under review

சுடர்ஒளி

From Tamil Wiki

சுடர்ஒளி(2000) இலங்கையில் கொழும்பு நகரிலிருந்து வெளிவந்த தமிழ் வார இதழ். அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு, அறிவியல், தொடர், நாவல்கள், ஆளுமைகள் பற்றிய தகவல்களுடன் இந்த பத்திரிகை 2015 வரை வெளியாகியது.

தோற்றம்

சுடர் ஒளி செப்டம்பர் 10 , 2000-ல் வாரப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டது. வெளியீட்டாளர் பதிப்பாளர் பத்திரிகைக் குழுமம். வெளியீட்டாளர் மாஸ் மீடியா சின்டிகேட் (பிரைவேட்) லிமிட்டெட்.

அச்சுறுத்தல்கள்

2002-ம் ஆண்டில் இதன் ஆசிரியராக ந. வித்தியாதரன் பொறுப்பேற்றார்.

ஜூலை 2006-ல் சுடர் ஒளி, மற்றும் தினக்குரல் ஆகிய இதழ்கள் துணை இராணுவக் குழுக்களினால் அச்சுறுத்தப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அவற்றின் விநியோகம் இடைநின்றது. மீண்டும் இம்மாவட்டங்களின் இந்த இதழ்களின் விநியோகம் தொடங்கினாலும் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

ஆசிரியர் ந. வித்தியாதரன் பெப்ரவரி 26 , 2009-ல் கொழும்பு தெகிவளையில் மரண வீடு ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது காவல்துறையினரால் ஆணை ஏதும் இல்லாமல் கைது செய்யப்பட்டுத் தாக்கப்பட்டார். பல மனித உரிமை அமைப்புகள் இவரது கைதுக்கு எதிராகக் குரல் எழுப்பின. விடுதலைப் புலிகள் 2009-ல் கொழும்பின் மீது நடத்திய வான் தாக்குதலில் இவருக்கும் பங்கிருந்ததாக அரசு குற்றம் சாட்டியது. சாட்சியங்கள் எதுவும் இல்லாததால் இவர் ஏப்ரல் 24, 2009-ல் விடுதலை செய்யப்பட்டார்.

உள்ளடக்கம்

சுடர் ஒளி இதழ் 28 பக்கங்களைக் கொண்டிருந்தது. இதழில் அரசியல், இலக்கியம், சினிமா, விளையாட்டு, அறிவியல், தொடர் ,நாவல்கள், ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் என பல வகையான ஆக்கங்கள் இடம்பெற்றன. ராசி பலன், விளையாட்டு, சிறுவர் பகுதி, குறுக்கெழுத்து, பித்தன் பதில்கள், கவிதை, அறிவியல் துணுக்குகள், உடல்நலம் மருத்துவம் சார்ந்த கட்டுரைகள், நெப்போலியன் பற்றிய வரலாற்றுத் தொடர், மருத்துவரிடம் வாசகர்களின் கேள்வி, பதில், சிறுவர் படக்கதைகள், உலக அரசியல் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. ஆன்மிகத்தொடர்கள், சாயிபாபா பற்றிய தொடர், கணக்குப் புதிர், விடுகதைகள், சர்வதேச நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. ஆங்கில அறிவியல் எழுத்தாளர் டக்ளஸ் அடம்ஸின் 'The Hitchhiker's Giude To The Galaxy' என்ற நாவலின் பாதிப்பால், தமிழில் அங்கதச் சுவையுடன் எழுதப்பட்ட அறிவியல் புனைவு 'கந்தசாமியும் கலக்சியும்' சுடர் ஒளியில் வெளிவந்தது.

உசாத்துணை

நூலகம்.ஆர்க், சுடர் ஒளி இதழ்கள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Mar-2025, 18:12:26 IST