under review

சின்னக் குத்தூசி

From Tamil Wiki
இரா. தியாகராஜன் (சின்னக்குத்தூசி)

சின்னக் குத்தூசி (இரா. தியாகராஜன்) (ஜனவரி 15, 1935 - மே 22, 2011) எழுத்தாளர், இதழாளர். அரசியல் விமர்சகர். திராவிட இயக்க ஆதரவாளர். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதழாசிரியராகச் செயல்பட்டார். குத்தூசி குருசாமி மீது கொண்ட ஈர்ப்பால் ‘சின்னக் குத்தூசி’ என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். திராவிட இயக்கம் சார்ந்து பல கட்டுரைகளை எழுதினார். முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருது பெற்றார்.

பிறப்பு, கல்வி

இரா. தியாகராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட சின்னக் குத்தூசி, ஜனவரி 15, 1935 அன்று, திருவாரூரில், ராமநாதன் - கமலா இணையருக்குப் பிறந்தார். திருவாரூர் கழக உயர் நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தந்தை பெரியார் ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சின்னக் குத்தூசி, பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். குன்றக்குடி அடிகளாரின் நிர்வாகத்தில் செயல்பட்ட குன்றக்குடி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். பின் இதழாளராகச் செயல்பட்டார். சின்னக் குத்தூசி, திருமணம் செய்துகொள்ளவில்லை.

சின்னக்குத்தூசி

இலக்கிய வாழ்க்கை

சின்னக் குத்தூசி, இரா. தியாகராஜன் என்ற பெயரிலும், திருவாரூர் தியாகராஜன் என்ற பெயரிலும் தாமரை, பிரசண்ட விகடன் போன்ற இதழ்களில் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார்.

முத்துச்சரம் - சின்னக்குத்தூசி நூல்

இதழியல்

சின்னக் குத்தூசி, 'மாதவி', 'தமிழ்ச் செய்தி' போன்ற இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பிற்காலத்திய 'நவசக்தி' இதழில் தலையங்க ஆசிரியராகப் பணியாற்றினார். குத்தூசி குருசாமி மீது கொண்ட ஈர்ப்பால் ’சின்னக் குத்தூசி’ என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு எழுதினார். 'முரசொலி', ‘உண்மை’ போன்ற இதழ்களில் சில காலம் பணிபுரிந்தார். 'நாத்திகம்', 'அலை ஓசை', 'எதிரொலி', 'ஜூனியர் விகடன்' போன்ற இதழ்களிலும், பிற சிற்றிதழ்களிலும் பல அரசியல் விமர்சனக் கட்டுரைகளை, அரசியல் வரலாறுகளை எழுதினார். அரசியல் அறிக்கைகள் பலவற்றைச் சரிபார்த்துச் செப்பனிட்டார்.

சின்னக் குத்தூசி கொக்கிரகுளம் சுல்தான் முகமது, காமராஜ்நகர் ஜான் ஆசிர்வாதம், தெரிந்தார்க்கினியன், ஆர்.ஓ. மஜாட்டோ, திட்டக்குடி அனீஃப் போன்ற புனைபெயர்களில் செயல்பட்டார். இளம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் பலரை ஊக்குவித்தார்.

சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதியை ‘எதிரொலி’ ஏட்டுக்காக, சின்னக் குத்தூசியும், ஞாநியும் எடுத்த பேட்டி முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அது பின்னர் ‘காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. சின்னக் குத்தூசி எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. நக்கீரன் பதிப்பகம் அவற்றை வெளியிட்டது.

அரசியல்

சின்னக் குத்தூசி, மாணவப் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈ.வெ.ரா. பெரியாரின் பற்றாளராகத் திகழ்ந்தார். பொதுவுடைமைக் கொள்கைகள் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். மணலூர் மணியம்மாளின் உதவியாளராகச் செயல்பட்டார். அவருடன் ஊர் ஊராகச் சென்று இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட புத்தகங்களை விற்பனை செய்தார். புத்தக வாசிப்பின் மூலம் அரசியல் அறிவை மேம்படுத்திக் கொண்டார். ஈ.வெ.கி. சம்பத் ’தமிழ் தேசியக் கட்சி’ தொடங்கியபோது, சின்னக் குத்தூசி அவரது ஆதரவாளராகச் செயல்பட்டார். சம்பத் காங்கிரஸை ஆதரித்தபோது, சின்னக் குத்தூசியும் அதனை ஆதரித்தார். காமராஜர் காலத்திற்குப் பின் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராகச் செயல்பட்டார்.

விருது

சின்னக் குத்தூசி, மு. கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, முரசொலி அறக்கட்டளை வழங்கிய கலைஞர் விருதைப் பெற்றுக் கொண்டார்.

மறைவு

இரா. தியாகராஜன் என்னும் சின்னக் குத்தூசி, மே 22, 2011 அன்று காலமானார்.

நினைவு

சின்னக் குத்தூசி நினைவாக ’சின்னக் குத்தூசி அறக்கட்டளை’ ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் இலக்கியப் படைப்பாளர்கள் விருதளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

இலக்கிய இடம்

சின்னக் குத்தூசி பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதியிருந்தாலும், கட்டுரையாளராகவே அறியப்படுகிறார். இதழ்களில் கூர்மையான அரசியல் விவாதக் கட்டுரைகளை எழுதினார். திராவிட இயக்கக் கொள்கைகளையும், தலைவர்களின் சித்தாந்தங்களையும் ஆதரித்து எழுதினார். மு. கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்தார். அவரை ஆதரித்தும், அவரை விமர்சித்து எழுதப்படும் கட்டுரைகளுக்கு மறுப்புக் கட்டுரைகள் எழுதியும் செயல்பட்டார். திராவிட இயக்க வரலாற்றை முழுமையாக அறிந்தவராக இருந்தார். இது குறித்து, “தமிழகத்தில் முறையான திராவிட இயக்க வரலாறு அறிந்தவர்கள் வெகு சொற்பம். சின்னக் குத்தூசி அவர்களுள் ஒருவராக இருந்தவர்” என்கிறார் பா. ராகவன்[1] .

நூல்கள்

  • புதையல்
  • கருவூலம்
  • களஞ்சியம்
  • சுரங்கம்
  • பெட்டகம்
  • கலைஞர்
  • எத்தனை மனிதர்கள்?
  • சங்கொலி
  • முத்துச்சரம்
  • வைரமாலை
  • பவளமாலை
  • பொற்குவியல்
  • பூக்கூடை
  • இடஒதுக்கீடு
  • நெருப்பாறு
  • மதுவிலக்கு
  • ராமர் பாலம் இருந்ததா? ராமாயணம் நடந்ததா?
  • காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்! (ஞானியுடன் இணைந்து எழுதிய நூல்)
  • அன்று முதல் இன்று வரை

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page