சிவபெருமான் திருமும்மணிக்கோவை
சிவபெருமான் திருமும்மணிக்கோவை பதினொன்றாம் திருமுறையில் 24-வது திருமுறையாக இடம்பெறுகிறது.
ஆசிரியர்
சிவபெருமான் திருமும்மணிக்கோவையை இயற்றியவர் இளம்பெருமான் அடிகள்.
நூல் அமைப்பு
சிவபெருமான் திருமும்மணிக்கோவை மும்மணிக்கோவையின் இலக்கணத்திற்கேற்ப அகவல், வெண்பா, கட்டளைக்கலித் துறை என மூவகைப் பாக்களால் மாலைபோலத் தொடுக்கப்பட்டுள்ளது சிவபெருமான் திருமும்மணிக்கோவை. இந்நூல் முப்பது பாடல்களையுடையது. இறைவனை முன்னிலைப்படுத்தி உரையாடி மகிழும் நிலையிற் பாடிய பாடல்களும் இறைவனைக் கண்டு காமுற்ற தலைவியினது துயரை உரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இம்மும்மணிக் கோவையில் இடம்பெற்றுள்ளன.
ஆசிரியப்பாக்கள் சங்கப்பாடல் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளன. வெண்பாக்கள் கைக்கிளைப் பாடல்களாக உள்ளன. சங்க காலத் தமிழ்ச்சொற்கள் அதிகம் இடம்பெறுகின்றன.
பாடல் நடை
அகவற்பா
முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர். 5
எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே. 1
வெண்பா
758. மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே ? - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
கட்டளைக் கலித்துறை
இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்கு)
அடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே.
உசாத்துணை
சிவபெருமான் திருமும்மணிக்கோவை-சைவம்.ஆர்க்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jan-2025, 15:29:34 IST