under review

நகரத்தார் குரல் (இதழ்)

From Tamil Wiki
நகரத்தார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நகரத்தார் (பெயர் பட்டியல்)
நகரத்தார்குரல்

நகரத்தார் குரல் இதழ், 1982 முதல் வெளிவந்த நகரத்தார் சமூகம் சார்ந்த மாத இதழ். வ.நா. சிதம்பரம் செட்டியார் இவ்விதழின் ஆசிரியர். நகரத்தார் சமூகம் குறித்த செய்திகளை இவ்விதழ் வெளியிட்டது.

பிரசுரம், வெளியீடு

நகரத்தார் குரல் மதுரையிலிருந்து வெளிவந்தது. பிப்ரவரி 1982 முதல் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் ராங்கியத்தைச் சேர்ந்த வ.நா. சிதம்பரம் செட்டியார். பனையப்பட்டியைச் சேர்ந்த சுப.அ. நடராசன் நகரத்தார் குரல் இதழை வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகன் நடராஜ் அண்ணாமலை வெளியீட்டாளராகச் செயல்பட்டார். கண்டரமாணிக்கம் லெ.அழகுசுந்தரம், நகரத்தார் குரல் இதழின் கௌரவ ஆசிரியராகத் தன் வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டார். ஒக்கூரைச் சேர்ந்த லெ. சுந்தரம் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தொடக்கத்தில் நகரத்தார் குரல் தனி இதழ் விலை ரூ.1.25; ஆண்டுச் சந்தா ரூ 15 என இருந்தது. பின்னர் 1992-லிருந்து தனி இதழ் விலை குறிக்கப்பெறாமல், ஆண்டுச் சந்தா ரூ 30, டெபாசிட் சந்தா ரூ 300 என்ற அறிவிப்புடன் வெளிவந்தது. பிற்காலத்தில் ஆண்டுச் சந்தா ரூ 45 ஆக உயர்ந்தது. டெம்மி 1 x 8 அளவில், 40 பக்கங்களுடன் இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்

நகரத்தார் குரல் இதழின் முகப்புப் பக்கத்தில், "கன்னியர்கள் வாழ்வுபெற மாலை; காளையர்கள் வாழ்வுயர வேலை" என்ற வாசகம் இடம்பெற்றது. நகரத்தார் சமூகம் தொடர்பான இன்றியமையாத செய்திகள் அனைத்தும் இவ்விதழில் வெளியாகின. நகரத்தார் சமூகம் தொடர்பான செய்திகள், மணமகன், மணமகள் பற்றிய குறிப்புகள், தொழில் சார்ந்த செய்திகள், ஆலயம், விழாக்கள் பற்றிய செய்திகள் என பல்வேறு செய்திகளுக்கு முக்கியமளித்து நகரத்தார் குரல் வெளியிட்டது.

மதிப்பீடு

நகரத்தார் குல முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு வெளிவந்த தொன்மை இதழாக நகரத்தார் குரல் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
  • நகரத்தார் குரல் இணையநூலகம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Jun-2024, 04:41:16 IST