under review

சி. வடிவேலு

From Tamil Wiki
சி. வடிவேலு

சி. வடிவேலு [ஜூலை 29, 1949] மலேசிய எழுத்தாளர், கல்வியாளர். மலேசியாவில் மரபிலக்கியம் வளரப் பங்காற்றுபவர். தனித்தமிழ் பற்றாளரான இவர், ஜொகூர் தமிழ் இலக்கிய கழக தலைவர்.

கேளாங் பாத்தா தமிழ் பள்ளியில் தலைமயாசிரியாக சி. வடிவேலு

பிறப்பு, கல்வி

1975-1978 கோலாலம்பூர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் மாணவர்களும் விரிவுரையாளர்களும்
ஆசிரியர் பயிற்சி கல்லூரி நண்பர்களுடன் சி. வடிவேலு

சி. வடிவேலு ஜொகூர் மாநிலத்தில் உள்ள சிகாமாட் வட்டாரத்தில் ஜூலை 21, 1949-ல் பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர் சின்னக்கன்னு. இவரது தந்தையாருக்கு இரு மனைவிகள். சி. வடிவேலுவின் பெரியம்மாவின் பெயர் சாலம்மா. அவர் மரணத்திற்குப் பின், சின்னக்கன்னு, சி. வடிவேலுவின் தாயாரான பாக்கியத்தை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். சி. வடிவேலு மூத்த மகன். சி. வடிவேலு லாபிஸ் பாரு பள்ளியில் ஆரம்ப கல்வியைப் பயிலும்போது இவருக்கு தனியாக செல்லமணி வாத்தியார் தமிழ் பாடமெடுத்தார். அரசாங்க ஆங்கில பள்ளியில் [Government English School] படிவம் மூன்று வரையிலும் மெர்டெகா ஆங்கில இடைநிலை [Merdeka English High School] பள்ளியில் படிவம் நான்கும் ஐந்தும் பயின்றார். 1979-ல் ஆசிரியர் பயிற்சி கல்லூரியிலிருந்து பட்டம் பெற்றார். சி. வடிவேலு தமிழியல் பட்டக் கல்வியில் இலக்கியம் படித்து முதுகலை பட்டம் பெற்றார்.

சி. வடிவேலு புலவர் குழந்தையின் யாப்பதிகாரம் நூலை வாசித்து மரபிலக்கியம் கற்றார். இவரது தமிழ் ஆசான்கள் இலங்கை சே. பெருமைநார் மற்றும் சிகாமாட் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் நாராயணன் ஆவர். சி. வடிவேலுவின் எழுத்துலக ஆசிரியர் கு. கிருஷ்ணன்..

குடும்ப வாழ்கை, தொழில்

சி. வடிவேலு செப்டம்பர் 8, 1978-ல் தன்னோடு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்ற நாகரத்தினத்தை திருமணம் செய்தார். இந்தத் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள்.

சி. வடிவேலு-நாகரத்தினம் தம்பதியர் திருமண நாள்

சி. வடிவேலு ஆகஸ்ட் 6, 1972-ல் தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கி, ஜூலை 28, 2005-ல் பணி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்கை

சி. வடிவேலு ஆரம்பத்தில் தமிழ் நேசன் 'உங்கள் கடிதம்' அங்கத்தில் கேள்வி பதில் துணுக்குகளும், வானொலியில் பாடல் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருந்தார். சி. வடிவேலுவின் முதல் சிறுகதை ‘ஆசை’ தமிழ்நேசனில் 1970-ல் பிரசூரமானது. 1987-ல் சி. வடிவேலு எழுதிய ‘இம்மண்ணுக்கும் மணமுண்டு’ குறுநாவலை தமிழ்நேசன் பத்திரிகை போட்டிக்கு எழுதி 1999-ல் நூலாக வெளியிட்டார். 2000-த்தில் சி. வடிவேலு தான் எழுதிய சிறுகதைகளை இரண்டு தொகுப்பு நூலாக வெளீயிட்டுள்ளார்.

சுல்தான் இஃப்ராஹிம் விருது

சி. வடிவேலு எழுதிய ‘குப்பைகள்’, ‘அஃறிணை வாரிசு’, ‘தாய்மண்’, ‘இப்படியும் மனிதர்கள்’, ‘இந்தச் செடியும் பூக்கும்’, ‘கம்பத்து மனிதர்கள்’, ‘தமிழ்ச்சாமியும் சீனச்சாமியும்’ சிறுகதைகள் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க சிறுகதை போட்டியில் பரிசு பெற்றுள்ளன. சி. வடிவேலு எழுதிய நான்கு சிறுகதைகள் தமிழியல் பட்டக்கல்வி பாடத் திட்டத்தில் உள்ளன.

சி. வடிவேலு மரபுகவிதைகள் எழுதியுள்ளார். தமிழகத்தில் நிகழ்ந்த பாரதியார் நூற்றாண்டு விழாவில் தனது மரபுக்கவிதைகளை அரங்கேற்றியுள்ளார். சி. வடிவேலு 2015-ல் கோலாலம்பூரில் நடைபெற்ற ஏழாம் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ‘தமிழ்த்திரையுலகமும் இலக்கியமும்’ தலைப்பில் கட்டுரை படைத்தார். 2014-ல் மியன்மாரில் நடைபெற்ற தமிழ் இலக்கிய உறவுப்பால நிகழ்ச்சியில் ‘மலேசிய இலக்கியம்’ தலைப்பில் கட்டுரை படைத்துள்ளார்.

பொது வாழ்க்கை

மலேசிய தமிழ் இலக்கிய கழகமும் தேவநேயப் பாவாணர் அறக்கட்டளை சேர்ந்து நடத்தும் தமிழியல் பாடக் கல்விக்கு சி. வடிவேலு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜொகூர் தமிழ் இலக்கிய கழகத்தில் தலைவராக இருக்கும் சி. வடிவேலு பல்வேறு மரபிலக்கிய முன்னெடுப்புகளை செய்து வருகிறார். புலவர் வா.மு. சேதுராமன், பெரு திருவள்ளுவன், மா. இலக்குவனார், மா.பொ.சி சிவஞானம் எனும் அயல் இலக்கிய ஆளுமைகளை மலேசியா வரவழைத்து இலக்கிய அரங்கங்களை நடத்தி வருகிறார்.

தனி ஈடுபாடு

கலைஞர் ரெ. சண்முகத்துடன் சி. வடிவேலு

சி. வடிவேலுவுக்குப் பாடுவதில் ஆர்வம் உண்டு. நாடு தழுவிய நிலையில் நடந்த பாடல் போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்.

சி. வடிவேலு ஒரு இசை நிகழ்ச்சியில்

அமைப்புச்செயல்பாடுகள்

ஜொகூர் தமிழ் இலக்கிய கழகம் வழி சி. வடிவேலு மொழி இலக்கிய வளர்ச்சிக்கான தொடர் பணிகளைச் செய்து வருகிறார்.

விருது, பரிசு

  • இந்த மண்ணுக்கும் மணம் உண்டு ( தமிழ்நேசன் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு) 1997
  • சுல்தான் இஃப்ராஹிம் விருது - ஜொகூர் மாநில அரசு - 2003
  • தனிநாயக அடிகளார் விருது - மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் - 2011
  • தங்கமகன் விருது - மலேசியத் தமிழ் மணி மன்றம் - 2012
  • திருக்குறள் செம்மல் - மலேசிய தமிழ் இலக்கிய கழகம் - 2013
  • அஃறினை வாரிசு - (டான்ஶ்ரீ மாணிக்கவாசகம் புத்தக பரிசளிப்பு திட்டத்தில் முதல் பரிசு) மலேசிய எழுத்தாளர் சங்கம், 2019
  • நல்லார்கினியன் விருது - உப்சி பல்கலைகழகம், 2020

இலக்கிய இடம்

சி.வடிவேலு மலேசியாவில் கல்வித்துறையில் தமிழிலக்கியம் பயிலப்படுதற்கு பங்களிப்பாற்றியவர். மலேசியாவில் மரபிலக்கியத்தை பரப்புபவர். பொதுவாசகர்களுக்காக சமூகக்கருத்துக்களைச் சொல்லும் படைப்புகளையும், மலேசியவாழ்க்கையின் சித்திரங்களை வெளிப்படுத்தும் படைப்புகளையும் எழுதியவர்.

நூல்கள்

குறுநாவல்
  • இந்த மண்னுக்கும் மணம் உண்டு – 1997
சிறுகதை
  • சி. வடிவேலு சிறுகதைகள் – 2000
  • அஃறினை வாரிசு – 2019

உசாத்துணை

மு. கருணாநிதியுடன் சி. வடிவேலு

[[]] ‎


✅Finalised Page