவடிகளையும் ஒப்பாய்வு செய்து, பாடல்களை தந்திரங்கள் அடிப்படையில் பிரிக்காமல், எண்ணிக்கை அடிப்படையில் பிரித்தார். அவற்றில் இடைச் செருகல்கள் என ஒப்பாய்வு செய்து அறிந்தனவற்றை நீக்கி, 2,558 பாடல்களே திருமூலர் எழுதவை என்பதைக் காட்டி,அதற்கான உரை விளக்கங்களை எழுதி வெளியிட்டார்.
கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப சுவாமிகள் நிறுவிய" Indian Institute Of Indology " மூலம் திருமந்திர உரைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
சொற்பொழிவு
சுப. அண்ணாமலை மதுரை திருவள்ளுவர் கழகம், பன்னிரு திருமுறை மன்றம், சைவ சித்தாந்த சபை ஆகிய புகழ்பெற்ற அமைப்புகளில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார்.மதுரை கம்பன் கழகத்தில் இரண்டு ஆண்டுகள் ராமாயண வகுப்புகள் நடத்தினார் .
பொறுப்புகள்
- மதுரை நகரத்தார் சங்கச் செயலர். (செயலாளராக 16 ஆண்டுகள். துணைத்தலைவராக 6 ஆண்டுகள்)
- மதுரை இராமலிங்கர் பணிமன்றத் துணைத் தலைவர்.
- மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர்.
- தேவகோட்டை சேக்கிழார் திருநாட்கழக விழா அமைப்பாளர்களுள் ஒருவர்
விருதுகள்
- சுப. அண்ணாமலை, 1981-ல், தமிழக அரசின் 'சிறந்த கல்லூரி முதல்வர்' விருதைப் பெற்றார்.
- ராஜாஜர் முத்தையா செட்டியார் பிறந்தநாள் நினைவு தமிழறிஞர் விருது 1989
- திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கம் வழங்கிய புலவர் மாமணி விருது 1989
- மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை வழங்கிய செம்மல் விருது 1999
- மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய தமிழ்ப் பேரவை செம்மல் விருது 2002
- தேவகோட்டை ஞான தான சபை வழங்கிய கூடல் இலங்கு குருமணி விருது 2004
- சென்னை சேக்கிழார் ஆராய்ச்சி மையம்வழங்கிய சேக்கிழார் விருது
- குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் வழங்கிய தமிழாகாரர் விருது
மணிவிழா
13 அக்டோபர் 1989 அன்று பிள்ளையார்பட்டியில் சுப அண்ணாமலையின் மணிவிழா நடைபெற்றது.
ஆவணம்
சுப. அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை மு. பழனி இராகுலதாசன் எழுதினார். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்ய அகாதெமி நிறுவனம் அந்நூலை வெளியிட்டது.
மதிப்பீடு
சுப. அண்ணாமலை, திருமந்திரம் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக மதிக்கப்படுகிறார். பல்வேறு பாட வேறுபாடுகளை ஆராய்ந்து உரையெழுதி வெளிவந்துள்ள சுப. அண்ணாமலையின் திருமந்திரம் செம்பதிப்பு நூல், ஆய்வாளர்களால் சிறந்த ஆய்வு நூலாகவும், சுப. அண்ணாமலையின் வாழ்நாள் சாதனையாகவும் மதிப்பிடப்படுகிறது.
நூல்கள்
கட்டுரை/ஆய்வு நூல்கள்
- உருவும் உணர்வும்
- பண்சுமந்த பாடல்
- கல்லும் கனியாகும்
- மக்களை எட்டிய மறைத்தமிழ்
- திருக்குறள் சிந்தனை (நான்கு பாகங்கள்)
- பன்னிரண்டாம் திருமுறை
- திருமந்திரம் - மூல பாட ஆய்வுப் பதிப்பு (மூன்று பாகங்கள்) (பதிப்பாசிரியர்)
- திருமந்திரம் மாணவர் செம்பதிப்பு பகுதி - 1 மற்றும் 2. (பதிப்பாசிரியர்)
- சங்க இலக்கியம் - (மூலமும் உரையும்) 11 தொகுதிகள் (பதிப்பாசிரியர்: தமிழண்ணலுடன் இணைந்து எழுதியது. உரை: முனைவர் கதிர் மகாதேவன்)
ஆங்கில நூல்
- Life and Teachings of St. Ramalingar
உசாத்துணை
- இந்திய இலக்கியச் சிற்பிகள், சுப. அண்ணாமலை, மு. பழனி இராகுலதாசன், சாகித்ய அகாதமி வெளியீடு
- சுப அண்ணாமலை நூல்கள்: காமன்ஃபோல்க்ஸ் தளம்
- நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Jul-2024, 08:59:39 IST