under review

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம்

From Tamil Wiki
சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் என்னும் சி.என். லக்ஷ்மிகாந்தம் அகால மரண சிந்து

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் (சி.என். லக்ஷ்மிகாந்தம் அகால மரண சிந்து) (1944), கொலைச்சிந்து நூல்களுள் ஒன்று. பத்திரிகையாளராக விளங்கிய லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டது பற்றிக் கூறும் நூல். சென்னையில் நிகழ்ந்தக் கொலைச் சம்பவத்தைத் தமிழர்கள் அனைவரும் அறியும் பொருட்டு, 1944-ல், இ. பார்த்தசாரதி நாயுடு, சிந்துக் கவி நூலாக இயற்றினார்.

பிரசுரம், வெளியீடு

லட்சுமிகாந்தனின் கொலை பற்றிக் கூறும், சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் என்னும் சி.என். லக்ஷ்மிகாந்தம் அகால மரணச் சிந்து நூல், இ. பார்த்தசாரதி நாயுடு என்னும் இட்டா. பார்த்தசாரதி நாயுடு அவர்களால் இயற்றப்பட்டது. 1944-ல், வி.ஆர். பெருமாள் நாயுடு அவர்களால் பிரசுரிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் நூல், சிந்துக் கவி நூலாக அமைந்துள்ளது. சிந்துப் பாடல்கள், கண்ணிகள், கும்மி போன்ற பா வடிவங்களைக் கொண்டு இச்சிறு நூல் இயற்றப்பட்டுள்ளது.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

'சினிமா தூது’ என்ற பத்திரிகையை நடத்திவந்த லட்சுமிகாந்தன், அதில் திரைப்படத் துறை சார்ந்தவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் அந்தரங்கமான செய்திகளை, அவதூறுகளை எழுதி வந்தான். அந்த இதழை அரசின் அனுமதி பெறாமல் நடத்திவந்தான். அதனால் சினிமா தூது இதழ் அரசால் தடை செய்யப்பட்டது. ஐநூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. லக்ஷ்மிகாந்தன், ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த 'இந்துநேசன்’ என்ற இதழை வாங்கி நடத்தினான். வழமைபோல் தனது பாணி அவதூறுச் செய்திகளை அவ்விதழில் எழுதினான். அதனால் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு எதிர்ப்புகளை, வழக்குகளைச் சந்தித்தான். பார்க்க: லட்சுமிகாந்தன் கொலை வழக்கு

சென்னை வேப்பேரியில், ஒரு நாள், ரிக்‌ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தன் கத்தியால் குத்தப்பட்டான். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான். அந்தக் கதையைக் கூறுகிறது, சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் நூல்.

  • லட்சுமிகாந்தன் திருச்சியைச் சேர்ந்தவன்;
  • இண்டர்மீடியட் படித்தவன்;
  • டெய்லி எக்ஸ்பிரஸை வாங்க முயன்றது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டான்;
  • அதற்காக சிறைத் தண்டனை பெற்றான்.
  • மீண்டும் திருட்டுக் கையெழுத்திட்ட குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றான்.
  • காவல்துறையிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்து, அந்தமானுக்கு அனுப்பப்பட்டான்.
  • பத்தாண்டுகளுக்குப் பின் சென்னைக்கு வந்து சினிமா தூது என்னும் இதழைத் தொடங்கி நடத்தினான்.
  • இறுதியில் கொல்லப்பட்டான்.

- போன்ற செய்திகளை சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் நூல் மூலம் அறிய முடிகிறது.

பாடல் நடை

லட்சுமிகாந்தன் இளமைப்பருவம்

திருச்சினாபள்ளியதில் தீவிரமாய் தான்பிறந்து
உரைத்தகல்வியை இண்டர்மீடியேட்வரை படித்து
உணர்ந்துபுகழ்பெற்ற இந்த உறுதியைகேள் உற்று

சிலகாலம் தன்பெயரை சீமான்கள் தான் புகழ
உலகில் நற்பெயரைபெற்று உலவிவருங்காலமதில்
ஊர்பகையை கொண்டார் இந்த உலகமதில் மாண்டார்

லட்சுமிகாந்தன் பத்திரிகை ஆசிரியர் ஆனது

சினிமாதூது வென்ற ஒருசிறந்த வாரப்பத்திரிகை
கனமுடன் தான்முதலில் கருதியே விடுத்ததினால்
அநுமதியில்லாமல் பேபர் அறைந்ததினால் பூவில்

ஆயிரத்துளாயிரத்தி ஆண்டு நாற்பத்து நாலினிலே
நேயமுடன் பிப்ரவரி மாதந்தன்னில் சட்டமுடன்
நிறுத்திடவுஞ் சொன்னார் பயன் பொருந்த ஐந்நூறென்றார்

கஷ்டப்பட்டு அதன்பிறகு கல்வி அறிவா னுலகில்
இஷ்டமாய் இந்துநேசன் என்றதொரு பத்திரிகை
ஆசிரியரானார் அதன்பிறகு காலமானார்.

லட்சுமிகாந்தன் கொலை

புரசை நகர் தன்னில் ரிக்‌ஷாவில் வருகையில்
துருசாய் இருவர் வந்து கடவுளே வயிறு
சரிந்திடக் குத்தினானாம் கடவுளே

குத்தியவன் தன்னை உத்தமனும் பிடிக்க
மெத்தக் கஷ்டப்பட்டார் கடவுளே அவன்
எத்தாக ஓடி விட்டான் கடவுளே

மதிப்பீடு

சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் என்னும் சி.என். லக்ஷ்மிகாந்தம் அகால மரண சிந்து, கொலைச் சிந்து நூல்களுள் ஒன்று. கொலைச் சிந்து நூல்கள், கொலையுண்டவர்கள் பற்றிப் பலரும் அறியாத பல்வேறு அரிய செய்திகளை அறிய உதவுகின்றன. பேச்சு வழக்கு கலந்த இயல்பான சொற்களில் இந்நூல் அமைந்துள்ளது. தமிழின் கொலைச் சிந்து நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக சி.என். லக்ஷ்மிகாந்தம் மரண கீதம் நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை

  • ஸ்ரீமான் C N லக்ஷ்மிகாந்தம் மரண கீதம், இட்டா பார்த்தசாரதி நாயுடு, இட்டா பார்த்தசாரதி நாயுடு அண்ட் சன்ஸ், சென்னை, முதல் பதிப்பு, 1944.


✅Finalised Page