under review

சிவயோகமலர்

From Tamil Wiki
சிவயோகமலர்

சிவயோகமலர் (திக்கம் சிவயோகமலர்) (1950 - 2014) ஈழத்துப் பெண் எழுத்தாளர். நாவல்கள், குழந்தைக் கவிதைகள், நாடகப்பிரதிகள் எழுதினார். ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியர்

பிறப்பு, கல்வி

சிவயோகமலர் இலங்கை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, அல்வாய் மேற்கு, திக்கம் என்னும் கிராமத்தில் சின்னத்தம்பியார் கணேசு, சின்னம்மா இணையருக்கு 1950-ல் பிறந்தார். திக்கம் மெதடிஸ்த மிஷன் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் உயர்தரப் பாடசாலை, இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பட்டதாரி. பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானப் பாடத்தில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றார்.

தனிவாழ்க்கை

சிவயோகமலர் ஆசிரியராகப் பணியாற்றினார். தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் பணியாற்றி அரச அதிகாரி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். சிவயோகமலர் ஊடகவியலாளர் எஸ்.ஜே.ஜெயக்குமாரை மணந்தார். மகன் றுக்மாங்கதன்.

இலக்கிய வாழ்க்கை

சிவயோகமலர் 1980 முதல் எழுதி வருகிறார். இவரின் முதல் சிறுகதை 'மகன் தேடிய வீடு' சிந்தாமணி பத்திரிகையில் 1984-ல் வெளியானது. இவரின் சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன், சுடர்ஒளி, ஈழநாடு, தினபதி, சிந்தாமணி, சிரித்திரன், முரசொலி, ஈழுமுரசு, 'தினமுரசு', இலண்டன் தமிழ் உலகம், கற்பகம், 'அருள் ஊற்று' ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. "அடிமையின் காதலி" என்ற ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியர். குறுநாவல், நாடகம், குழந்தைக் கவிதைகள் எழுதினார்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சமூக விஞ்ஞான மொழிகள் பீடம் இவரின் சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், இலக்கியப் படைப்புக்களை ஆய்வு செய்து 'திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டது.

விருதுகள்

  • 'பாவத்தின் சுவடுகள்' சிறுகதை கலாசார சமய அலுவல்கள் அமைச்சினால் சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டது. சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதும் வழங்கப்பட்டது.
  • மோல்டே தமிழக கலைக்கலாசார மன்றம் உலகளாவிய நடத்திய நாடக எழுத்தாக்கப் போட்டியில் இவர் எழுதிய 'புலம்பெயரும் பாசங்கள்' நாடகப் பிரதி முதற்பரிசைப் பெற்றது.
  • 1997-ல் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரெஞ்சுக் கிளையினர் நடத்திய பாவலர் தெ.து. துரையப்பாபிள்ளை நினைவு அகில உலக சிறுகதைப் போட்டியில் இவரது 'பிறந்த மண்' சிறுகதை முதல் பரிசைப் பெற்றது.
  • யாழ் இலக்கிய வட்டமும் ஈழநாடு பத்திரிகையும இணைந்து நடத்திய நாவல் போட்டியில் 'கல்லுக்குள் ஈரம்' எனும் நாவல் பரிசு பெற்றது.
  • முரசொலி பத்திரிகையும் யாழ் இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவரின் 'தேட்டம்' குழந்தைக் கவிதைத் தொகுப்பு பரிசைப் பெற்றது.

மறைவு

சிவயோகமலர் 2014-ல் தன் அறுபத்தி நான்காவது வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

நாவல்
  • அடிமையின் காதலி
  • கல்லுக்குள் ஈரம்
குழந்தைக் கவிதைத் தொகுப்பு
  • தேட்டம்
நாடகப் பிரதி
  • புலம்பெயரும் பாசங்கள்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2024, 20:23:55 IST