under review

சிவ. விவேகானந்தன்

From Tamil Wiki
சிவ. விவேகானந்தன்

சிவ. விவேகானந்தன்(பிறப்பு: ஏப்ரல் 17, 1960) பண்பாட்டு ஆய்வாளர், சுவடித்துறை வல்லுனர். பல கதைப்பாடல்களை சுவடிகளில் இருந்து பதிப்பித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட சமணத் தடயங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

பிறப்பு, கல்வி

சிவ. விவேகானந்தன் கன்னியாகுமரி மாவட்டம் தெற்குச் சூரன்குடியில் சிவலிங்கம். பூவம்மாள் இணையருக்கு ஏப்ரல் 17, 1960-ல் பிறந்தார். பள்ளிப் படிப்பை கன்னியாகுமரி மாவட்டம் சூரன்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டத்தை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியிலும் முதுகலைப் பட்டத்தை நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியிலும் பெற்றார். இளமுனைவர்(M Phil) பட்டத்தை திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையிலும் முனைவர் பட்டத்தை (PhD) கேரளப் பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் துறையிலும் பெற்றார்.

தனிவாழ்க்கை

சிவ. விவேகானந்தன் ஜூன் 24, 1993-ல் மீராவை திருமணம் செய்துக் கொண்டார். மீரா மத்திய அரசு தொலைத்தொடர்புத் துறையில்(பி.எஸ்.என்.எல்) உதவிப் பொது மேலாளராக பணியாற்றுகிறார். சிவ. விவேகானந்தன் மீரா தம்பதியருக்கு இரு குழந்தைகள். மகன் அபராஜித் சக்தி விவேகானந்தன் மகள் ஷ்ருதி விவேகானந்தன். இருவரும் பொறியாளர்கள்.

குமரி நாட்டில் சமணம்

சிவ. விவேகானந்தன் புதுதில்லியில் தில்லி பல்கலைக்கழகம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியராக அக்டோபர் 21, 1991-ல் பணியில் சேர்ந்து இணைப்பேராசிரியர் மற்றும் பேராசிரியராக உயர்ந்தார். உடல்நலக்குறைவு காரணமாக அக்டோபர் 31, 2022-ல் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது குடும்பத்துடன் சென்னை தாம்பரத்தில் வசித்து வருகிறார்.

ஆய்வுப்பணிகள்

சிவ. விவேகானந்தன் தனது முனைவர் பட்ட ஆய்வு தொடங்கி சுவடிகளிலிருந்து கதைப்பாடல்களை பதிப்பிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். தனது ஆசிரியரான செந்தீ நடராசன் உதவியுடன் குமரி மாவட்ட சமணம் குறித்த கள ஆய்வில் ஈடுபட்டார்.

கதைப்பாடல் ஆராய்ச்சி

சிவ. விவேகானந்தன் 1987-ல் வெளியிட்ட ’பிரம்மசக்தியம்மன் கதை’ அவரது முதல் ஆய்வு நூல். பிரம்மசக்தியம்மன் கதை வில்லுப்பாட்டு வடிவ கதைப்பாடல். பிரம்மசக்தியம்மன் பிறவிகள், செங்கிடாக்காறன் கதை, குருகேத்திரன் கதை, பார்பதியம்மன் கதை, வலைவீசு காவியம், நீலன் சரிதம், அயோத்தி இராமாயணம், தம்பிமார் வரலாறு கதைப்பாடல்களைப் பதிப்பித்துள்ளார். இந்நூல்களில் கதைப்பாடல்களைப் பதிப்பித்ததுடன் சுவடி ஆராய்ச்சி, வில்லுபாட்டு ஆய்வு, பிற கதைப்பாடல்களுடன் ஒப்பீட்டாய்வு, மூலப்பாட ஆய்வு போன்ற ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து எண்ணூறுகளில் பாகவதம், மகாபாரதம் இரண்டையும் இணைத்து 'பாகவதப் பாரதம்' என்னும் காப்பியம் எழுதப்பட்டுள்ளது. பாகவதப் பாரதம் குறித்த ஆய்வில் நெடுநாள் ஈடுபட்டு உரைநடை காப்பிய வடிவமாகவும் ஆராய்ச்சிப் பதிப்பாகவும் இரு நூல்களை வெளியிட்டார்.

கள ஆய்வுகள்

சிவ. விவேகானந்தன் 2007 முதல் 2009 வரையுள்ள காலக் கட்டத்தில் குமரி நாட்டில் சமணம் குறித்த கள ஆய்வில் செந்தீ நடராசனுடன் இணைந்து ஈடுபட்டார். இக்கள ஆய்வின் ஒரு பகுதியாக நாகராஜா கோவில் குறித்து ஒரு முழுமையான ஆய்வு நூலை வெளியிட்டார். குமரி மாவட்ட சமணம் சார்ந்து வரலாற்றாய்வு, சமணப்பள்ளிகளின் ஆய்வு, தொல்லியல் ஆய்வு சார்ந்து நூல்களை வெளியிட்டுள்ளார். 2010 முதல் 2012 வரை குமரி நாட்டுக் கோட்டைகள் குறித்த ஆய்வைத் தனது மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார்.

'குமரிநாட்டுக் கோட்டைகளும் கொட்டாரங்களும்' என்னும் நூல் 2013-ல் வெளிவந்துள்ளது.

விருதுகள்

  • சிறந்த நூலுகான தமிழக அரசு விருது(2011) - அயோத்தி ராமாயணம்
நாகராஜா கோவில்

நூல்கள்

  • பிரமசக்தியம்மன் கதை (1987)
  • பிரம்மசக்தியம்மன் பிறவிகள்(1989)
  • செங்கிடாக்காறன் கதை(1994)
  • குருக்கேத்திரன் கதை(1997)
  • பார்பதியம்மன் வழிபாடு(2000)
  • அய்யா வைகுண்டர் வாழ்வும் வழிபாடும்(2003)
  • வலைவீசு காவியம்(2006)
  • நாகராஜா கோவில்(2007)
  • நீலன் சரிதம்(2008)
  • பயன்பாட்டு இலக்கணம்(2008)
  • குமரிநாட்டில் சமணம் - தொல்லியல் பார்வை(2009)
  • சமணசமய வரலாறு - குமரிநாட்டில் (2010)
  • நாகர் வரலாறு (2010)
  • அயோத்தி ராமாயணம் (2011)
  • பெண்ணரசு காவியம்(2012)
  • தம்பிமார் வரலாறு(2012)
  • குமரிநாட்டுக் கோட்டைகளும் கொட்டாரங்களும்(2013)
  • வள்ளி நாடகம்(2013)
  • குமரிநாட்டு வரலாற்று ஆவணங்கள்(2014)
  • ஆவிகள் பூதங்கள் பேய்கள் - வரலாறும் வழிபாடும்(2015)
  • நீதிவெண்பா மூலமும் உரையும்(2016)
  • குமரிநாட்டில் சமணம்: தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி(2017)
  • சிதரால் திருச்சாரணத்துமலை சமணப்பள்ளி(2018)
  • பூதங்களின் கதை(2019)
  • பாகவதப் பாரதம் - உரைநடைக் காப்பியம்(2020)
  • பாகவதப் பாரதம் (ஆராய்ச்சிப் பதிப்பு)(2021)
  • பண்பாட்டு விழுமியங்கள்(2022)

உசாத்துணை

  • முதற்சங்கு சிற்றிதழ், இதழ் - 74, செப்டம்பர் 2012.
  • முன்னுரை, நாகராஜா கோவில், சிவ. விவேகானந்தன், காவ்யா வெளியீடு, டிசம்பர்-2007.


✅Finalised Page