சக்தி சித்தார்த்தன்
சக்தி சித்தார்த்தன் (சித்தார்த்தன்; கு.சித்தார்த்தன்; கு.சிவசுப்பிரமணியன்) (பிறப்பு: நவம்பர் 13, 1931) கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும் சிறார்களுக்கான நூல்களையும் எழுதினார். சிறார்களுக்கான இசைப் பாடல் குறுந்தகடுகளை வெளியிட்டார். தொலைத் தொடர்புத்துறையில் பொறியாளராகப் பணியாற்றினார். சென்னை கம்பன் கழகத்தின் 'தமிழ்நிதி' விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
கு.சிவசுப்பிரமணியன் என்னும் இயற்பெயரை உடைய சக்தி சித்தார்த்தன், நவம்பர் 13, 1931 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில், என்.குப்புசாமி - மதுரம் இணையருக்குப் பிறந்தார். கடியாபட்டியில் பள்ளிக் கல்வி கற்றார். பொறியியல் கல்வி பயின்று பொறியாளர் ஆனார்.
தனி வாழ்க்ககை
சக்தி சித்தார்த்தன் திருமணமானவர். தொலைத்தொடர்புத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
இலக்கிய வாழ்க்கை
சக்தி சித்தார்த்தன் மாணவப் பருவத்தில் 'சக்தி' எனும் புனை பெயரில் கவிதைகளை எழுதினார். பின் 'சக்தி சித்தார்த்தன்' என்ற பெயரில் எழுதினார். சிறார்களுக்கான பாடல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். முதல் நாவல் 'யாதும் ஊரே'. இந்நூல் சங்க காலத் தமிழர் வாழ்வைச் சித்தரித்த நாவல். தொடர்ந்து கவிதை, சிறுகதை, நாவல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய கட்டுரை நூல்களையும், பயணக் கட்டுரை நூல்களையும் எழுதினார். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்பு என 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
சக்தி சித்தார்த்தனின் 'சமுத்திர குமாரர்கள்' வரலாற்று நாவல் ஐந்து பாகங்களையும், 2160 பக்கங்களையும் கொண்டது. அவரது குறிப்பிடத்தகுந்த நாவலாக அறியப்படுகிறது.
இதழியல்
சக்தி சித்தார்த்தன் மாணவப் பருவத்தில், 'விவேகானந்தர்' என்னும் கையெழுத்து பிரதி இதழை நடத்தினார். 'கல்பனா' மாத இதழுக்குச் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.
நாடகம்
சக்தி சித்தார்த்தன் சிறார்களுக்காகவும், பிறருக்காகவும் பல்வேறு நாடக நூல்களை எழுதினார். அவற்றுள் 'பொருத்தம்', 'வெள்ளாடு', 'இல்லாத இடமே இல்லை', 'அந்தமானும் சிந்துவும்' போன்றவை குறிப்பிடத்தகுந்தன.
அமைப்புச் செயல்பாடுகள்
சக்தி சித்தார்த்தன், மீ.சேதுராமன், 'புதுகைத் தென்றல்' மு.தர்மராஜன். தொழிற்சங்கத் தலைவர் ஜகன் உடன் இணைந்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாரதி விழாவைப் பொறுப்பேற்று நடத்தினார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
பொறுப்பு
- தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாவட்டச் செயலாளர்.
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற உறுப்பினர்
விருதுகள்
- சென்னை பாரதி கலைக்கழகம் அளித்த 'கவிமாமணி' பட்டம்
- திருக்குறள் வாழ்வியல் நெறிச்சங்கம் அளித்த 'திருக்குறள் மாமணி' விருது
- சென்னை கம்பன் கழகம் அளித்த 'தமிழ்நிதி' விருது
- 'இலக்கிய வித்தகர்' பட்டம்
மதிப்பீடு
சக்தி சித்தார்த்தன் இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் பங்களித்த எழுத்தாளர். இவரது கவிதைகளும், நாடகங்களும் பொது வாசிப்புக்குரியவை. சிறார்களுக்கான நூல்களையும், பொது வாசிப்புகுரிய நூல்களையும் எழுதிய, பெங்களூரு வாழ் எழுத்தாளராக அறியப்படுகிறார்.
நூல்கள்
சிறார் நூல்கள்
- நிலா நிலா ஓடி வா
- ஆடுவோம் பாடுவோம், அறிவியலை நாடுவோம்
- கண்ணன் உலா
கவிதைத் தொகுப்பு
- வானவில்
- காலச்சுவடுகள்
- மீண்டும் ஒரு முறை
- சிங்கமும் சிறு குயிலும் (பயணக் காப்பியம்)
- பொருநை எனும் கருணை (காப்பிய நூல்)
நாவல்கள்
- யாதும் ஊரே
- வைசாலி
- காட்டுத் தீ
- செவ்வானம்
- ஜீவன்முக்தன்
- சாம்ராட் அசோகன் (வரலாற்று நாவல்)
- சமுத்திர குமாரர்கள் (வரலாற்று நாவல் - ஐந்து பாகங்கள்)
குறுநாவல்
- விண்ணின் விளிம்பிலே
சிறுகதைத் தொகுப்பு
- ஒன்றுண்டு மானுடசாதி
- நாத தரங்கிணி
- மாளவிகா ஐ.ஏ.எஸ்.
கட்டுரை நூல்
- தொலைத் தொடர்பு அன்று இன்று இனி
- எல்லைக்கு அப்பால் (பயணக்கட்டுரை நூல்)
- ஆழிசூழ் அமெரிக்கா (பயணக்கட்டுரை நூல்)
- சுதந்திரப் பொன்னேடுகள்
- அக்னி
- இன்று காந்தியம்
நாடகம்
- பொருத்தம்
- வெள்ளாடு
- இல்லாத இடமே இல்லை
- அந்தமானும் சிந்துவும்
மொழிபெயர்ப்பு
- ராணியும் மாயவலையும் (மூலம்: ரோஹித் நாயக்)
ஆங்கில நூல்
- Global Krishna
குறுந்தகடு
- நிலா நிலா ஓடி வா (இசைப் பாடல்கள்)
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2025, 18:37:03 IST