under review

சந்தனு (ஓவியர்)

From Tamil Wiki
ஓவியர் சந்தனு (படம் நன்றி: பூஞ்சோலை இதழ்)

சந்தனு (ஓவியர் சந்தனு; ஆர். சந்தான கிருஷ்ணன்) (மே, 15, 1920 - ?) ஓவியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர். 'சந்தனு ஓவியப் பயிற்சிப் பள்ளி' யைத் தொடங்கி மாணவர்களுக்கு அஞ்சல் வழியில் ஓவியம் கற்பித்தார். இதழ்களில் கேலிச்சித்திரங்களும், ஓவியங்களும் வரைந்தார்.

பிறப்பு, கல்வி

ஆர். சந்தான கிருஷ்ணன் என்னும் இயற்பெயர் கொண்ட சந்தனு, மன்னார்குடியில் மே, 15, 1920 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வி கற்றபின் ஓவியத்தில் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

சந்தனு, இதழ்கள் சிலவற்றில் ஓவியக் கலைஞராகப் பணிபுரிந்தார். பின்னர் சுதந்திர ஓவியக் கலைஞராகப் பணியாற்றினார். மணமானவர்.

இலக்கிய வாழ்க்கை

சந்தனு 'ராஜாஜி வாழ்க்கைச் சித்திரம்', 'சுதந்திர ஓவியம்', 'வேதாள உலகில் விச்சு', 'காட்டுச் சிறுவன் கண்ணன்' போன்ற சித்திரக்கதை நூல்களை எழுதினார். தான் எழுதிய சில நூல்களுக்கு முழுவதும் தானே படம் வரைந்து வெளியிட்டார்.

சந்தனு கேலிச்சித்திரம் (படம்: வெள்ளிமணி இதழ்)
துப்பறியும் சுப்புடு (படம் நன்றி: சுதேசமித்திரன் இதழ்; பசுபதிவுகள்)

ஓவிய வாழ்க்கை

சந்தனுவின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட சாவி, தான் புதிதாக ஆரம்பித்த வெள்ளிமணி இதழில் சந்தனுவுக்கு வரைய வாய்ப்பளித்தார். கேலிச்சித்திரங்கள், ஓவியங்கள், படக்கதை என அவ்விதழில் சந்தனு பங்களித்தார். தொடர்ந்து சுதேசமித்திரன்உள்ளிட்ட பல இதழ்களுக்கு ஓவியம் வரைந்தார். சுதேசமித்திரனில் சந்தனு வரைந்த 'துப்பறியும் சுப்புடு' படக்கதை வாசக வரவேற்பைப் பெற்றது. சந்தனு சில ஆண்டுகள் குமுதம் இதழில் ஓவியராகப் பணியாற்றினார். பின் சுதந்திர ஓவியக் கலைஞராகப் பல இதழ்களுக்கு ஓவியங்கள் வரைந்தார்.

இதழியல்

சந்தனு, சித்திரக் குள்ளன் என்ற ஓவிய இதழைத் தொடங்கி நடத்தினார். மலைவீடு (தொடர்கதை), 'காட்டுச் சிறுவன் கண்ணன்' (சித்திரக் கதை), 'வேதாள உலகத்தில் விச்சு' (படக்கதை), குள்ள மாமாவைக் கேளுங்கள்' என்கிற வினாவிடைப் பகுதி, அறிவுப் போட்டிகள் எனப் பல பகுதிகள் மூலம் சிறார்களிடையே வாசிப்பார்வத்தை வளர்த்தார். இவ்விதழில் இடம் பெற்ற 'காட்டுச் சிறுவன் கண்ணன்' என்னும் சித்திரக்கதை தமிழின் முதல் படக்கதையாக அறியப்படுகிறது.

ஓவியப் பயிற்சி

சந்தனு, 'சந்தனு ஓவியப் பயிற்சிப் பள்ளி' என்பதைத் தொடங்கி மாணவர்களுக்கு அஞ்சல் வழியில் ஓவியம் கற்பித்தார். நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலர் அப்பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றனர்.

மறைவு

சந்தனு எப்போது காலமானார் என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

சந்தனு கேலிச்சித்திரம், ஓவியம், படக்கதை எனப் பல களங்களில் பங்களித்தார். சித்திரக்குள்ளன் இதழ் மூலம் சிறார்களிடையே வாசிப்பார்வத்தை, எழுத்தார்வத்தை வளர்த்தார். தனது ஓவியப் பயிற்சிப் பள்ளி மூலம் பலரை ஓவியராக்கினார். சந்தனு, தமிழ் எழுத்துலகின் மூத்த ஓவியர்களுள் ஒருவராகவும், முன்னோடிச் சிறார் இதழாசிரியராகவும் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • ராஜாஜி வாழ்க்கைச் சித்திரம்
  • சுதந்திர ஓவியம்
  • காட்டுச் சிறுவன் கண்ணன்
  • வேதாள உலகில் விச்சு

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 28-Oct-2024, 10:13:45 IST